வவுனியா பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி முற்றத்தில் மறுபடியும் வெளிப்பட்டது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை !!!
‘தனித்தேசிய இனம் – மரபு வழித்தாயகம் – சுய நிர்ணய உரிமை’ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்று பிரகடனம் செய்து, 01.03.2002 அன்று வவுனியாவில் அமைக்கப்பட்ட ‘பொங்குதமிழ்’ நினைவுத்தூபி முற்றத்தில் ஒன்றுகூடிய, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வவுனியா மாவட்ட சங்கத்தினரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும்,
‘ஒற்றையாட்சி எங்களுக்கு வேண்டாம். சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டியே வேண்டும். தமிழ் மக்களை தேசிய இனமாக அங்கீகரி’ என்று பதாதைகளை காட்சிப்படுத்தி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை மறுபடியும் சர்வதேச சமுகத்துக்கும் சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் ஒழுங்கமைப்பில், சிறீலங்காவின் 68வது சுதந்திர தினத்தை பகிஸ்கரித்து ‘கரிநாளாக’ நினைவுகூரும் கவனவீர்ப்பு போராட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் பெப்ரவரி 4 அன்று நடத்தப்பட்டன.
இதன்போது கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறும், கறுப்பு பட்டிகளை அணிந்தவாறும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வவுனியா மாவட்ட சங்கத்தினரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும்,
‘நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்குப் போகவேண்டும் வழிவிடு, இராணுவமே எங்கள் காணிகளை விட்டு வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும். எமது கடல்வளம் எமக்கு வேண்டும், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், நிலைமாறுகால நீதி வேண்டாம். பரிகார நீதியே வேண்டும், இனக்கலப்பு பௌத்த சிங்கள குடியேற்றங்களை நிறுத்து. போரின்போது கையளிக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே, இரகசிய வதைமுகாம்களை அம்பலப்படுத்து, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறு, தமிழ் அரசியல் கைதிகளை மறுப்பேதுமின்றி விடுதலை செய், தமிழ் கிராமங்களை பௌத்தமயப்படுத்தாதே.’ என்று சிறீலங்கா அரசாங்கத்தின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் – மீறல்களை அம்பலப்படுத்தும் சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
‘ஒற்றையாட்சி எங்களுக்கு வேண்டாம். சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டியே வேண்டும். தமிழ் மக்களை தேசிய இனமாக அங்கீகரி’ என்று அறிவிக்கும் வடக்கு கிழக்கு தமிழர் தாயக வரைபடங்களுடன் பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
கூட்டமைப்புக்கும் கண்டனம் !!!
இதேவேளை, சிறீலங்காவின் 68வது சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கும் தமது பலத்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
‘சுதந்திரம் இல்லாத மக்களின் பிரதிநிதி சுதந்திர தின நிகழ்வில், படித்தவனை நம்பினோம் படுகுழியில் தள்ளுகிறான் தமிழ் இனத்தை, உரிமைக்கான உயிர்த்தியாகத்தை விபச்சார அரசியல் ஆக்காதே.’ என்று சுமந்திரனின் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
அரசாங்க அதிகாரிகளுக்கும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது !!!
குறித்த ‘பொங்குதமிழ்’ நினைவுத்தூபி முற்றத்துக்கு சமீபமாக அமையப்பெற்றுள்ள வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த அரசாங்க திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கறுப்புக்கொடி அசைத்து மக்கள் தமது எதிர்ப்பை காட்டினர்.
காலை 8.30 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை இந்த அடையாள உண்ணாவிரத கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்திய மக்களுக்கு, வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் உவகையோடு நெல்லிரசம் வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுறுத்தி வைத்தனர்.
செய்தியறிக்கையிடல் மற்றும் ஒளிப்படங்கள்
– அ.ஈழம் சேகுவேரா –