3 மாணவிகள் தற்கொலை: அரசியல் பிரமுகர் கைதாகிறார்

290

சின்னசேலம் அருகே உள்ள தனியார் சித்தமருத்துவ கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிசா, பிரியங்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்து உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கல்லூரி தாளாளர் வாசுகி, அவருடைய கணவர் சுப்பிரமணியன், மகன் சுவாகித் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் கலாநிதி, சுவாகித்வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாசுகி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கல்லூரி தாளாளர் தங்களை கொடுமைப்படுத்தியதாக மாணவிகள் புகார் கூறினார்கள்.

இந்த கொடுமைகளுக்கு உடந்தையாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆதிதிராவிட புரட்சிக் கழகத்தின் தலைவர் பெரு.வெங்கடேசன் இருந்ததாகவும் மாணவிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

பெரு.வெங்கடேசன் கல்லூரி நிர்வாகி போல எப்போதும் கல்லூரியிலேயே இருப்பது வழக்கம். அவர் தான் மாணவ– மாணவிகளையும், பணத்தை திருப்பி கேட்டு வரும் பெற்றோர்களையும் மிரட்டியதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் மீதும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது பெரு.வெங்கடேசன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருகிறார்.

சென்னையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கும் பெரு.வெங்கடேசன் நெருக்கமானவராக இருந்து வருகிறார். அந்த காங்கிரஸ் பிரமுகருக்கு சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அங்கு பெரு.வெங்கடேசன் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து உள்ளனர்.

பெரு.வெங்கடேசனை கைது செய்தால் மாணவிகள் சாவு பின்னணி தொடர்பாக முழு விவரங்களும் தெரியவரும் என போலீசார் கருதுகிறார்கள்.

கோர்ட்டில் சரண் அடைந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தாளாளர் வாசுகியையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்த மருத்துவக்கல்லூரிக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் மிகவும் ஆதரவாக செயல்பட்டுள்ளார். பெரும்பாலான நேரத்தில் இந்த அதிகாரி கல்லூரியில் தான் இருப்பார். யோகாசனம் கற்றுக்கொள்வதற்காக கல்லூரிக்கு வந்து இருப்பதாக அவர் கூறுவார்.

கல்லூரி மீது புகார்கள் வந்தாலும், போலீசுக்கு வழக்குகள் வந்தாலும் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்வது இவரது வேலை. இதனால் தான் கல்லூரிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த போதும் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

6 மாதத்திற்கு முன்பு இந்த அதிகாரி பதவி ஓய்வு பெற்று விட்டார். கல்லூரியில் நடந்த தவறு தொடர்பாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள்ளக் குறிச்சியை சேர்ந்த சேவை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே அவர் மீது நடவடிக்கை பாயுமா என்று தெரியவில்லை.

இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகி சுப்பிரமணியும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். உடல் நல கோளாறு காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதால் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் 5–வது குற்றவாளியாக அரசியல் பிரமுகர் பெரு.வெங்கடேசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர் நேற்று சின்னசேலம் வந்து விசாரணை நடத்தினார். அப்போது வார்டன் கோடீஸ்வரி, ஊழியர்கள் லட்சுமி, சுமதி ஆகியோரிடம் அவர் நீண்ட நேரம் விசாரித்தார். இவர்கள் 3 பேரும் கைது ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE