விண்கல் மோதல் குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

291
விண்கல் ஒன்று அடுத்த மாதம் பூமிக்கு மிக அருகே கடக்கவுள்ள நிலையில் அது பூமியை தாக்கினால் மீண்டும் பனியுகம் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நாசா மையம் அண்மையில், விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடக்கவுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஒரு கிலோமீற்றர் அகலமுடைய அது மார்ச் மாதத்தின் போது நிலாவை விட 21 மடங்கு அருகில் பூமியை கடக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்லஸ் பார்தீன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, இந்த விண்கல் பூமியில் விழுந்தால் 15 கிலோமீற்றர் அகலமுடைய பள்ளத்தை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக ஏராளமான தூசுகள் வளிமண்டலத்தில் ஏற்படும். ஒரு வேளை இந்த விண்கல் பாலைவனத்தில் விழாமல் வேறு இடத்தில் விழுந்தால் அதிக தீப்பிழம்பை ஏற்படுத்தும்.

இதன் மூலம் கிளம்பும் கரி புகை 10 ஆண்டுகள் வரை வானில் இருக்கும். தூசுகள் மீண்டும் பூமியில் படிய 6 ஆண்டுகள் எடுத்துகொள்ளும்.

இதனால் பூமியை அடையும் சூரிய ஒளியின் அளவு 20 சதவீதமாக குறையும். இறுதியாக பூமியின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு செல்லும்.

இது பனியுகத்தின் வெப்பநிலைக்கு ஒப்பானது என்று தெரிவித்துள்ளார்.  மேலும் பூமியில் பெய்யும் மழையின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துபோகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் விண்கல்லால் பூமிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. விண்கல் பூமிக்கு எவ்வளவு தூரத்தில் இருந்து கடக்கும் என்பது துல்லியமாக தெரியவில்லை.

எனினும் இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் நாசா தெரிவித்துள்ளது.

SHARE