மீண்டும் அய்லான் சிறுவன்: துருக்கி கடலில் கரை ஒதுங்கிய உயிரற்ற உடல்

293
துருக்கி கடற்கரை பகுதியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்த, துருக்கி கடற்பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர், இதில், 37 பேரின் உடல்களை கடற்படை வீரர்கள் மீட்டனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய அய்லான் என்ற அகதிச்சிறுவனைப் போன்றே, மீண்டும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

துருக்கி பொலிசார், உயிரற்ற அச்சிறுவனின் உடலை தூக்கிகொண்டு போய் கடற்கரையின் ஒரு பகுதியில் வைக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதுவரை துருக்கி நாட்டில் 2.5 மில்லியன் சிரிய அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர், இதில் கடந்த ஆண்டு மட்டும் 1 மில்லியன் பேர் குடியேறியுள்ளனர், இதில் 3,600 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல்போயிருக்கலாம் என ஐரோப்பிய ஆணையகம் தெரிவித்துள்ளது.

சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள் நாட்டு போர் நடைபெறுவதால் அங்கு வாழ வழியற்ற மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

அனுமதி பெறாத படகுகளில் அதிக அளவில் பயணம் செய்யும் இவர்கள் நடுக்கடலில் மூழ்கி தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். இச்சம்பவங்கள் துருக்கி மற்றும் கிரீஸ் கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE