அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை

388

 

சேலம்,

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அழகு நிலைய உரிமையாளர்

சேலத்தை அடுத்த காசக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (வயது38). இவர் அதே பகுதியில் அழகுநிலையம் நடத்தி வந்தார். இந்தநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, அவருக்கும் சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேலம் பள்ளப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட மெய்யனூர் ஆலமரக்காட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர்.

கழுத்து அறுத்து கொலை

இந்தநிலையில், கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி இரவு சாந்தி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மறுநாள் காலை இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக விசாரிக்க அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தலைமை ஏட்டுகள் பிரபாகரன், முத்துசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் இந்த கொலை தொடர்பாக சேலம் பால்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ரெட்டைக்கரடு பகுதியை சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார்(23) மற்றும் அவருடைய நண்பரான ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகர் நேதாஜி தெருவை சேர்ந்த முரளி(22) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் விஜயகுமார் தண்ணீர் கேன் விற்பனை செய்து வந்தார். முரளி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அரிவாளால்…

போலீசாரின் விசாரணையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சாந்தியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், காசக்காரனூர் பகுதியில் சாந்தி வசித்தபோது அவருடைய வீட்டுக்கு விஜயகுமார் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவத்தன்று மாலை விஜயகுமார், தனது நண்பர் முரளியுடன் சாந்தி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த சாந்தி, விஜயகுமாரிடம் நான் உன்னை மட்டும் தானே இங்கே வரச்சொன்னேன், நீ ஏன்?, வேறு ஒருவரை அழைத்து வந்துள்ளாய் என்றுக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் கேட்ட தொகையும் அவர் கொண்டு வராததால் சாந்தி தகாத வார்த்தையால் திட்டினார்.

ஆயுள் தண்டனை

இதனால், ஆத்திரமடைந்த விஜயகுமார், சாந்தியை கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து விஜயகுமார், முரளி இருவரும் சேர்ந்து காய்கறி வெட்டும் அரிவாளால் சாந்தியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. சாந்தியின் கழுத்தை அறுக்கும் போது விஜயகுமார், முரளி இருவருக்கும் கைவிரல்களில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக அவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் விளக்கம் அளித்தனர்.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறுவதாக நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் வந்தது. இதில், சாந்தியை கொலை செய்த விஜயகுமார், முரளி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ரவீந்திரன் தீர்ப்பு அளித்தார்.

SHARE