அரச நிர்வாகத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எந்தவொரு சதிநாசச் செயலும் பயங்கரவாத நடவடிக்கையாகவே கொள்ளப்பட வேண்டும்.

287

 

அரச நிர்வாகத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எந்தவொரு சதிநாசச் செயலும் பயங்கரவாத நடவடிக்கையாகவே கொள்ளப்பட வேண்டும்.

நாடெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இருளில் மூழ்கக் காரணமாகவிருந்த சம்பவமானது உண்மையிலேயே சதிநாச வேலையாக இருக்குமானால் அதனை பயங்கரவாத நாசகாரச் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணியிலிருந்து நாடு பெரும் அமர்க்களப்பட்டு விட்டது. இரண்டு மணியளவில் ஏற்பட்ட மின் துண்டிப்பானது நாடெங்கும் மீண்டும் சீரடைவதற்கு அன்றிரவு நள்ளிரவை நெருங்கிவிட்டது.

15-1418644531-power-ines-60-0

அன்றைய தினம் விடுமுறை நாளென்பதால் தொழில்துறைகளுக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டு விடவில்லை. ஆனாலும் தற்போதைய உஷ்ணமான காலநிலை காரணமாக மக்கள் அனுபவித்த அவஸ்தையை விபரிக்க முடியாது.

அன்றைய மின்துண்டிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அரசாங்கத்தின் கடும் பணிப்புரையின் பேரில் தீவிரமான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சும் பொலிஸ் திணைக்களமும் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, அன்றைய மின்துண்டிப்புக்கு சதிநாச வேலையே காரணமெனத் தெரிகிறது.

இன்றைய உஷ்ண காலப் பகுதியில் மின் துண்டிப்பை ஏற்படுத்தி, மக்களை அவஸ்தைக்கு உள்ளாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் மீது வெறுப்பை உண்டாக்குவதற்கு விஷம சக்திகள் முற்பட்டிருக்கலாமெனச் சந்தேகிப்பதற்கு இடமிருக்கிறது.

இல்லையேல் நாட்டில் சிவில் நிர்வாகத்தைச் சீர்குலைப்பதன் மூலம் கொந்தளிப்பான சூழ்நிலையொன்றை உருவாக்குவதற்கு அரசுக்கு விரோதமான சக்திகள் முற்படுவதாகவும் சந்தேகம் நிலவுகிறது.

எவ்வாறாயினும் இதுபோன்ற சதிநாச செயல்களுக்கு அரசியல் காரணங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதென்பது நாட்டின் சிவில் நிர்வாகத்தை முற்றாகவே முடக்கி விடுமென்பது தெரியாததொன்றல்ல.

நாட்டில் யுத்தம் நிலவிய காலப் பகுதியில் வடக்கு, கிழக்கில் புலிகளும் இதேவிதமான காரியத்தையே செய்தனர். எங்கெல்லாம் மின்மாற்றிகள் (ட்ரான்ஸ்ஃபோமர்) காணப்பட்டனவோ அவற்றையெல்லாம் குண்டுகளை வைத்துத் தகர்த்து மின்சார விநியோகத்தையே சீர்குலைத்தார்கள் புலிகள். வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தைச் சீர்குலைக்க வேண்டுமென்பதே புலிகளின் அன்றைய நோக்கமாக இருந்தது.

அதேவிதமான அரச விரோத சதிநாச செயற்பாடுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்துள்ள சம்பவமாக இருக்க வேண்டுமென சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்றதைப் போன்ற நாசகார செயற்பாடுகளை, தென்னிலங்கையிலும் ஆரம்பிப்பதற்கு எந்தவொரு தரப்பினரும் முன்வருவார்களாக இருந்தால் அது மிகவும் பாரதூரமாகக் கருதப்பட வேண்டியதாகும்.

மின் துண்டிப்பு சதிநாச வேலைக்குக் காரணமானோரைக் கண்டுபிடித்து, பிரச்சினையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது அரசின் உடனடிப் பொறுப்பாகும்.

தனிப்பட்ட நபர்களின் அரசியல் தேவைக்காக முழு நாட்டையும் ஸ்தம்பிக்கச் செய்வதையோ அல்லது நாட்டு மக்களை அவஸ்தைக்குள்ளாக்குவதையோ ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னரும் நாட்டில் ஆங்காங்கே சிறு அளவிலான மின்துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் மத்தியில் இவ்விவகாரம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

உண்மை நிலைமையை அறிந்து கொள்ள முடியாத குழப்பகரமான நிலைமையொன்று மக்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு அரசாங்கம் உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்துவது அவசியம்.

அரசுக்கு எதிரான சக்திகளின் பின்புலம்தான் சதிநாச வேலைக்குக் காரணமாக இருக்குமானால் ,அதனையும் மக்களுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இல்லையேல் மக்கள் வீணான சந்தேகத்துக்கும் வெறுப்புக்கும் உள்ளாவதற்கு இடமுண்டு.

தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான அரசியல் சக்திகள் பல்வேறு வெளிப்படையான, மறைமுகமான திட்டங்களை வகுத்துச் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் மீது மக்களை வெறுப்புக் கொள்ளச் செய்வதே அரச விரோத சக்திகளின் இப்போதைய குறிக்கோளாக இருப்பதைக் காண முடிகிறது.

இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள மின் துண்டிப்புப் பிரச்சினையிலும் அரச விரோத சக்திகளின் பின்புலம் உள்ளதற்கு இடமுண்டு.

ஜனாதிபதியும் பிரதமரும் இவ்விடயத்தில் தீவிர கவனமெடுத்திருப்பதைக் காண முடிகிறது. காரணத்தைக் கண்டறிவதில் வெளிநாட்டு உதவியை நாடுவதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது.

உண்மையில் சதிநாச வேலைதான் காரணமெனக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் கூறியுள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

இன்றைய ஜனாதிபதி முழு நாட்டினதும் அதிகப் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கமும் கூடுதல் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சித் தலைமையை நெருக்கடிக்குள்ளாக்கவோ, மக்களை அவஸ்தைக்குள்ளாக்கவோ எவரும் முற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்பதை அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

SHARE