நரகத்திற்கு பயணம் செய்தேன்! விவரிக்கும் பெண்மணி

295
ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரான்ஸ் நாட்டு பெண், அந்த அமைப்பில் இருந்து தப்பிய பின்னர் அங்கு நடைபெற்றவற்றை ‘நரகத்திற்கு ஒரு பயணம்” என்ற பெயரில் விவரித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Sophie Kasiki (34) என்ற பெண்மணி, ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக, இஸ்தான்புல்லில் உள்ள அனாதை இல்லத்தில் பணிபுரிய செல்கிறேன் என, தனது கணவரிடம் பொய்கூறிவிட்டு, தனது நான்கு வயது ஆண்குழந்தையுடன் துருக்கி வழியாக சிரியா நோக்கி பயணித்துள்ளார்.

ஒருவழியாக ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பின்னர் அங்கு, மகப்பேறு அமைப்பில் இவர் பணியமர்த்தப்பட்டார்.

ஆனால், நாளடைவில் அங்கு நடக்கும் கொடுமைகளை பார்த்த இவர் அங்கிருந்து சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார். மேலும், அவரின் கணவரிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

ஆனால், இங்கிருந்து தப்பித்துச்செல்ல முயற்சி செய்தால் கல்லால் அடித்து கொலை செய்துவிடும் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் இவரோ, எனது குழந்தையை வைத்துக்கொண்டு என்னால் தனியாக இருக்கமுடியாது, எனது குழந்தை அவனது தந்தையை பார்க்கவேண்டும் என்று அவர்களிடம் முறையிட்டுள்ளார்.

இவர் முறையிட்ட அடுத்த நாள், அங்கு வந்த பிரெஞ்சு நபர் ஒருவர், அப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிட்டுள்ளார், பின்னர் இருவரையும் இழுத்துச்சென்று ஐ.எஸ் தீவிரவாதிகளின் சிறையில் அடைத்துள்ளார். அங்கு ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். மேலும் அக்குழந்தைகள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சிகளை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து அச்சத்தில் உறைந்துபோனார்.

பின்னர் அங்கிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இவர் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையின் கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட இவர், ஒரு சிரிய குடும்பத்தின் உதவியுடன், மோட்டார்பைக்கில் பயணித்து துருக்கி எல்லையை அடைந்துள்ளார்.

பின்னர் ஒருவழியாக பிரான்ஸ் அடைந்தபோது, விசாரணையின் பெயரில் பிரான்ஸ் அதிகாரிகள் இவரை 2 மாதங்கள் சிறையில் அடைத்தனர்.

விசாரணை முடிந்த பின்னர், தற்போது மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும் இவர், மூளைச்சலவை செய்யப்பட்டு அந்த இயக்கத்தில் நான் சேர்ந்தேன்.

ஆனால், இனி அப்படி நடக்கக்கூடாது என்னைப்போன்று அந்த இயக்கத்தில் சேரவிருக்கும் பிறபெண்களை நான் கண்டிப்பாக தடுத்து அங்கு செல்லாதீர்கள் என்று கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு செயலை செய்த எனக்கு குற்றணர்ச்சியாக உள்ளது, என்னையே நான் வெறுக்கிறேன், இது ஒரு “நரகமான பயணமாக” இருந்தது என்று மனவேதனையடைந்துள்ளார்.

ஆனால், குழந்தையுடன் இவர் சென்றதால், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் இவர் தண்டனை அனுபவிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கோ நாட்டை பிறப்பிடமாக கொண்ட இவர், பிரான்சில், புலம்பெயர்ந்தவர்களுக்கான உதவு சமூக சேவையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE