டுவிட்டரின் புதிய முடிவுக்கு மரண சாபமிடும் பயனாளிகள்

291
டுவிட்டரின் புதிய முடிவுக்கு மரண சாபமிடும் பயனாளிகள்


ஈரடிக் குறளைப்போல் 140 எழுத்துகளுக்குள் தங்களது நிலையைப் பற்றி நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக் கொள்ள உதவும் சமூக வலைத்தளமான டுவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வரும் நிலையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை அவ்வப்போது டுவிட்டர் வெளியிட்டு வருகின்றது.

தற்போதைய அதிகபட்ச பகிர்வாக நிர்ணயித்துள்ள 140 எழுத்துக்களை 10 ஆயிரமாக உயர்த்தப் போவதாக வெளியான சமீபத்திய அறிவிப்புக்கு சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

இங்கு பதிவிடப்படும் தகவல்களில் அதிகமான பயனாளர்களால் விரும்பப்பட்ட அல்லது பகிரப்பட்ட விஷயங்களை
தேர்வு செய்து, அவற்றை மற்றவர்களின் டுவிட்டர் பக்கத்தின் தலைப்பில் இடம்பெறும் வகையில் வரிசைப்படுத்தப் போவதாக டுவிட்டர் அறிவித்துள்ளது.

அதாவது, பராக் ஒபாமா, நரேந்திர மோடி, ஏஞ்சலினா ஜோலி, அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்களுக்கு டுவிட்டரில் கோடிக்கணக்கான அபிமானிகள் (பாலோவர்ஸ்) உள்ளனர். அவர்கள் டுவீட் செய்யும் தகவல்கள் பல லட்சம் பேரால் லைக் செய்யப்படும், பரிமாறவும்படும்.

டுவிட்டரின் இந்த புதிய முடிவின்படி, இதுபோன்ற அதிகமான லைக்களைப் பெற்ற தகவல்கள் மட்டுமே வரிசைக்கிரயத்தின்படி முதலிடம், இரண்டாமிடம் மற்றும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் காணப்படும். சராசரி நபர்களும், சாமான்யர்களும் பரிமாறும் பல சமூகநலன் சார்ந்த முக்கிய தகவல்கள் டுவிட்டர் என்னும் கடலில் கரைத்த கருத்துப் பெருங்காயமாக காணாமல் போய்விடும்.

எனவே, டுவிட்டரின் இந்த புதிய முடிவுக்கு பயனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, ஒரு தகவல் பதிவிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் முறையே நீடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

தகவலின் அடிப்படையில் அல்லாமல், பேஸ்புக் போல எண்ணிக்கையின் அடிப்படையில் இயங்க ஆரம்பித்தால் வெகுவிரைவில் டுவிட்டர் பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர்கள் ‘டுவிட்டரிலேயே’ வெளிப்படையாக கருத்துகளை பதிவிட தொடங்கியுள்ளனர்.

இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, #RIPTwitter (இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய கிறிஸ்தவர்கள் சமாதியில் காணப்படும் ‘ரெஸ்ட் இன் பீஸ்’ என்ற வாசகத்தின்) சுருக்கெழுத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தனது போட்டி நிறுவனமான பேஸ்புக்கின் விளம்பர வருமானத்துக்கு நிகராக சம்பாதிக்க நினைத்து, சமீபகாலமாக டுவிட்டர் எடுக்கும் புதிய முடிவுகளில் பல, சொதப்பலாகியே போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE