காலில் விழுந்த விராட் கோஹ்லி! நெகிழ்ந்து போன மொகாலி ஆடுகள பராமரிப்பாளர்

297

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் செயல் மொகாலி ஆடுகள பராமரிப்பாளர் தல்ஜித் சிங்கை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவை புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.

இந்த நிலையில் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால் தான் இந்தியா தொடரை இழந்ததாக இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி அந்த மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளர் சுதிர் நாயக்கை திட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுதிர் நாயக், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள மொகாலி ஆடுகளத்தின் பராமரிப்பாளரான 73 வயது தல்ஜித் சிங்கின் பாதங்களை தொட்டு வணங்கியுள்ளார் விராட் கோஹ்லி.

கடந்த 20 வருடங்களாக தல்ஜித் சிங் தான் இந்த ஆடுகளத்தின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார்.

கோஹ்லியின் இந்த செயல் தல்ஜித் சிங்கை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இதனால் அவர் நெகிழ்ந்து போனார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் எதிர்வரும் 5ம் திகதி நடக்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.

SHARE