ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி….

365

 

ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம்ltte-pongal-3
அறுவடை முடிந்து அரிசியாகி
வாடிய வயிறாய் குளிரவைக்கும்
வளமான தைப்பொங்கல் நாளிதடி

முத்தான நெல்லின் மணிகளோடு
முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும்
சத்தான பயறும் கலந்தவிந்த
சர்க்கரைப் பொங்கலாய்
வாழ்வினிக்கும்

பச்சை அரிசி பால் பொங்கிடட்டும்
பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும்
அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில்
ஆதார பொங்கலோ பொங்கிடட்டும்

ஓடிடும் காலங்கள் ஓடிடட்டும்
ஒன்றுமில்லா நிலை மாறிடட்டும்
தேடிய செல்வங்கள் சேர்ந்திடட்டும்
தமிழ் தேசம் மகிழ்வினில் ஆடிடட்டும்

ஆண்டுக்கொருமுறை வாற பொங்கல்
அடுத்த ஆண்டினில் வரும் பொழுது
மீண்டும் எம்மை நாங்கள் ஆளுகின்ற
மேன்மையுறு நாளாய் தோன்றிடட்டும்

வீட்டுக்கு வீடு நாம் பொங்க்கிடலாம்
வெற்றி விழாவாகப் பொங்க்கிடலாம்
நாட்டு விடுதலை கிட்டியதால்
நமக்கது சுதந்திரப் பொங்கலடி

மாமனிதர் ‘கவிஞர்’ நாவண்ணன்.
எரிமலை (தை 2000)

**
தைத்திங்கள் மலரட்டும்

‘தைத்திங்கள் மலரட்டும்’
வதை செய்தோர் காலம் போய்
விதை விதைக்கும் காலத்தை
கதையாகத்தந்தான் காண் கரிகாலன்
கவிதை சொல்லும் தைத்திங்கள் கனிகிறது.

திக்கெட்டும் புகழ் பரப்பி
திசை எங்கும் தமிழ் பரப்பி
கொட்டட்டும் போர்ப்பரணி வரலாறு
திகைக்கட்டும் சிங்களத்தின் அகராதி.

காலம் ஒரு பதில் சொல்லும்
கரிகாலன் சேனை விடையளிக்கும்
புதியதொரு வரலாறு உருவாகும்
புதிய தைப்பொங்கலுடன் உறவாடும்.

ஏருழவர் தொழிலாளர் சிற்பிகளின்
தேரூர்ந்த சிறப்புக்களைச் சிதைத்திருந்த
கொடூரத்தின் கும்பல்களை குதறிவிட்டோம்
கொஞ்சு தமிழ்க் கோலத் தை நீ வாழி.

கிராமியத்துப் படையணிகள் கிளம்பட்டும்
கிறுக்கழிக்க எல்லைப்படை விரையட்டும்
களமாடும் புலிச்சேனை தளைக்கட்டும்
களங்க மற்ற தைத்திங்கள் மலரட்டும்.

போர் ஆண்டு பூரணமாய் பொலியட்டும்
புகுந்து நின்று போர் முடிக்க இணையட்டும்
வீட்டிற்கொரு விடுதலைத் தீ கிளம்பட்டும்
விரைவான சுதந்திரமாய் மலரட்டும்.

கவிஞர் செவ்வந்தி மகாலிங்கம்.

SHARE