மே 18 விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது

383

 

மே 18 விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
250809-001 rape-tamil---போர்க்குற்றம்
இது தொடர்பாக அவரது நீண்ட ஆய்வுக்கட்டுரையில் நடேசன் உட்பட சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது:-
சரணடைதல் தொடர்பான பேச்சுக்கள்
இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.
இதன்படி, சரணடைதல் தொடர்பான விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்டு பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.
மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் விடுதலைப்புலிகளின் சார்பாக சரணடையும் விடயம் தொடர்பாக பேசியுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களாக பிரிட்டன் ஊடகவியலாளர் மேரி கொல்வின் ஐ.நா.செயலளார் நாயகத்தின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரை அதிகாலை 5.30 மணிக்கு நித்திரையால் எழுப்பி, விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதாக அறிவித்துள்ளார்கள் என்றும் ஐ.நா. அதிகாரி என்ற வகையில் விஜய் நம்பியார் அங்கு சென்று அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு பதிலளித்த விஜய் நம்பியார், இது தொடர்பாக சிறிலங்கா அரசஅதிபருடன் தான் பேசியதாகவும் சரணடைபவர்களின் பாதுகாப்புக்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, நடேசனுடன் தொடர்பிலிருந்த இன்னொருவரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பியான அரியநேந்திரன் சந்திரகாந்தன் சிறிலங்கா அரசதலைவருடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி சரணடையும் நடைமுறைகள் தொடர்பாக அரசுக்கு புலிகள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்துவந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும்போது அங்கு தான் செல்லவிரும்புவதாகவும் சந்திரகாந்தன் எம்.பி மகிந்தவிடம் கூறினார். ஆனால், அதற்கு பதிலளித்த மகிந்த, போர் நடைபெறும் பகுதிக்கு செல்வது பாதுகாப்பு அல்ல. அங்கு செல்லவேண்டாம். ”பெருந்தன்மையும் ஒழுக்கமும் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர்” புலிகளின் தலைவர்களின் பாதுகாப்புக்கு நிச்சயம் உத்தரவாதமளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. – சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகவும் அதனால் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.
புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு
இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிரகாரம், நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.
அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் (10 – 15 பேர்) கைகளில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் (40-45 பேர்) சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.
நடேசன் தலைமையிலானோர் படுகொலை!
நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.
காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்குமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.
இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.
அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?
அல்லது
இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?
அல்லது
உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா – என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.
ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.
கொடூரமான மனிதப்பேரழிவை பற்றி எழப்போகின்ற கரிசனைகளையும் அதனையொட்டி எழுப்பப்படபோகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது, தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவை பாதுகாத்துவரும் ”சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர், நெருக்கடியான நிலையொன்றுக்குள் தள்ளப்படுவார்கள்.
இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE