3 மாணவிகள் மரணம் திட்டமிட்டு நடந்த கொலை – எஸ்.வி.எஸ்.கல்லூரி தாளாளர் வாசுகி வாக்குமூலம்

307
எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம் திட்டமிட்ட கொலை என்று அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி- சேலம் சாலையில் உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லுரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும்,கல்வி பயில எதுவாக  அடிப்படை வசதிகள் அமைத்துத் தரப்படவில்லை என்றும் கூறி கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள்.அதில் எந்தப் பயனும் இல்லை.

இந்நிலையில் எஸ்.வி.எஸ். கல்லூரியின் மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 பேர் கடந்த 24ம் தேதி மாலை கல்லூரியின் எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த 3 பேரும் அடித்துக்  கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில்  புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,எஸ்.வி.எஸ். கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி இவர்களின்  மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் புழல் சிறையில் வைக்கவும், 28ம்  தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வாசுகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்பு வாசுகியை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதியிடம் வாசுகி அளித்த வாக்குமூலத்தில்,

இந்த வழக்கில் போலீசார் என்னை வேண்டும் என்றே சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இறந்த மாணவிகள் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது கிடையாது.

கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தனர். எங்கள் கல்லூரியை மூடி காட்டுகிறேன் என போலீஸ்காரர் ஒருவர் சபதமிட்டார். 3 மாணவிகள் கைகளை ஒன்றாக கட்டிக் கொண்டு, எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?

திட்டமிட்டு, 3 மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக போலீசார் திசை திருப்பி உள்ளனர். இதில், தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அரைமணி நேரம் ஒதுக்கினால் அனைத்து ஆதாரங்களையும் அளிக்கிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீஸ் விசாரணையில் தகவல்கள் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்று வாசுகி மனு கொடுத்தார். ஆனால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர் வாசுகி அங்கிருந்து கடலூர் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். இன்று மதியம் மீண்டும் அவர் மீண்டும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதையொட்டி நீதிமன்றத்தில் போலீஸ்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் வாசுகி விசாரிக்கப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ மாணவி மோனிஷாவின்  உடல் மறு பிரேத பரிசோதனை

மருத்துவ மாணவி மோனிஷாவின் உடல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

சித்த மருத்துவ கல்லூரி

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரியில் படித்துவந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந்தேதி கல்லூரிக்கு  அருகமையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக  பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் மாணவிகளின் இறப்பில்  சந்தேகம் இருப்பதாக கூறி, அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சரண்யா, பிரியங்கா ஆகியோரது உடல்களை அவர்களது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.

தந்தை வழக்கு

மோனிஷாவின் தந்தை தமிழரசன், எனது மகள் உடலை சென்னை அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்தார்.

மோனிஷாவின் உடலை சென்னையில் உள்ள ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் மறு பிரேதபரிசோதனை செய்ய அனுப்பி வைக்கும்படி நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

அதன்படி மோனிஷாவின் உடல் விழுப்புரத்தில் இருந்து அம்புலன்ஸ் மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் காலை 10.55 மணியளவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அம்புலன்சில் மோனிஷாவின் தந்தை தமிழரசன் உடன் சென்றார்.

வீடியோவில் பதிவு

நேற்று பிற்பகல் 2 மணிக்கு மோனிஷாவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  வந்து சேர்ந்தது. மருத்துவமனை  உடற்கூறியல் துறை ஆய்வரங்கத்தில் மாணவியின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. தடயவியல்-உடற்கூறியல் துறைத்தலைவர் டாக்டர் செல்வக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் இந்த பிரேத பரிசோதனையை நடத்தினர்.

மனுதாரர் தரப்பில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தடவியல் துறைத்தலைவர் சம்பத்குமார் பங்கேற்றார். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து மாலை 4.15 மணிக்கு மோனிஷாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திட்டமிட்ட கொலை

மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறும்போது, ‘‘இது திட்டமிட்ட கொலை. இதுகுறித்து உண்மையை வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டுமானால் உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

மனுதாரர் தரப்பு வக்கீல் பார்த்திபன் கூறும்போது, ‘மாணவிகள் 3 பேருக்கும் ஒரே மாதிரி கன்னம் மற்றும் பின்பக்க தலையில் காயம் உள்ளது. இதனைப் பார்க்கும்போது இது நிச்சயமாக தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை’ என்றார்.

எர்ணாவூரில் அடக்கம்

மோனிஷாவின் உடல் அவரது சொந்த ஊரான எர்ணாவூருக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சக மாணவிகள், ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏக்கள் கே.குப்பன் (அ.தி.மு.க.), அ.சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சந்திரமோகன், சி.எச்.சேகர் (தே.மு.தி.க.), முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, தி.மு.க. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மோனிஷாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எர்ணாவூர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

மோனிஷாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக அவருடன் படித்த 20 மாணவிகள் நேற்று காலையே கோயம்பேடு வந்தனர். அவர்கள் நெற்குன்றத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு, மாலையில் இறுதி சடங்குகளில் பங்கேற்றனர்.

அரசு கல்லூரிக்கு மாற்றுக

இதற்கிடையே எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் பலர் சென்னையில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமியிடம் மனுகொடுத்தனர். அதில், அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வேறு அரசு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யவேண்டும். அங்கு கூடுதலாக வசூலித்த கட்டணத்தை அந்த கல்லூரி நிர்வாகம் திருப்பித் தரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

துணைவேந்தர் டொக்டர் கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ என்றார்.

முற்றுகையிட முயற்சி

அந்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர்.

அப்போது மாணவர்களுக்கும் பொலிசாருக்கும்  இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இறுதியில் அவர்களை பொலிசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வானில் ஏற்றினார்கள்.

SHARE