306

merkel_vow_002

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஓரணையில் சேர வேண்டும் என்ற பிரான்ஸ் நாட்டின் கோரிக்கையை ஐரோப்பிய கவுன்சில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று பாரீஸ் நகருக்கு வந்த ஏஞ்சலா மெர்க்கல் அந்நாட்டு ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டேவுடன் இணைந்து அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜேர்மன் சான்சலர், பிரான்ஸ் ராணுவத்துடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

’’தீவிரவாதிகளை விட நாம் பலமாக இருக்கிறோம். எந்த விதமான தீவிரவாதத்தையும் ராணுவத்தை கொண்டு முடக்க வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

இதன் முதல் கட்டமாக, மாலி நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 1,500 பிரான்ஸ் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், ஜேர்மனி நாடு 650 ராணுவ வீரர்களை மாலி நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் குர்து இன போராளிகளுக்கு ஜேர்மனி அரசு ஆயுதங்கள் வழங்குவதுடன் அவர்களுக்கு ராணுவ பயிற்சியும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE