நைஜீரியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் புள்ளிவிவரங்கள் கவலை தருகின்றன.

349

*

நைஜீரியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக, ‘நைஜீரியன் பிரிஸன்ச் சர்வீஸ் (என்.பி.எஸ்.)’ இணையதளத்தில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் கவலை தருகின்றன.

2014 அக்டோபர் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நைஜீரியாவில் 240 சிறைகள் உள்ளன. இவற்றில் 155 (பெரும்பாலும் தெற்குப் பகுதியில் உள்ளவை) சிறைகளில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம் உண்டு. என்.பி.எஸ். அளித்திருக்கும் புள்ளிவிவரத்தின்படி, நைஜீரியாவில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் 50,153 கைதிகளை அடைத்துவைக்க முடியும். ஆனால், இச்சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 57,121.

அதாவது, 7,000-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் கைதிகள் கூடுதலாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குளிப்பது, உணவருந்துவது போன்ற விஷயங்களில் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு நேரத்தை மாற்றி கைதிகளால் சமாளித்துக்கொள்ள முடியும். ஆனால், சிறிய இடத்தில் எப்படி ஒன்றாக உறங்க முடியும்?

பவ்ச்சி, கிராஸ் ரிவர் உள்ளிட்ட சில மாகாணங்களில் சராசரியாக 10 முதல் 13 சிறைகள் உள்ளன. பார்னோ, கட்யூனா மற்றும் யோபே மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் 15 சிறைகள் உள்ளன. அதிகச் சிறைகளைக் கொண்ட மாகாணம் அடமாவா. இங்கு 17 சிறைகள் உள்ளன. பையேல்ஸா, எகிடி போன்ற மாகாணங்களில் ஒரே ஒரு சிறைதான் இருக்கிறது. அபியா, இமோ, ஓயோ போன்ற மாகாணங்களில் இரண்டு அல்லது மூன்று சிறைகள் இருக்கின்றன.

அதிகப்படியான கைதிகளைக் கொண்ட சிறைகள் இம்மாகாணங்களில் உள்ளன: லாகோஸ் கிரிகிரி மேக்ஸிமம்(1,056), ஜோஸ்(1,150), நியூ பெனின் (1,216), மைதுகுரி(1,600) மற்றும் லாகோஸ் கிரிகிரி மீடியம் செக்யூரிட்டி (1,700).

லாகோஸில் 211 பெண் கைதிகள் கொண்ட சிறை இருக்கிறது. ஓண்டோவில் இருக்கும் சிறையில் 80 பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நைஜீரியா முழுவதும் 1,156 பெண் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் 29 பேர் மரண தண்டனைக் கைதிகள். 9 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில், முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், 50,000 பேருக்கான இடங்களில் 57,000 பேர் இருப்பதுதான். இதில் கிட்டத்தட்ட 70% பேருக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. அதாவது, நைஜீரியச் சிறைகளில் இருக்கும் கைதிகளில் மூன்றில் ஒரு பங்கினர்தான், நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மீதம் உள்ளவர்கள் உணவு, படுக்கை, இடம் போன்ற விஷயங்களில் சக கைதிகளுடன் போட்டியிட வேண்டிய நிலை. மூட்டைப்பூச்சி, கொசுக்கடி போன்ற தொந்தரவுகள் தனி.

முக்கியமான இன்னொரு பிரச்சினை உண்டு. எதிர்காலத்தில் வெளிநாடுகளுடன், குறிப்பாக – பிரிட்டனுடன் கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது.

போதை மருந்துக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் மட்டும் 16,300-க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று 2014-ல் நைஜீரியாவில் நடந்த தேசியக் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது. கனடாவில் மட்டும் 3,719 நைஜீரியர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், வெளிநாடுகளில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரியக் கைதிகள், மீண்டும் நைஜீரியாவுக்குக் கொண்டுவரப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஊழல் மலிந்து கிடக்கும் நைஜீரியாவில் இதுபோன்ற விஷயங்களுக்கு எப்படித் தீர்வு காண்பது?

 

SHARE