நெருங்குகிறது சட்டப்பேரவைத் தேர்தல்: சாதகமான தொகுதிகளை தேடும் தலைவர்கள்

310

 

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தங்களுக்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் முக்கியத் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அட்டவணை பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, கூட்டணி அமைக்கும் முயற்சியில் முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாக வும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள் ளன. கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல் வரும் அதிமுக பொதுச்செய லாளருமான ஜெயலலிதா, ‘சூழ்நிலைக்கேற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்’ என தெரிவித்தார்.

அதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க முயற்சித்து வரும் திமுக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணி மற்றும் பாஜக தலைவர்களும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

கூட்டணி பேச்சுக்கள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர் கள் தாங்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கட்சியினரிடமும், நண்பர் களிடமும், பத்திரிகையாளர்களிட மும் கருத்து கேட்டு வருகின்றனர்.

தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் தங்களது தொகுதியில் ஓரிரு நாள்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க முடியும். எனவே, எளிதாக வெற்றி பெறும் தொகுதியில் போட்டியிடவே அவர்கள் விரும்புகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா:

முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 தேர்தலில் ரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். சொத்துக்குவிப்பு வழக்கில் பதவியை இழந்த பிறகு, மேல்முறையீட்டில் விடுதலை பெற்று, சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட அவர், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆனால் மழை, வெள்ளத்தால் சென்னை மாநகரில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சென்னைக்கு வெளியே தென்மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிமுகவினரிடம் உள்ளது.

கருணாநிதி:

பெரும்பாலும் சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, கடந்த தேர்தலில் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். சொந்த தொகுதி என்பதால் மீண்டும் அங்கேயே போட்டியிடுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்த்:

2006-ல் விருத் தாசலம், 2011-ல் ரிஷிவந்தியம் தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வென்றார். தனது ரசிகர் மன்றங்கள் அதிகமாக இருப்பதால் இந்த தொகுதிகளை தேர்வு செய்த அவர், மீண்டும் ரிஷிவந்தியம் அல்லது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

வைகோ:

தொண்டர்களின் விருப்பத்துக்கேற்ப வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி யிட இருப்பதாக கடந்த 8-ம் தேதி கிருஷ்ணகிரியில் செய்தி யாளர்களிடம் மதிமுக பொதுச்செய லாளர் வைகோ தெரிவித்தார். எனவே, தென்மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும், தொகுதியை அடை யாளம் காணும் பணியை அவர் தொடங்கியிருப்ப தாகவும் கூறப்படுகிறது.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்போது எம்.பி.யாக இருப்பதால் அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர் கள் எம்.பி.யாக இருந்தவர்கள் என்பதால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைந்தால், அதுவும் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டால் போட்டியிடுவது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் முடிவு செய்துள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், அங்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளரை நிறுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது.

பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், தனது சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரிலும், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

SHARE