டில்ஷான் விளாசல்: முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

295

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடந்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் பிளட்சர் (3), சார்லஸ் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சாமுவெல்ஸ் (2), கார்டர் (8) அடுத்தடுத்து வெளியேறினர். மேற்கிந்திய தீவுகள் அணி 40 ஓட்டங்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால் 50 ஓவர்கள் கொண்ட ஆட்டம் 26 ஓவராக மாற்றப்பட்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தது.

இதனால் அந்த அணி 26 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. பிராவோ (38), ரசூல் (41), அணித்தலைவர் ஹோல்டர் (36) ஓரளவு ஓட்டங்கள் குவித்தனர்.

இலங்கை அணி சார்பில், லக்மல் 3, மெண்டிஸ் 2, ஜெயசூரிய, மேத்யூஸ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 26 ஓவர்களுக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களான பெரேரா, டில்ஷான் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பெரேரா 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திரிமன்னே (17) ஓரளவு ஓட்டங்கள் எடுக்க, டில்ஷான் (59) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மேத்யூஸ் (13), குணத்திலகா (12), சிறிவர்த்தன (7) வரிசையாக ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் சிக்கலில் சிக்கியது இலங்கை.

இந்நிலையில் மெண்டிஸ் (20) சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 24.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது.

SHARE