கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்படும்; சட்டத்தரணி சோ.தேவராஜா

311

 

கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்படும்; சட்டத்தரணி சோ.தேவராஜா 
11050181_449141118582237_8634016256360846557_o now-600x341

கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இது தொடர்பாகப் பெப்ரவரி-5 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன் போது கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடைநிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்தைச்  சீராக மேற்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்படும் எனச் சட்டத்தரணி சோ.தேவராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 வலிகாமம்  மக்களின் நீர்ப் பிரச்சினை ஒரு ஜீவதாரப் பிரச்சினை. சுன்னாகம் மற்றும் வலிகாமம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு நீர் பவுசர் மூலம் கொண்டு செல்லப்பட்டதை நாங்கள் முன்னர் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம் . அப்படிப்பட்ட சுன்னாகம் மற்றும் வலிகாமத்துக் குடிநீர் இன்று நாசமாக்கப்பட்டுள்ளது. நஞ்சாக மாறியிருக்கிறது. பல்தேசியக் கம்பனிகளின் அபிவிருத்தி என்ற பேரிலே மக்களின் அடிப்படையான தேவைகளில் ஒன்றான குடிநீர் வளம் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பது மிகவும் மனவருத்தத்துக்குரியதொன்று .

இந்த விடயத்திலே சட்டத்தரணிகள் சிலரின் முயற்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள்  தங்களுடைய கிணற்று நீரை மாசுபடுத்தியிருப்பது குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்று தான் என நேரடியாகக் கண்ணாரக் கண்ட சாட்சிகளாக ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள். என்னுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், சட்டத்தரணி ஜெயரூபன் ஆகியோரும் ஆஜராகி வாதாடியிருந்தோம். அப்போது மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இருந்த சின்னத்துரை சதீஸ்தரன் குறித்த நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு நீர் மாசுபடுத்தப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீரினை  வழங்க வேண்டிய பொறுப்பு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை ஆகியவற்றிற்குரியது எனக்  கட்டளையிடப்பட்டது.  பொதுமக்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  குறித்த நிறுவனம் மூடப்பட்டதற்கெதிராக மேற்படி  நிறுவனம் மேன்முறையீடு செய்ததன் அடிப்படையில்  தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் கழிவோயில் பாதிப்புக்கெதிராக மல்லாகம் நீதிமன்றத்தில்  வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கிலும் கழிவோயில் கலந்தமை காரணமாக நீர் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.  இது தொடர்பில் உண்மையில்  ஆராய்ந்து சொல்ல வேண்டிய பொறுப்புத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு உரியது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்கனவே  150 கிணறுகளைத் தெரிவு செய்து பரிசோதனை நடாத்தியதில் 5 கிணறுகளில்  ஈயமிருக்கிறது. அல்லது ஓயில் இருக்கிறது. ஆபத்தானது எனச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த ஐந்து கிணறுகளும் எவை? என இன்னும் பிரகடனப்படுத்தப்படவில்லை. உண்மையில் இந்த விடயத்தை அவர்கள் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அந்த ஐந்து கிணறுகளைச் சுற்றவுள்ள மக்களின் சுகாதார நிலைமைகளைப் பரிசோதித்து அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு, குறித்த கிணறுகளிலுள்ள நீரினைப் பாவிக்காமல் தடுப்பதற்கு ஏற்ற வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.  அதனை நீதிமன்றம் தான் செய்ய வேண்டும் என அண்மையில் சுன்னாகத்தில் இடம்பெற்ற கழிவோயில் பாதிப்புத் தொடர்பான கலந்துரையாடலில் மக்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
கடந்த தவணையின் போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக  எடுக்கப்பட்ட போது  இரண்டு மாதங்களாகக் கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சுத்  தங்களிடம் பணம் இல்லையென்று தெரிவித்த காரணத்தால்  நீர் வழங்க முடியாது எனத்  தேசிய  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் சொல்கிறார்கள். நீதவான் இதனை  வன்மையாகக் கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் குறித்த  வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இன்று இடம்பெறும் வழக்குத் தவணையின் போது அந்த விடயங்களை வெளிப்படுத்தி கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்டு நீர் விநியோகம் நிறுத்தப்பட்ட மக்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்றார்.
SHARE