போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கின்றன.

315

 

 போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கின்றன.
seelanrygesye
கடந்த வாரம் ஆங்கில வார இதழ் ஒன்றில் வெளியான பேட்டியொன்றில் எதிரணியின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து இந்தச் சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. போரின் கடைசி நாட்களில் புலிகளின் சில தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ நேரடியாக வழங்கிய உத்தரவே காரணம் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

அப்போது சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு சரணடையும் புலிகளை விட்டு வைக்காமல் கொன்று விடுமாறு கோத்தாபய ராஜபக்ஸ நேரடியாகவே உத்தரவிட்டிருந்தாக பின்னர் அறிந்து கொண்டதாக சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் உடனடியாகவே இதை மறுத்தது. அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்றும் சரத் பொன்சேகா பொய் சொல்வதாகவும் கூறியது.

மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க செய்தியாளர்களிடம் பேசும்போது- அவர்கள் சரணடைய வரவில்லை வெள்ளைக்கொடியுடன் வந்து தாக்குதல் நடத்த முயன்றார்கள் என்று கூறியிருந்தார். அதேவேளை, போரின் போது நடந்த சம்பவங்களை வெளியிட்டதற்காக சரத் பொன்சேகா மீது சட்டநடவடிக்கை எடுப்பது பற்றியும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதுபற்றிய செய்திகள் வெளியானதும் சரத் பொன்சேகா தான் அப்படிக் கூறவேயில்லை குறிப்பிட்ட பத்திரிகை தனது கருத்தைத் திரிபுபடுத்தி விட்டது என்று தெரிவித்திருந்தார். தனது கருத்தை திரிபுபடுத்தி விட்டதாக ஊடகங்களின் மீது பழியைப் போடுவது சரத் பொன்சேகாவைப் பெர்றுத்தவரையில் ஒன்றும் புதிய விடயமல்ல. அதேவேளை குறித்த பத்திரிகையும் தமக்கு சரத் பொன்சேகாவிடம் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை- என்று கூறியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகா போட்டியிடும் நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. போரின் கடைசி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் தலைவர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் தளபதி ரமேஸ் ஆகியோரும், அவர்களின் குடும்பத்தினரும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடையச் சென்றபோதே படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக புலிகள் கூறியிருந்தனர்.
அதேவேளை புலிகள் சகல உத்திகளையும் கையாண்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்ததால் வெள்ளைக்கொடியுடன் வந்த இவர்களை சரியாக அடையதாளம் காணமுடியாது போனதாக நியாயம் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முன்வந்ததை ஐநாவின் அதிகாரியாக இருக்கும் நம்பியார் மற்றும் நோர்வேயின் அமைச்சராக இருந்த எரிக் சொல்ஹெய்ம் போன்றோர் முன்னரே உறுதிசெய்திருந்தனர். இதுபற்றி இலங்கை அரசுடன் பேசப்பட்டு சரணடைவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் பேசி இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொண்ட விவகாரம் களமுனையில் உள்ள படையினருக்குத் தெரியாது என்பது போலவும் குறுகிய நேரத்துக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது சரத் பொன்சேகா, கோத்தாபயவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக கூறியதை அடுத்து இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. காரணம் என்னவெனில், புலிகளின் தலைவர்கள் சரணடைய விரும்புவது பற்றி பசில் ராஜபக்ஸ மூலம் கோத்தாபய ராஜபக்ஸ அறிந்து கொண்டதாகவும், இதையடுத்தே அவர் சரணடைய வருவோரை கொன்று விடுமாறு கூறியதாகவும் சரத் பொன்சேகா கூறியிருந்தார். சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்தின் மீது எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது கேள்வி. அதேவேளை, தான் அப்படிக் கூறவில்லை என்று சரத் பொன்சேகா வெளியே கூறியிருப்பினும், குறித்த பத்திரிகைக்கு எழுத்து மூலம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர் இந்தச் சர்ச்சையை கிளற நினைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுபான்மைத் தமிழ்மக்களின் வாக்குகளை அடிப்படையாக வைத்து இப்படியொரு தகவலை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்த நினைத்திருக்கலாம். அதேவேளை இந்தக் கருத்து படையினருக்கு களங்களத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், அரசாங்கதின் மீது அவப் பழியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் பெரியளவிலான பிரசாரங்களைச் செய்யத் தொடங்கியது அரசு. இதைப் பார்த்து சரத் பொன்சேகா பயந்து விட்டார்.
சரத் பொன்சேகாவின் பலமே புலிகளுக்கு எதிரான போரில் பெற்றுக் கொடுத்த வெற்றிதான். இந்த நிலையில் படையினருக்கு களங்களத்தை ஏற்படுத்தி விட்டதான கருத்து வலுவடைந்தால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. படையினரைக் காட்டிக் கொடுத்து விட்டதாக அரசாங்கம் போட்ட கூச்சலினால் தான் சரத பொன்சேகா- தான் அப்படிக் கூறவில்லை என்று குத்துக்கரணம் அடித்தார். அவர் குத்துக்கரணம் அடித்தாலும் இந்த விவகாரத்துக்கு இப்போது ஒரு முற்றுப்புள்ளி வரப் போவதாகத் தெரியவில்லை. காரணம் அது வேறோரு கட்டத்துக்கப் போய் விடடதாகவே தெரிகிறது.
இது இன்னொரு பூதாகார வடிவம் எடுக்கும் போலத் தோன்றுகிறது. சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஐநாவும் ஒரு விசாரணையை ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் கிரொவ்லி இதை உறுதி செய்திருக்கிறார். இந்த விசாரணைக்கு அமெரிக்கா உதவும் என்றும் இதுபற்றிய அறிக்கை ஒன்றை ஏற்கனவே ஐநாவுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். அதேவேளை ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையாளர் ஜோன்ஸ் ஹோம்ஸ்- கடந்த வாரம் சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றிலும்- புலிகளின் அரசியல தலைவர்கள் சரணடையப் போவதாக அறிவித்ததாகவும் அது பற்றி உரிய அதிகாரிகளுக்கு தாம் அறிவித்தாகவும் கூறியிருக்கிறார்.
  • புலிகளின் தலைவர்கள் சிலர் சர்வதேச தலையீட்டைப் பெற்று சரணடைய முன்வந்தது இலங்கைக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அல்ல. இது அரசங்கத்தின் பக்கம் உள்ள ஒரு பெரிய பலவீனம். அவ்வாறு சரணடைய முன்வந்தவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டது இன்னொரு பலவீனம்.

களமுனையில் இருந்த படையினருக்கு புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்த தகவல் கிடைக்காததால தான் அவர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறும் நியாயம் எந்தளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் சர்வதேசம் மெத்தனப் போக்குடன் நடந்து கொண்ட போதும், இப்போது இது பெரியதொரு விவகாரமாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில்- நோர்வே ஊடாகவே புலிகளுக்கு வெள்ளைக்கொடியுடன் சென்று சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஐ.நா, நோர்வே, அமெரிக்கா போன்ற சர்வதேச தலையீடுகள் இதில் இருந்துள்ளதால் இது அவ்வளவு இலகுவான விடயமாக இலங்கை அரசுக்கு இருக்கப் போவதில்லை. அதேவேளை போரின் சகல கட்டங்களிலும் இந்தியா தொடர்புபட்டிருந்தாகவும், அனைத்தையும் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை அரசாங்கம் கூறியிரந்தது. எனவே இந்தியாவும் இதுபற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் காணப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா இதுபோன்ற பல உண்மைகளை அவிழ்த்து விடலாம் என்ற அச்சம் அரசதரப்புக்கு இருக்கவே செய்கிறது. இதனால் அவரை போட்டியில் நிற்கவிடாமல் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதுமுடியாத கட்டத்துக்குச் சென்றதும் அவர் மீது ஏதாவது வழியில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முற்படலாம் என்றே தெரிகிறது. இந்த சர்ச்சையை சரத் பொன்சேகா ஆரம்பித்து வைத்தாலும் அவர் அதைத் தொடர்வதற்கு வாய்ப்பில்லை. காரணம் அது சிங்கள வாக்காளர்கள் மத்தியில் படையினரைக் காட்டிக் கொடுத்தவராக அடையாளப்படுத்தி விடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் இதை இனிமேல் கையில் எடுக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வராது. காரணம் அது எல்லைகளைத் தாண்டி விட்டது. என்றோ ஒருநாள் இந்த விவகாரம் இலங்கை அரசின் கழுத்தை நெரிக்கவே போகிறது.

கொழும்பிலிருந்து சுபத்ரா

பிரபாகரனின் மகன்பாலச்சந்திரன்,மகள் துவாரகா, மனைவி மதிவதனிபிரபாகரன், நடேசனின், மனைவி மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு கொலைப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் உலக செல்வந்த நாடுகள் இலங்கையில் இவ்வாறான குற்றச் செயல் இடம் பெற்றிருக்குமானால், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றன. இலங்கையின் வரலாற்றில் மகிந்த, கோதாபய போன்றவர்கள் யுத்தத்தின் வீரர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்டதுடன், சிலர் தம்மை துட்டகைமுனுவாக காட்டிக்கொள்ள முயற்சித்தனர்.


SHARE