ஈரானுடன் இராஜாங்க உறவுகளை துண்டித்த சவுதி அரேபியா: அதிகாரிகள் வெளியேறவும் உத்தரவு

286
ஈரானில் உள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக அந்த நாட்டினுடனான இராஜாங்க உறவுகளை துண்டிப்பதாக வெளி விவகாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தை பெரும் கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது மட்டுமின்றி, அங்குள்ள பொருட்களை சூறையாடவும் செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சவுதி அரசு, உடனடியாக கண்டனம் தெரிவித்ததுடன், தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய ஈரான் அரசுடன் இனி இராஜாங்க உறவுகளை பேணுவதில்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஈரான் நாட்டின் இராஜாங்க அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேர கால அவகாசத்தை சவுதி அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2-ஆம் திகதி தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றங்களுக்காக இஸ்லாமிய மதகுரு உள்ளிட்ட 47 கைதிகளின் தலையை துண்டித்து சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட இந்த கைதிகள், பல்வேறு தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சவுதியின் இச்செயல் அந்த அரசை கவிழச்செய்யும் என்று ஈராக்கின் முன்னாள் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி தூதரகத்தை தாக்கி தீ வைத்த கலவரக்காரர்கள் என சந்தேகிக்கும் 40 பேரை கைது செய்துள்ள ஈரான் அரசு, தூதரகம் தாக்கப்பட்டுள்ளது நியாயமற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளது.

சவுதியின் மரண தண்டனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளிலும் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

SHARE