இந்திய அரசை ஏமாற்ற முயன்றால் பாரதூரமான விளைவுகள் வரும்! எச்சரிக்கிறார் ஜெஹான் பெரேரா

524
கடந்த காலங்களில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை போல மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசையும் ஏமாற்ற கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் அரசுக்குக் கொழும்பு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. பின்னர் அவற்றை நிறைவேற்றவில்லை. அது போன்றே தற்போதைய மோடி அரசையும் ஏமாற்ற முயன்றால் விளைவுகள் நிச்சயம் பாரதூரமானதாக இருக்கும் என்றார் அவர்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்று, நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அண்மையில் கூறியமை ஜெனிவாவில் எதிர் காலத்தில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அதிலுள்ள பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாது எனக் கூறியுள்ளமையானது அடுத்த வருட ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியாவின் ஆதரவு கிடைக்கப்பெறாமல் போகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்திய பா.ஜ.க. அரசு நன்கு அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இலங்கையிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அது அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் முக்கிய பிரச்சினைகளில் அதன் தலையீடு நிச்சயமாக இருந்துகொண்டே இருக்கும்.

மோடி அரசு காங்கிரஸ் அரசைப்போல பலவீனமானதல்ல. அப்படி இருந்தாலும் காங்கிரஸ் அரசும் இங்குள்ள பிரச்சினைகள் குறித்து அழுத்தம் கொடுத்தே வந்தது.

மோடி பலம் மிக்க ஒருவர் என்றே அவரை இந்தியர்கள் பிரதமராகத் தெரிவு செய்துள்ளனர். ஆகவே, காங்கிரஸ் அரசிடம் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு ஏமாற்றியதைப் போல மோடி அரசிடமும் செய்துவிடலாம் என இலங்கை அரசு நினைத்தேனும் பார்க்கக்கூடாது.

பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருப்பதற்கு இந்திய அரசு உடனடியாகப் பதில் எதனையும் வழங்காது. ஆனால், இதன் பின்விளைவாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்காமல் போகும் வாய்ப்புள்ளது.

இலங்கை அரசு, பா.ஜ.கவை எளிதாக எடைபோடாது சற்று அவதானமாகவே செயற்பட வேண்டும் என்றார்.

 

SHARE