பேரறிவாளனை விடுதலை செய்தால்… தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது!

250

பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன.

2014, பெப்ரவரி மாதம் 19-ம் தேதி காலையில், அமைச்சரவையைத் திடீரெனக் கூட்டிய ஜெயலலிதா, “23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு, மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முழங்கினார்.

தமிழக அரசின் இந்தத் தடாலடி முடிவு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதை, விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 432-ன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தமிழக அரசால் விடுவிக்க முடியாது என்று தீர்ப்பளித்து, தமிழக அரசின் முடிவுக்குத் தடைபோட்டது.

ஆனாலும்கூட, தமிழக அரசு நினைத்தால், இவர்களை விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று சொல்லி விட்ட பிறகும், தமிழக அரசால் இவர்களை விடுதலை செய்ய முடியுமா? என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து வருகிறது!

நளினி வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில்,

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432(அ), 433-ன்படி ஓர் ஆயுள் தண்டனைக் கைதியை விடுவிக்க வேண்டும் என்றால், அதற்கு மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்க வேண்டும். அவர்கள் அனுமதி கொடுக்காத பட்சத்தில் மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக விடுதலை செய்ய முடியாது. இதைத்தான் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், அதே தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு, அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி மாநில அரசு, மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யலாம் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு பின்வரும் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அவையாவன,

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்வது,
14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்தவர்களை சிறைத் சீர்திருத்த அறிவுரைக் குழுமத்துக்கு அனுப்பி விடுதலை செய்வது,
20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது.

இதைப் பின்பற்றி 2001, 2006, 2007, 2008-ல் தமிழக அரசு, சுமார் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்துள்ளது. ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் விடுதலை செய்யவில்லை. இவர்கள் சி.பி.ஐ விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்று அரசாங்கம் காரணம் சொன்னது.

ஆனால், 1994-ம் ஆண்டு நவம்பர் 10 அன்று தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும், ஆயுள்தண்டனைக் கைதிகளை, அவர்கள் எந்தவிதமான குற்றங்களில் ஈடுபட்டு இருந்தாலும் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி, மாநில அரசு விடுதலை செய்தால், மத்திய அரசோ அல்லது வேறு எந்த அரசு அமைப்போ அதைத் தடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நீதிமன்றங்களுக்கும் கூட அதைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் இந்தப் பகுதி தெளிவாக உள்ளது என்றார்.

இந்த விவகாரம் குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெயலலிதா இதுபற்றி ஆலோசனை நடத்தினார். அதில், 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஜெயலலிதா விவாதித்ததாகத் தெரிகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவற்கு முன்பாக இந்த அறிவிப்பு வரலாம். இதற்கேற்ப, நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசை உயர் நீதிமன்றம் பதிலளிக்கச் சொல்லி உள்ளது. அதில் தாக்கல் செய்யப்படும் பதிலைப் பொறுத்து நடக்க இருப்பதை அறியலாம் என்று சொல்கிறார்கள்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், ஃபெப்சி உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரைப்படச் சங்கங்களும் கடந்த மாதம் 13-ம் தேதி திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தின.

அதில் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர், “பேரறிவாளன் உட்பட 7 பேரும் கடந்த 25 ஆண்டு​களாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

அரசியலமைப்பின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி அவர்களை விடுவிக்க வலியுறுத்துவோம். இதனை வெறும் கடிதமாகக் கொடுக்காமல், பேரணியாகச் சென்று முதல்வரை சந்தித்துக் கொடுக்க இருக்கிறோம். ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும்போது மக்கள் மத்தியிலும் விழிப்பு உணர்வு ஏற்படும் என்றனர்.

அதற்கு முந்தைய நாள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் அமீர் உள்ளிட்டவர்கள் வேலூர் சிறையில் சந்தித்து வந்தனர். அதன்பிறகு, நடிகர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துவிட்டு வந்தார். அதன்பிறகுதான், இந்த அறிவிப்பை நடிகர் சங்கம் வெளியிட்டது.

இதை வைத்துப் பார்க்கும் ​போது, ஜெயலலிதாவின் யோசனையின் பேரில்தான் இவை எல்லாம் நடந்திருப்பது புரியும். எனவே, விரைவில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், திரைப்படத் தொழிலாளர் சங்கத்தின் பேரணிக்கு சிக்னல் கொடுக்கப்படும். அதையடுத்து பேரணி நடக்கும். அதன்பிறகு, நளினியின் மனுவுக்கு பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யும். அதையொட்டி 7 பேரும் விடுதலை செய்யப் படுவார்கள் என்று தகவல்கள் வருகின்றன.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் குழப்பமாக இருக்கிறது. வழக்கறிஞர்கள் ஆளுக்கு ஒன்றைச் சொல்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா, ஆரம்பத்தில் இருந்தே 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உண்மையான ஆர்வம் காட்டுகிறார். அதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் அதன்பிறகு பல மாதங்களுக்கு ஒன்றும் நடக்காது என்கின்றனர். நாங்கள் ஜெயலலிதா அம்மாவை நம்புகிறோம். 25 ஆண்டுகளாக சிறைக்குள் இருக்கும் அந்த 7 பிள்ளைகளையும் அவர் விடுதலை செய்வார் என்றார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-ன்படி…

* ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை தமிழக அரசால் குறைக்க முடியாது.

* சி.பி.ஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனையை குறைக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.

* இது தொடர்பான அரசியல் சாசன பிரிவில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசின் ‘ஒப்புதல்’ பெற வேண்டும் என்பதே அர்த்தம்.

* ஆயுள் தண்டனை என்பது ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

* அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி வேண்டுமானால், மாநில அரசு முடிவெடுக்கலாம். இந்த வழக்கில் அதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசே ஆராய்ந்து முடிவெடுக்கலாம்.

SHARE