பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

276

 

இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பணியாற்ற பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போர் விமானங்களை இயக்க பெண் போர் விமானிகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது ஹைதரபாத்தில் அதற்காக பயிற்சியும் பெற்று வருகின்றனர். தற்போது ஹக்கிம்பேட் விமானப்படை மையத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட பயிற்சி முடிந்து 2வது கட்ட பயிற்சி கிரண் எம்.கே 2 ரக போர் விமானங்களில் பயிற்சி பெறவுள்ளனர். 2வது கட்ட பயிற்சி முறைதான் மிக முக்கியமானது.இந்த பயற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 பெண் விமானிகளும் நிச்சயம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயராகியிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், போர் விமான பைலட்டுகளாக தேர்வு செய்யப்படும் பெண் விமானிகள் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய விமானத்படையின் துணை ஏர் வைஸ் அட்மிரல் என்.கே. தாண்டன் கூறுகையில், ”போர் விமானத்தில் பைலட்டுகளாக பறக்க கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படும். பெண் விமானிகளின் பயிற்சி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது எல்லா நாட்டு விமானப்படையிலும் நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்தான் ” என்றார்.

பவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய 3 விமானப்படை வீராங்கனைகளுக்கும் போர் விமானத்தில் பைலட்டுகளாக பணிபுரிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட பயிற்சி முடிந்த பின், கர்நாடாகா மாநிலம் பிதாரில் 3வது கட்ட பயிற்சி ஒரு வருட காலம் அளிக்கப்படும். இதில் பிரிட்டிஷ் ஹாக் ரக போர் விமானங்களில் பயிற்சி பெறுவார்கள். அதற்கு பின்னரே, சூப்பர்சானிக் போர் விமானங்களில் பைலட்டுகளாக பறக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 3 விமானிகளும் போர் விமானங்களை இயக்கத் தேர்வு செய்யப்படும்பட்சத்தில், 83 ஆண்டுகால இந்திய விமானப்படை வரலாற்றில் போர் விமானங்களை இயக்கும் பெண்கள் என்ற வரலாற்றையும் படைப்பார்கள்.

 

SHARE