இன்ஸ்பெக்டருக்கு காதல் கடிதம் அனுப்பிய கவிதா

387

புகார் கடிதம் கொடுத்தும் அதைப் பெற்றுக் கொள்ளாத காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு, காதல் கடிதம் கொடுத்துப் பார்க்கிறேன்.. இதையாவது நிராகரிக்க மாட்டீர்கள் என்று சட்டக்கல்லூரி மாணவி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு, கடைநிலை ஊழியன் என்ற பெயரில் ஒருவர் பதில் அளித்துள்ளார்.

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. காதல் கடிதம் என்ற ஸ்வீட் தடவி, கசப்பு மருந்தாக கவிதா என்ற பெயரில் எழுதியுள்ள அந்தக் கடிதத்தின் விவரம் இதுதான்.

காவல் துறை ஆய்வாளர் திரு.குணவருமன் அவர்களுக்கு சட்டக் கல்லூரி மாணவி கவிதா எழுதும் காதல் கடிதம் அன்புள்ள திரு. குணவருமன் அவர்களே. கடந்த 4 நாட்களாக முகநூல் மற்றும் வாட்ச்சப்புகளில் பரவி வரும் 3 இளைஞர்கள் அதிமுகவில் சட்டத்திற்கு புறம்பாக பேனர்கள் அகற்றும் வீடியோவை நானும் பார்த்தேன். அதைப் பார்க்கும்போது, என் மனத்திற்குள் இருந்ததை அவர்கள் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு பெண் என்பதால் இதை போல செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் இருந்தது. அவர்களின் நியாயமான கோபத்திற்கு தாங்கள் அவர்கள் முறைப்படி அளித்த புகாரை வாங்க மறுத்ததே காரணம் என்று செய்திகள் வாயிலாக தெரியவந்தது. பொது மக்கள் தரும் புகாரை வாங்கவே நீங்கள் உள்ளீர்கள். அப்படியிருக்க, புகார் கடிதம் வாங்க மறுக்கும் உங்களுக்கு காதல் கொடுத்து பார்க்கலாம் என்று முடிவு எடுத்து இதை எழுதுகிறேன்.

மக்களுக்காக வேலை செய்வதை விட்டு விட்டு ஆளுங்கட்சிக்கு அடிமையானதை நினைத்து எனக்கும் உங்கள் மேல் காதல் வந்துவிட்டது. புகார் கடிதத்தை நிராகரித்தது போல் என் காதல் கடிதத்தையும் நிராகரிக்க மாட்டீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் கவிதா கவிதா எழுதிய காதல் கடிதம் வாட்ஸ் அப்பில் வைரலாக உடனே பதில் எழுதியுள்ளார் காவல்துறையில் பணிபுரியும் ஒரு கடைநிலை ஊழியர்.

கவிதாவுக்கு காவல்துறை சார்பாக கடைநிலை ஊழியர் ஒருவர் எழுதிய அந்த கடிதம், இப்படி நீள்கிறது… “சட்டக்கல்லூரி மாணவி கவிதா அவர்களுக்கு, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடின்னு தெரியும் ஆனா 1) பொதுஜனம், 1) அரசு, 3) அரசியல்வாதி, 4) ஊடகம்ன்னு நாலுபக்கமும் இடிவாங்கும் காவல் துறையின் ஒரு பிரிவில் பணிபுரியும் கடை நிலை ஊழியனின் வணக்கங்கள்.

நீங்களோ, நானோ பிறக்காத 1952 ம் ஆண்டில் காவல் துறையில் நுழைந்து, 1970-ம் ஆண்டுகளில் காவல்துறையில் போலீஸ் ஐ.ஜி,யாக பணியாற்றியவர் எப்.வி.அருள். கண்ணியத்திற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்று, தமிழக போலீஸ் வரலாற்றில், தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்.

அவர் பணியாற்றிய காலகட்டத்தில் சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும், கொஞ்சமும் தயங்காது அவர்களை கைது செய்தார்.

முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும், அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை, அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி, திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.

இப்போ உள்ள காலத்துல லோக்கல் கவுன்சிலர்கிட்ட கூட இந்த நேர்மையான குணத்தை காணமுடியாது நீங்கள் படிக்கும் சட்டக்கல்லூரியையே எடுத்துக் கொள்வோம். உங்கள் கல்லூரி முதல்வர் சரியில்லை என்றால், போராசிரியரும் அலட்சியமாகதான் பாடம் எடுப்பார். உங்களுக்கு சொல்லி தரும் பேராசிரியர் சரியில்லை என்றால், உங்கள் சட்டப்படிப்பின் தரம் எப்படி இருக்கும்?

‘மேயற மாட்ட நக்கற மாடு கெடுத்த மாதிரி’ னு ஒரு பழமொழி இருக்கிறது தெரியுமுனு நெனைக்கறேன். ஒரு இன்ஸ்பெக்டர், நேர்மையா ஒரு வழக்கு போணும்னா எத்தனை இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா? ஒன்றியத்துல இருந்து மாவட்டம் வரை, கவுன்சிலர்ல இருந்து எம்.எல்.ஏ. வரை கேஸ் போடாதீங்கன்னுவாங்க, இன்னொரு டிரான்ஸ்பர்க்கு குடும்பம் தாங்காதுடான்னு குடும்பத்தை நெனைச்சு கேஸ் போடாம விட்டா, பாதிக்கப்பட்டவங்க கண்ணீரோட கொடுக்கற சாபம் ஒரு பக்கம், நேர்மையா நடவடிக்கை எடுத்து கேஸ் போட்டா டிரான்ஸ்பர்ன்னு ஒரு பக்கம்.

மரியாதைக்குரிய காவல்துறை பணியை, நாய் பொழப்புடான்னு சலிச்சுக்க வச்ச பெருமை பொதுமக்களான உங்களை போன்றவர்களையே சேரும். நியாயப்படி உங்க லவ் லட்டரை யாருக்கு கொடுக்கணும் தெரியுமா ?

குவாட்டருக்கும், கோழிபிரியாணிக்கும், சேலைக்கும், ஆயிரம் ஐநூறு பணத்துக்கும் கடைசில லட்டுல வச்சு கொடுக்கற, நக்கினால் கரையும் தங்க மூக்குத்திக்கும் ஆசைபட்டு, யாருக்கு ஓட்டு போடுறோம், நல்லவரா, கெட்டவரா ஆள் எப்படி இரண்டாவது தடவ எலக்சன்ல நிக்கிறாரே முத தடவ நின்னு என்ன கிழிச்சார்ன்னு யோசிக்காம காசுக்கும், இலவசத்துக்கும் வித்தீங்களே உங்க ஓட்ட மக்கள் பிரதிநிதின்னு ஒருத்தருக்கு, அவருக்கு கொடுக்கணும். கடைசியா… பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.

-639 -குறள் பொருள்: தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட, எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்” என்று முடிகிறது அந்த கடிதம். இன்ஸ்பெக்டருக்கு மாணவி காதல் கடிதம் எழுதியதும்… அதற்கு பதிலாக காவல்துறை கடைநிலை ஊழியர் பதிலடி எழுதியதும்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

love-letter

 

SHARE