எனது தாடியில் 40 நரை முடிகள் வந்துள்ளது: கோஹ்லியின் சேட்டை பேட்டி

294

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த எங்களுக்கு உள்ள துருப்பு சீட்டு அஸ்வின் தான் என்று இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நாளை தொடங்குகிறது.

ஒருநாள், டி20 போட்டிகளை டோனி தலைமையிலான இந்திய அணி இழந்த நிலையில், கோஹ்லியில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி பற்றி பேசிய கோஹ்லி, “டெஸ்ட் போட்டியில் 120 சதவீத அர்பணிப்பு உணர்வோடு களமிறங்குவேன். விமர்சனங்களை பற்றி யோசித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

டெஸ்ட் போட்டிகளை பந்துவீச்சாளர்களால் தான் வென்று கொடுக்க முடியும். இதில் அஸ்வின் எங்களுக்கு துருப்பு சீட்டாக இருப்பார்.

அதே போல் ஒவ்வொரு வீரரும் தன்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க முடியும் என்ற எண்ணத்தில் தான் ஆட வேண்டும்.

மேலும், சவாலான நேரத்தில் சிறப்பாக ஆடுவது தான் எனக்கு பிடிக்கும். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்று சிறப்பாக செயல்படுவோம்.

நெல்சன் மண்டேலா- மகாத்மா காந்தி பெயரை கொண்ட இந்த தொடரில் வீரர்களுடன் மோதல் என்பது இருக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் தலைவராக மாறிய பிறகு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த கோஹ்லி, “நான் ஒரே மாதிரிதான் உள்ளேன்.

ஒரே ஒரு மாற்றம் தான் ‘எனது தாடியில், 40 நரை முடிகள் தோன்றியுள்ளது’. வேறு எந்த வகையிலும் எனக்குள் மாற்றம் ஏற்படவில்லை “என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

SHARE