வடகொரியாவின் அத்துமீறல் வருந்தத்தக்கது: ராக்கெட் ஏவியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

277
வடகொரியாவின் அத்துமீறல் வருந்தத்தக்கது: ராக்கெட் ஏவியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

வடகொரியா இன்று ராக்கெட் ஏவியதற்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வடகொரியாவின் இந்த அத்துமீறல் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளின் யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று காலை வடகொரியா அனுப்பிய ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒகினாவா கடல் பகுதியை அந்த ராக்கெட் கடந்து சென்றதாக வடகொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பூஸ்டர்கள் ஒழுங்காக செயலாற்றி கொரிய தீபகற்பத்தில் உள்ள கடலில் விழுந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் வடகொரியாவின் அத்துமீறல் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சமுதாயத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமலும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறிய வகையிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொழில்நுட்பத்தை வடகொரியா இன்று பயன்படுத்தியுள்ளது, வருந்தத்தக்க சம்பவமாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறநாடுகளை ஆத்திரமூட்டக்கூடிய இதுபோன்ற நடவடிக்கைகளை வடகொரியா கைவிட வேண்டும். சர்வதேச சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய பொறுப்பை அந்நாடு உணர்ந்து நடக்க வேண்டும். கொரியா தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்றத்தை தணிக்கவும், அங்கு அணு ஆயுத பரவலை தவிர்க்கவும் அனைத்து தரப்பினருடன் சேர்ந்து பாடுபடுவேன் எனவும் பான் கி மூன் தெரிவித்ததாக ஐ.நா.சபை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவின் கோரிக்கைக்கு இணங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது. வடகொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த ரகசிய கூட்டத்தில் வடகொரியாவுக்கு எதிராக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE