வடமாகாணத்தில் மொத்தம் 39 கூட்டங்களுக்கு நான் இணைத்தலைவராகக் கடமையாற்றுவதானால் வேறுவேலைகள் எவற்றையும் நான் பார்க்கமுடியாமல் போய் விடும். எனவே என் சார்பில் மற்றவர்களைக் கடமையாற்ற அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். அதற்குப் பதில் வரவில்லை என வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
உங்கள் அனைவரையும் இவ்வருடத்தைய முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். பலதடைகள் தடங்கல்கள் தாமதங்கள் மத்தியில் எமது அரசாங்கஅதிபர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
மாகாணமட்டத்தில் என்னை மட்டும் ஐந்து மாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட இணைத்தலைவராகவும் முப்பத்தி நான்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட இணைத்தலைவராகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நியமித்துள்ளார்.
மொத்தம் 39 கூட்டங்களுக்கு நான் இணைத்தலைவராகக் கடமையாற்றுவதானால் வேறுவேலைகள் எவற்றையும் நான் பார்க்கமுடியாமல் போய் விடும். எனவே என் சார்பில் மற்றவர்களைக் கடமையாற்ற அனுமதிக்குமாறு அதிமேதகு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். அதற்குப் பதில் வரவில்லை.
அதுமட்டுமல்ல. 13.01.2016 அன்று வேறு சில விடயங்களையும் அவருக்குத் தெரிவித்திருந்தேன்.
அதாவது 24.01.1996ம் திகதி பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கையின் படி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு மாகாணம் சார்பில் முதலமைச்சரும் மத்திசார்பில் அமைச்சர் அல்லது சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இணைத்தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததை அவருக்குத் தெரியப்படுத்தினேன்
இது சென்ற வருடம் வரை பின்பற்றப்பட்டு வந்ததையும் இவ்வருடம் குறித்த சுற்றறிக்கைக்கு மாறாக நான்குபேர் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதையுஞ் சுட்டிக் காட்டினேன்.
சட்டவாக்கத்தில் ஈடுபடவேண்டிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தும் அதிகாரங் கொண்ட அமைச்சர்களுடன் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை அவருக்கு எடுத்துக் காட்டினேன்.
இதனால் மாகாணசபையின் நிர்வாகத்திற்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பற்றியும் எடுத்துக் காட்டினேன். அரசாங்க அதிபர்கள் மாகாண முதலமைச்சர் இன்றி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடாத்த எத்தனிப்பதையும் அவருக்கு கடித மூலம் தெரியப்படுத்தினேன்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் பொதுவான சட்ட ரீதியான தார்ப்பரியத்தை நாங்கள் யாவரும் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இது பற்றி மற்றைய மாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இதுவரையில் குறிப்பிட்டும் வந்துள்ளேன்.
இது பற்றிய கருத்து உங்கள் கூட்ட அறிக்கையில் ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எனதுஎதிர்பார்ப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வடமாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் தொடங்கப்பட்டபோது முதற் கூட்டத்திலேயே சில கருத்துக்களை ஆவணப்படுத்தியிருந்தேன்.
ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச அவர்கள் மகிந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்தவே ஒருங்கிணைப்புக் குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்தவே என்னை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டதைக் கண்டித்து வடமாகாணம் மகிந்த சிந்தனையை ஏற்கவில்லை என்றும்,
38 பேரில் 30 பேர் அச்சிந்தனையை ஏற்காதவர்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற கருத்தையும் வெளியிட்டு நடைபெறும் செயற்திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் தான் நாங்கள் பங்குபற்றுகின்றோம் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.
மத்தியின் நெறிப்படுத்தலுக்கு மாகாணத்தை வளைக்க எத்தனித்திருந்ததை அப்போது எடுத்துக் காட்டினேன். இப்போதும் அதனையே வலியுறுத்தி எல்லா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் ஒரு கருத்தை வலியுறுத்தி வருகின்றேன்.
புதிய அரசியல் யாப்பு ஒன்றை அமைக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் வேளையில் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் தற்போதைய உறவை ஆவணப்படுத்துவதால் இவ்வாறான தவறான உறவுகள் நீடிக்காது பார்க்க எமது ஆவணப்படுத்துகை அனுசரணை வழங்கும் என்பதைச் சொல்லிவைக்கின்றேன்.
1987ம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் அமுலுக்குவந்தபோது இப்பேர்ப்பட்ட மாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான தேவை இருக்கவில்லை. ஏனெனில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் மாகாணசபையின் கண்காணிப்பின் கீழேயே அப்போது கடமையாற்றினார்கள்.
அதன் பின்னர் ஜனாதிபதி பிரேமதாச அவர்களின் காலத்தில் இரட்டை நிர்வாகச் செயற்பாட்டை உருவாக்கும் வண்ணம் மாவட்டச் செயலாளர்கள் மத்திக்குக் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதனால் ஒற்றையாட்சியின் கீழ் இலங்கை – இந்திய உடன்பாட்டின் கீழ் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு பாதிக்கப்பட்டது.
முக்கியமாக உண்மையில் வடகிழக்கு மாகாணங்களுக்கென்றே இனப்பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப்பகிர்வானது 13வது திருத்தச் சட்டத்தினால் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒற்றையாட்சி என்றதால் ஜனாதிபதியினால் உடன்பாட்டினால் வழங்கப்பட்ட உரித்தை மீளப்பெறக் கூடியதாகவிருந்தது.
மாவட்டசெயலாளர்களைத் திரும்பவும் மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்ததால் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின.
அதை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் UA/DG/D/DP என்ற 1996ம் ஆண்டின் ஒக்ரோபர் மாதம் 24ந் திகதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மத்தியையும் மாகாணத்தையும் ஒருங்கிணைத்து நிர்வாகத்தை முன் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உண்மையில் திரும்பப்பெற்ற உரித்தை மாகாணங்களுக்கே திருப்பி அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை.
ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு மாகாணம் சார்பில் முதலமைச்சரும் மத்தி சார்பில் அமைச்சர் அல்லது சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இணைத்தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் அமைச்சருக்குப் பதிலாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்று அதில் குறிப்பிடும் போது அது ஒரு குறைபாடாகவே சட்டப்படி தெரிந்தது. ஏன் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவாக்கத் தகைமையையே கொண்டவர். அவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
இது இங்கிருக்கும் இணைத்தலைவர்களை எந்த விதத்திலும் குறை கூறுவதாக எடுத்துக் கொள்ளப்படலாகாது. நியமனங்களில் அரசியல் தீர்மானங்களை எடுத்து மாகாணசபையின் அதிகாரங்களை முடக்க எத்தனங்கள் நடக்கின்றனவோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். அதைவிமர்சிக்க முதலமைச்சருக்கு என்ன உரித்திருக்கின்றது என்று சிலர் கேட்கலாம். ஜனாதிபதி முன்னைய சுற்றறிக்கையைகை வாங்கிவிட்டுப் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தாரானால் நான் மேற்கூறிய கருத்துக்களைத் தெரிவித்திருக்கமாட்டேன்.
சில அரசாங்க அதிபர்களோ பிரதேச செயலாளர்களோ வெறுமனே மத்திய அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தலாம் என்று நினைப்பது தவறானது. ஒருங்கிணைப்பு என்றால் இருசாராரையும் சேர்த்துவைப்பது. யாரையும் யாரையும் நாங்கள் ஒருங்கிணைக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது மற்றைய மாகாணங்களில் அத்தனை பெரிதாகப் பார்க்கப்படமாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தியில் இருக்கும் அரசாங்கமும் மாகாணத்தில் இருக்கும் அரசாங்கமும் வேறுவேறு கட்சிகளைச் சேர்ந்திருப்பதால் மத்தியும் மாகாணமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதுவடமாகாணத்தில் மிகவும் முக்கியமாக இருக்கின்றது.
ஆகவே மத்தியையும் மாகாணத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் நபர்கள் இணைத்தலைவர்களாக இருந்து நடத்தினால்த்தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் சட்டவலுப்பெற்றிருக்கும். தனிய அரசாங்க அமைச்சர்களையோ சட்டவாக்கப் பொறுப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையோ மட்டும் இணைத்தலைவர்களாகக் கொண்டு ஒரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்தமுடியாது. நடத்தினால் அதுஒருங்கிணைப்புக் குழு கூட்டமாகாது.
நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்டமத்தியின் அமைச்சரும் சட்டவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுஞ் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டம் ஒருங்கிணைப்புக் கூட்டமாகவே கருதப்படமாட்டாது. அங்கு ஒருங்கிணைப்பு நடைபெற வேண்டுமானால் மாகாணம் சார்பாக நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒருவர் அமர்ந்தே தீரவேண்டும். இப்பொழுது எல்லோரும் இதை உணர்ந்து கொண்டுள்ளார்கள் என்று நம்புகின்றேன்.
மன்னாரில் வடமாகாணசபை சார்பில் எவரும் இணைத்தலைவராகச் செயலாற்றாமல் கூட்டம் நடந்து முடிந்ததாகக் கேள்விப்பட்டேன். அக்கூட்டத்தின் சட்டவலுப் பற்றி அரசாங்க அதிபர் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். வெறுமனே மத்திய அரசு சார்பான ஓரிருவர்களை வைத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடாத்தமுடியாது என்பதை நாங்கள் உணரவேண்டும்.
மாகாணசபைக்கு முழுமையாக இலங்கை – இந்திய உடன்பாட்டின் கீழ் கொடுக்கப்பட்ட ஒருஉரித்தையே கூறுபோட்டு தற்போது மாகாணம் இல்லாமலே மத்தியின் ஏற்பாட்டின் கீழ் மாகாண நிர்வாகத்தை நடாத்த முடியும் என்று சிலர் நினைக்கின்றார்கள். அது தவறு என்று சுட்டிக்காட்டவே இவ்வளவையும் இங்கு பிரஸ்தாபித்தேன்.
இன்றைய கூட்டத்திற்கு 1017 செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றிற்கான உத்தேசசெலவு 10855.97 மில்லியன் ஆகும். நான்கு முக்கிய செயற்திட்டங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசீலிப்பது நன்மைபயக்கும் என்று நம்புகின்றேன்.
அதேநேரம் மின்சாரம் பற்றிய கலந்துரையாடல் நேரம் வர முன்னரே இந்த இணைத்தலைவருரையில் உங்கள் கவனத்திற்கு ஒரு விடயத்தைக் கொண்டுவர ஆசைப்படுகின்றேன்.
மின்சார நிலையங்கள் சுன்னாகத்திலும் காங்கேசன்துறையிலும் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்று சுன்னாகம் மட்டுந்தான் நடைமுறையில் இருந்துவருகின்றது. 15000 பாவனையாளருக்கு ஒரு மின்நிலையம் என்ற அடிப்படைக்கு மேலாக 35000 பாவனையாளருக்கு உதவும் வண்ணம் சுன்னாகம் மின் நிலையம் தனித்துச் செயற்படுகிறது.
காங்கேசன்துறை மின் நிலையத்தை மீளவும் செயலாற்ற வைக்க ஆவனசெய்யலாமே என்ற கருத்தை இங்கு வெளியிடுகின்றேன். மேலும் கற்தூண்கள் எனப்படும் கொண்கிறீட் கம்பங்கள் இலங்கை மின்சார சபையினால் வெளிமாகாணங்களில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. அவற்றை உள்ளூரில் தயாரித்து எடுக்க முடியாதா என்பதையும் பரிசீலித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.
இன்றைய நிகழ்ச்சி நிரலில் எனது கவனத்தை 65000 வீட்டுத் திட்டம் ஈர்த்தது. எந்தெந்த அடிப்டையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும்.
தற்போதைய தகைமை நெறிமுறைகள் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்கள் நிகழ்ச்சி நிரலைப் பார்த்துச் செல்லும் போது இன்னொரு விடயம் கவனத்தை ஈர்த்தது. கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி இரயில் மாங்குளத்தில் நிற்பாட்டாதது பற்றி முல்லைத்தீவு மக்கள் குறைப்பட்டுக் கொள்கின்றார்கள். அதுபற்றியும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும்.
14வதாகத் தொல்பொருளியல் திணைக்களம் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து அத்திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்மை வந்து பெப்ரவரி முதலாம் திகதி சந்திப்பதாக இருந்தது. அதுகாலம் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் சரித்திர ரீதியாக அடையாளம் கண்டிருக்கும் எமது இடங்கள் அனைத்தையும் உள்ளடக்கி யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் துணைகொண்டு அவை ஒவ்வொன்றினதும் சரித்திரபூர்வமான அல்லது தொல்லியல் பூர்வமான முக்கியத்துவம் பற்றி அறிவிப்புப் பலகைகளை அந்தந்த இடங்களில் மூன்றுமொழிகளிலும் நிலைநிறுத்தவேண்டும்.
இவற்றை நான் இங்கு குறிப்பிடுவதற்கு மன்னிக்கவேண்டும். அவற்றைப் பரிசீலிக்கும் காலம் வரும் போது நான் இவ்விடயங்களை மறந்துவிடுவேனோ என்றெண்ணி அவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.
2015ம் ஆண்டுக்கான முடிவுறாத செயற்திட்டங்களுக்கான நிதியம் பற்றியும் ஆராயவேண்டியிருக்கும். பலவிடயங்கள் இக் கூட்டத்தின் போது ஆராயப்பட வேண்டியுள்ளன என்றார்.