இலங்கை குடும்பம் நாடு கடத்தலுக்கு எதிராக திரண்ட அவுஸ்திரேலிய மக்கள்

288
அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவிலுள்ள பலராட்டில் வாழும் இலங்கை தமிழ் குடும்பமொன்றை நாடுகடத்துவதற்கு எடுத்த அவுஸ்திரேலிய அரசின் முடிவுக்கு எதிராக அந் நாட்டு மக்கள் பலர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் குடும்பத்தை நாடுகடத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கான இறுதிமுயற்சியின் ஓருபகுதியாக பலராட் நகரைசேர்ந்த 300ற்கும் மேற்பட்டவர்கள் அல்பிரட்டீகின்பிளேஸ் என்ற இடத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நீலவண்ணன் பரமநாதனும் அவரது மனைவி  சுகந்தினியும் 2008ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை அங்கிருந்து தப்பியோடினர்.

2012இல் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய அவர்கள் பின்னர் பலராட்டில் குடியேறினர். இந்த தம்பதியினரிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பட்டால் அவர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாதநிலையிலேயே அவர்கள் இன்றுவரை உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இலங்கை குடும்பத்திற்காக தங்களது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக இடம்பெற்றது என அதனை ஏற்பாடு செய்தவரும் அகதிகளிற்காக குரல் கொடுப்பவருமான கத்மோர்ட்டன் தெரிவித்தார்.

விக்டோரியாவை சேர்ந்த குழந்தைகள் பெண்கள் குடும்பத்தவர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் அவர்கள் குறிப்பிட்ட இலங்கை குடும்பம் பாதுகாப்பாக இருக்கும்  என்ற உத்தரவாதத்தை கோரினர் என அந்த பெண்மணி தெரிவித்தார்.

இலங்கை தமிழ் குடும்பத்தின் நிலை மனதை வருத்துவதாகவுள்ளது என குறிப்பிட்ட பலராட்டின் கவுன்சிலர் பெலின்டாகோட்ஸ், இங்கு சமூகசேவையில் இவர்கள் ஈடுபட்டனர், அவர்களை அறிந்தவர்களிற்கு அவர்களை மிகவும் பிடிக்கும் அதன்காரணமாகவே மக்கள் ஒன்றுகூடி தங்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர் என தெரிவித்தார்.

குறிப்பிட்ட குடும்பம் இலங்கைக்கு பலவந்தமாக அனுப்பபட்டால் அவர்களது இரு பிள்ளைகள் வெளிநாட்டில் பிறந்துள்ளதால் இலங்கையில் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீலவண்ணன் குடும்பத்தினர் ஆஸியில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

அவர்கள் தாங்கள் எந்தநேரத்திலும் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் கருணையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இதுவென தெரிவிக்கும் அரசசார்பற்ற அமைபொன்றின் கத்தேபொன்ட், அரசாங்கம் ஆபத்தான நிலையில் உள்ள மக்களை இவ்வாறு நடத்துமானால் அது முழு சமூகத்தின் மீதும் என்னதாக்கத்தை ஏற்படுத்தும் என கேள்விஎழுப்பியுள்ளார்.

கடந்த வருடம் இக்குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கவிடுமாறு கோரி 2000ற்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு மனுதாக்கல் செய்திருந்தனர்.

அகதிகளிற்கான கிராம அவுஸ்திரேலியர்கள் என்ற அமைப்பின் நிதி மற்றும் உணவிலேயே இந்த குடும்பம் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரசாங்கம் இந்தகுடும்பம் குறித்து ஆராய்ந்ததாகவும், ஆனால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான வழிவகைள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாகவும் குடிவரவுதுறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

SHARE