வளர்ப்பு நாய்களை காப்பாற்ற உயிரை விட்ட பெண் – கலிபோர்னியாவில் ஒரு துயர சம்பவம்

276
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்ப்பு நாய்களை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Minkler பகுதியில் குடியிருந்து வருபவர் 48 வயதான Laura Doud.

வளர்ப்பு பிராணிகள் மீது அதீத அக்கறைகொண்ட இவர் தமது வீட்டில் சில நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, நள்ளிரவு கடந்த வேளையில் அவர் தங்கியிருந்த மொபைல் வீடு திடீரென்று தீபிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து அவசரப்பிரிவுக்கு தொடர்பு கொண்ட அவர், தமது செல்லப்பிராணிகள் அனைத்தும் கொழுந்துவிட்டெரியும் வீட்டினுள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த அவசரப்பிரிவினர், செல்லப்பிராணிகளை காப்பாற்றும் நோக்கில் துரித நடவடிக்கைகள் எதுவும் மீட்புப்படையினர் வரும்வரை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் லாராவுடன் இணைந்து தீபிடித்து எரியும் வீட்டினுள் சென்று நாய்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

வீட்டின் உள்ளறைகளில் சென்ற லாராவால் அங்கிருந்து மீண்டு வரமுடியாமல் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

ஆனால் அவரது வீட்டில் நெருப்பு பற்றிக்கொண்ட உடனேயே செல்லப்பிராணிகள் அனைத்தும் பத்திரமாக வெளியேறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், லாராவின் வீடு தீபிடித்தது குறித்து விசாரிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE