இந்தியச் செய்தி இந்தியாவே திரும்பி பார்க்கும் மொடல் கிராமம்

364
கிராமம் என்றாலே குடிசை வீடுகள், செம்மண் சாலைகள், படிக்காத மனிதர்கள் தான் நமது நினைவுக்கு வருவார்கள். ஆனால் தமது எண்ணங்களை அத்தனையையும் தவிடுபொடியாக்கும் ஒரு கிராமம் தான் புன்சாரி.
குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம் தான் புன்சாரி (PUNSARI). கடந்த 2006ஆம் ஆண்டு வரை மின்சார வசதி, சரியான சாலை, பள்ளிக்கூடம் போன்றவை இல்லாமல் கஷ்டப்பட்ட இந்த கிராமம் இன்று இந்தியாவுக்கே மொடல் கிராமமாக விளங்குகிறது என்பது ஆச்சரியம் தான்.

வெறும் எட்டே ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை இந்த கிராமம் அடைந்துள்ளது. தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர், 24 மணி நேர வைபை வசதி, போக்குவரத்துக்காக பிரத்யேக பேருந்து வசதி, வீட்டுக்கு வீடு கழிப்பறைகள், பள்ளிகளில் குளிர்சாதன வசதி, சாலைகளில் 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிரா, தகவல்களை பரிமாறிக்கொள்ள 140 ஒலிப்பெருக்கிகள் என்று மலைக்க வைக்கும் ஒரு கிராமமாக புன்சாரி தற்போது விளங்குகிறது.

அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக 23 வயதில் பதவியேற்ற ஹிமான்ஷு படேல் என்பவரின் கடுமையான உழைப்பு காரணமாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு முறை சிறந்த கிராமத்துக்கான விருதை புன்சாரி கிராமம் வென்றுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புன்சாரி கிராமத்தை பார்வையிட்டு மலைத்துபோயுள்ளனர்.

இந்த கிராமத்தின் வளர்ச்சி குறித்து அறிந்துகொண்டு அதை இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில அதிகாரிகளையும் புன்சாரிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்த அபார வளர்ச்சி காரணமாக கிராமத்தை விட்டு புலம் பெயர்ந்து செல்வோர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

மேலும் வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றவர்களில் பலரும் தங்கள் பூர்வீக கிராமத்துக்கே மீண்டும் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களே தேசத்தின் முதுகெலும்பு என்ற மகாத்மா காந்தியின் வாசகத்தை பிரதிபலிக்கும் வகையில் விளங்கி வரும் புன்சாரி நிஜமாகவே ஒரு மொடல் கிராமம் தான்.punsari_village_002 punsari_village_003

SHARE