மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற பலம்பொருந்திய நாடு உதவியது: ரஞ்சன் ராமநாயக்க

300

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணின் தண்டனையை குறைத்துக் கொள்வதற்கு, பலம்பொருந்திய நாடு ஒன்று உதவியதாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தகாத உறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இலங்கைப் பணிப் பெண்ணின் தண்டனை குறைக்கப்பட்டதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.

உலக நாடுகளுடன் தற்போதைய அரசாங்கம் நட்புறவுடன் பழகி வருகின்றது.

பலம்பொருந்திய நாடு ஒன்றின் ஊடாக சவூதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே குறித்த பெண் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசான நாபீக்கை காப்பாற்றவும் இந்த வழிமுறையை பின்பற்றியிருந்தால், அவரையும் காப்பாற்றியிருக்க முடியும்.

நாடு ஒன்று சட்டத்தை பின்பற்றுமாயின் அந்த நாட்டுக்கு நன்மரியாதை இருக்கும்.

மரபுக்கு புறம்பான வழிகளைப் பின்பற்றியே குறித்த பெண் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். எனவே என்ன முறை என்பது பற்றி கூறுவது பொருத்தமாக அமையாது.

எந்த நாட்டைப் பயன்படுத்தி இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது பற்றி கூற முடியாது.

அவ்வாறு கூறினால் வேறும் ஒர் சந்தர்ப்பத்தில் அந்த உதவியை மீளவும் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனினும் மனிதாபிமான, ஜனநயாக வழிமுறைகளே பின்பற்றப்பட்டுள்ளன.

பலம்பொருந்திய நாடுகளுடன் மஹிந்த நல்ல உறவினைப் பேணியிருந்தால் ரிசானாவை விடுதலை செய்திருக்கலாம் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதிவெலவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE