தமிழ் அரசியல் கைதிகளின் உடல், மனநிலை, குடும்பசூழல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்நாட்டின் சுதந்திர தினத்திலாவது அவர்களை விடுதலை செய்து மனிதாபிமானத்தையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோரிக்கை விடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – கடந்த ஆட்சியில் கானல்நீராகிப்போன தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இந்த நல்லாட்சியிலாவது ஈடேறும் என்று இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்தபோதிலும் ஏமாற்றமும் சலிப்பும் மட்டுமே விடையாகிப் போனதால் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வேண்டி தங்களிடம் முறையிட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வேளையில் தாங்கள் அவர்களுக்கு அளித்த உத்தரவாதம் எங்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. நல்லதொரு தொடக்கத்துடன் நல்லெண்ணத்தின் சமிக்ஞை விரைவில் முன்னெடுக்கப்படும் என்று அதீத நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால், அதன் பின்னரான செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தையே மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்திருந்தன. தங்களது நல்லெண்ண செயற்பாடு பொங்கல் தினத்தன்று வெளிப்படும் என்று நம்பியிருந்தோம். ஆனால், தேசிய பொங்கல் தினவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது மக்களின் புண்பட்ட நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகித்து ஒரு மங்களகரமான நிகழ்வை சோகமிக்கதாக மாற்றிவிட்டுச் சென்றார். தாங்களும் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் ஏமாற்றிவிட்டீர்கள். அவர்களின் உடல், மனநிலை, குடும்பச் சூழல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டும் இந்நாட்டின் சுதந்திர தினத்தை அவர்களும் கொண்டாடும் வகையிலும் இந்த நன்னாளிலாவது அவர்களை விடுதலைசெய்து உங்களது மனிதாபிமானத்தையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்களைக் கொலைசெய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இளைஞருக்குத் தாங்கள் பெருந்தன்மையுடன் மன்னிப்பளித்து விடுதலைசெய்ததைப் பாராட்டும் அதேவேளை, ஏனையவர்களையும் விடுவித்து உங்களது ஆட்சிக்கும் பெருந்தன்மைக்கும் நன்மதிப்பை ஏற்படுத்திக்கொள்ள விளைகின்றேன். நீண்டகாலமாக சிறையில் வாடும் உறவுகளின் பிரச்சினைக்கு சட்ட அணுகுமுறையூடாக தீர்வைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் இருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். அதன் காரணத்தினாலேயே தாங்கள் அரசியல் ரீதியான தீர்மானத்தை எடுத்து மேற்குறித்த இளைஞனுக்கு விடுதலையளித்திருந்தீர்கள். என்ன காரணத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கிறோம் என்பதுகூட தெரியாமல் பலர் சிறையில் வாடுகின்றனர். யார் எத்தகைய குற்றங்களை இழைத்திருந்தாலும் அதற்கான சந்தர்ப்பங்களையும் சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு இனியொருபோதும் அவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பில்லை என்பதையும் ஏற்று அவர்களை விடுதலைசெய்வதே இன்றைய சூழலில் பொருத்தமான செயலாக இருக்கும் என்பதையும் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். ‘சிறைச்சாலைகளில் இருப்பவர்களும் மனிதர்களே!’ என்னும் மகுடவாசகத்திற்கமைய அவர்களை மனிதர்களாக மதித்து அரசியல் ரீதியான தீர்மானமொன்றையெடுத்து நல்லெண்ண சமிக்ஞையாக அவர்களது குற்றங்களை மன்னித்து விடுதலைசெய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – – See more at: http://www.malarum.com/article/tam/2016/02/03/13461/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html#sthash.bkAfMLMW.dpuf
Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com