90 களில் சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சிக்கு தலைமை கொடுத்தவர் கங்கொடவில சொமஹிமி-முஸ்லிம்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் பல பிரசாரங்களை முன்னெடுத்தவர்

295

 

  வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த இனவாத அமைப்பும் இந்தளவு வளர்ச்சியடைந்ததுமில்லை. எழுச்சியடைந்ததுமில்லை. குறுகிய காலத்தில் இந்தளவு வேலைத்திட்டங்களை சாத்தியப்படுத்தியதுமில்லை. பொதுபல சேனா இப்போது இக்கட்டான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கிறது. தமது வரலாற்றுப் பாத்திரம் காலாவதியாகி வேறு சக்திகள் அந்த இடத்தை நிரப்பும் நிலை தோன்றியிருக்கிறது. தமது இருப்பை நிலைநிறுத்தி அடுத்த நிலைக்கு உயர்த்துவதெனில் தமது தந்திரோபாயங்களை மாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நிர்ப்பந்தத்தின் விளைவாகவே பொதுபல சேனா ஒரு அரசியல் கட்சியாக உருவெடுப்பதற்கான ஆயத்தங்கள் நடக்கின்றன.
ஒரு அரசியல் அழுத்தக் குழு என்கிற நிலையிலிருந்து அரசியல் கட்சியாக பரிமாற்றம் பெறுவது என்பது பொதுபல சேனாவின் அரசியல் நீட்சியே. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் பொது பல சேனா பெரிய அளவில் நடத்திய மாநாட்டின் போது சிங்கள பௌத்த அரசியல் தலைவராக ஒருவர் தம்மால் அறிவிக்கப்படவிருக்கிறார் என்று பெரிதாக விளம்பரம் செய்த போதும் அது நடக்கவில்லை. சிங்கள பௌத்த உணர்வை சீண்டி ஏனையோரை சவால் விடும் பணி சோர்வுற்றுள்ள நிலையில் தற்போது பல முனை போட்டிகளையும் கூடவே எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இந்த நிலைமை மேலும் மோசமடைவதற்குள் தமது அரசியல் பிரவேசத்தை செய்யும் நிர்பந்தத்தில் இருக்கிறது பொது பல சேனா. பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலை தவறவிட முடியாது. எனவே மே 6ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளரை சந்தித்து தம்மை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான வழிகளை ஆராய்ந்தது. அத்தோடு இன்னும் ஓரிரு நாட்களில் தமது கட்சியை அறிவிக்கவும் இருப்பதாக ஊடக மாநாட்டில் அறிவித்திருக்கிறார்கள். புதிய கட்சியானது பொது பல சேனாவின் முன்னணி அமைப்பாக இருக்கும் என்றும் முற்றிலும் பௌத்த பிக்குகளை கொண்ட அரசியல் கட்சியாக இருக்குமென்றும் தற்போது அறிவிக்கப்பட்டாலும் கூட அதற்கான சாத்தியப்பாடுகள் சந்தேகத்துக்குரியதே. அப்படி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் அதுவே பிக்குமார்களை மட்டுமே கொண்ட ஒரே கட்சியாக திகழும். சிங்கள பௌத்த ராஜ்ஜியத்தை உருவாக்குவதே தமது ஒரே இலக்கு என்று கடந்த சில மாதங்களுக்கு முன் வரை கூறி வந்த பொது பல சேனா தற்போது சற்று அடக்கி வாசிக்க நேரிட்டதற்கான காரணம் முன்னர் இருந்த சாதகமான அரசியல் சூழல் தற்போது குழம்பி இருப்பது தான்.
ஆனால் தற்போது சிங்கள பௌத்த இனவாத அமைப்புகளுக்கு இடையில் தோன்றியிருக்கும் போட்டி சிங்கள பௌத்த உணர்வெழுச்சியையே நம்பியிருக்கிறது. எனவே வரும் நாட்களில் இன-மத வெறுப்புணர்ச்சியை தூண்டும் பலம் யாருக்கு அதிகம் உண்டு என்கிற போட்டியில் இவை இறங்கிவிடுமா என்கிற பீதி நிலவுகிறது.
பௌத்த துறவிகள் அரசியலில் ஈடுபடும்பட்சத்தில் அவர்களுக்கு உரிய பிரதான கடமைகளை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்பட்டுவிடும் என்பது ஒருவாதம். அதுபோல தேர்தலில் உள்ள விருப்பு தெரிவு முறையானது பிக்குகளை வேறு பிரித்து பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. சமமாக மதிக்கப்படுகின்ற பிக்குகளை பிரித்தறிந்து பார்க்கும் மனநிலை பௌத்தத்தை பின்பற்றுபவர்களுக்கு வந்து விடக்கூடாது.
அமரபுர நிகாய
இலங்கையின் பௌத்த சங்க அமைப்புமுறையை நிகாய என்று அழைப்பார்கள். அது பிரதான மூன்று “நிகாய”க்களாக  இயங்கி வருகின்றது. சீயம் நிகாய, அமரபுர நிகாய, ரமாக்ஞ நிகாய என்கிற இந்த மூன்று நிகாயக்களும் சாதி ரீதியில் பிளவு பட்டு இயங்குபவை. யாழ்ப்பாண சாதிய கட்டமைப்போடு ஒப்பிட்டு கூறுவதானால் முறையே வெள்ளாளர், கரையார், தலித் சமூகங்களாக இந்த மூன்றும் பிளவுற்றிருப்பதாக கொள்ளலாம்.
சிங்கள வெள்ளாளர்களான கொவிகம சாதியின் ஆதிக்கம் சிங்கள அரசியல் சூழலில் எத்தகையது என்பது பற்றி நிறையவே சமகால ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஆதிக்கம் பௌத்த நடவடிக்கைகளில் செல்வாக்கு செழுத்திவிடக்கூடாது என்பதற்காக அமரபுர நிகாய ஒரு முக்கிய அறிவித்தலை கடந்த 2014 பெப்ரவரி மாதம் அறிவித்தது. அதன்படி அமரபுர நிகாயவை சேர்ந்தவர்கள்  அரசியலில் ஈடுபடுவதை தடை செய்வதாக அமரபுர நிகாய தமக்கு கீழுள்ள ஏனைய 21 நிகாயக்களுக்கும் அறிவித்தது. சீயம் மற்றும் ரமாக்ஞ நிகாயக்களுக்கும் அதனை ஒரு கோரிக்கையாக முன்வைத்தது. ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த அத்துரலிய ரதன தேரர் அமரபுர நிகாயவை சேர்ந்தவர். ஏற்கெனவே பாராளுன்ற உறுப்பினராக அவர் இருப்பதால் என்ன செய்வது என்கிற ஒரு கேள்வி எழுந்தது. இது நடந்து முடிந்தவற்றுக்கு இல்லை இனி நடக்கப் போகின்றவற்றுக்குத் தான் இந்த நிபந்தனை என்று அறிவிக்கப்பட்டது. எனவே அதுரலியே ரதன தேரரின் தற்போதைய நிலையை அது பாதிக்காது என்றனர். அதுரலிய ரதன தேரர் இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லை என்கிற அறிவித்தலை ஏற்கெனவே ஒரு பேட்டியில் அறிவித்துவிட்டார். சமீப காலமாக பௌத்த துறவிகளின் அரசியல் செயற்பாடுகள் பௌத்த துறவிகளின் மீதான நன்மதிப்பை கெடுத்துவிட்டன என்று அமரபுர நிக்காயவின் பிரதி செயலாளர் கொஸ்கொட ஸ்ரீமித்த தேரர் அறிவித்திருந்தார்.
இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர். அவர் 2001ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டார். ஆரம்பத்தில் நவ சம சமாஜ கட்சியிலிருந்த அவர் அக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்கார பிரிந்து சென்ற போது அவரோடு சமித்த தேரோவும் வெளியேறினார்.
சமகால பிக்கு அரசியலின் தோற்றம்
90 களில் சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சிக்கு தலைமை கொடுத்தவர் கங்கொடவில சொமஹிமி என்பது எல்லோருக்கும் தெரியும். முஸ்லிம்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் பல பிரசாரங்களை முன்னெடுத்தவர் அவர்.
கிறிஸ்தவர்கள் பௌத்தர்களை மதம் மாற்றுகிறார்கள் என்கிற அவரது பிரச்சாரம் சிங்கள பௌத்தர்களை கொதித்தெழ செய்திருந்தது. அவர் ரஷ்யா சென்றிருந்தபோது 2003 டிசம்பர் 13 அன்று திடீரென்று மரணமானார். பேரினவாத சக்திகளுக்கு அவரது மரணம் அதிர்ச்சியை தந்தது. அவரது மரணம் கிறிஸ்தவ சதி என்று இலங்கையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. சில கிறிஸ்தவ மத ஸ்தலங்கள் தாக்கப்பட்டன. பௌத்தர்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கையை நிறுத்தும் வகையில் சட்டம் கொண்டுவரும்படி டிசம்பர் 29 அன்று ஓமல்பே சோபித்த தேரர் புத்த சாசன அமைச்சின் முன்னால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இறுதியில் அமைச்சர் லொக்குபண்டார மூன்று மாதங்களுக்குள் அதனை செய்வதாக உறுதியளித்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் அதற்குள் பெப்ரவரி 7 அன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கங்கொடவில சோம தேரரின் பணிகளைத் தொடருவதற்காக பிக்குமார் அரசியலில் ஈடுபடவேண்டும் என்கிற கோசம் பலமாக எழுப்பட்டவேளை தான் ஜாதிக ஹெல உறுமய அந்த பணிக்கு தலைமை கொடுத்தது.
பாராளுமன்றத் தேர்தலில் முதலாவது தடவையாக ஜாதிக ஹெல உறுமய தமது 260  வேட்பாளர்களையும் பௌத்த துறவிகளை களமிறக்கியது. 2004ஆம் ஆண்டு நடந்த அந்த தேர்தலின் போது மொத்தம் 5,52,724 வாக்குகளைப் பெற்று மொத்த தேசிய வாக்குகளில் 5.97% வீதத்துடன் 9 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. அதே தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 6,33,654வாக்குகளைப் பெற்று 6.84% வீதத்துடன் 22 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. இரு கட்சிகளுக்குமிடையில் 0.87% வீதமே வித்தியாசப்பட்டாலும் அதிக ஆசனங்களை சிறுபான்மை கட்சி எடுத்துக்கொண்டது என்கிற முனுமுனுப்பை அங்காங்கு காணக்கூடியதாக இருக்கிறது. புதிய தேர்தல் சீர்திருத்த சட்டம் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பேரினவாத தரப்பில் இன்றும் கூறப்பட்டுவருகிறது. 2010ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய 3 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
ஓமல்பே தேரர் பின்னர் 2005 ஜூன் 06 அன்று சுனாமி கட்டமைப்புக்கு எதிராக மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதம் பின்னர் சுனாமி கட்டமைப்பை அரசு கைவிடும் அளவுக்கு கொண்டு சென்றதை மறந்திருக்க மாட்டீர்கள். இந்த இடைக்காலத்தில் யுத்தத்தில் வெல்வதற்கான உளப்பலத்தை இராணுவத்துக்கு கொடுத்தது, சர்வதேச சக்திகளின் தலையீட்டை தகர்த்தது, அரசாங்கத்தை யுத்தத்துக்கு தள்ளுவதற்கான அழுத்தக்குழுவாக செயற்பட்டமை, சிவில் அமைப்புகள் பலவற்றை தோற்றுவித்து சிங்கள பௌத்தர்களை யுத்த ஆதரவு – தமிழர் எதிர்ப்பு மனநிலையை வளர்த்துவிட்டமை போன்றவற்றை தலைமை ஏற்று நிறைவேற்றியது இந்த பிக்கு சமூகம் தான் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். பௌத்த பிக்குகளின் துணையின்றி புலிகளுடனான யுத்தத்தில் சிங்கள தரப்பு வெற்றி பெற்றிருக்கவும் முடியாது என்பது கண்கூடு.
பிக்கு அரசியல் தடை சட்டம்
2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச தனிப்பட்ட சட்டப் மூலமொன்றை முன்மொழிந்தார். அதாவது அரசியலமைப்பின் 91ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம் இனிமேல் மதத்தலைவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட முடியாதபடி திருத்தத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்றார். அரசியலமைப்பின் 91ஆம் பிரிவானது பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதி பற்றி பேசுகிறது. ஜாதிக ஹெல உறுமய விஜயதாசவின்  பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டது. போதிய ஆதரவற்ற நிலையில் அந்த பிரேரணை கிடப்பில் போடப்பட்டது.
பிக்கு அரசியலின் ஆரம்பம்
1946ஆம் ஆண்டு ஜனவரி 13அன்று மாத்தளையில் டீ. எஸ்.சேனநாயக்க ஆற்றிய உரையொன்றின் போது “சமீபகாலமாக பிக்குமார் அரச சபை கலரியில் நடமாடுகிறார்கள். அரசியல் கூட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டு அவர்கள் தமக்குரிய மரியாதையை கெடுத்துக்கொள்கிறார்கள்.” என்று கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை பௌத்த சங்கத்துக்குள் பலவித விவாதங்களை ஏற்படுத்தியது. இதனால் டீ. எஸ்.சேனநாயக்கவை வல்பொல ராகுல தேரோ கடுமையாக தாக்கி உரையாற்றினார். இதன் விளைவாக வித்தியாலங்கார பிறிவேன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மிகப் பிரபலமான அந்த அறிக்கை அது. அதன் பின்னர் 1948ஆம் ஆண்டு வல்பொல ராகுல ஹிமி “பிக்குகளின் பாரம்பரிய உரிமை” என்கிற பிரபல நூலை வெளியிட்டார். அந்த நூலின் மூலம் தான் பிக்குமார் அரசியல் செய்வதற்கு, எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவதற்கும், அரசியலுரை ஆற்றுவதற்கும், வெளியீடுகளை செய்வதற்கும் உரிமை உண்டு என்று கூறியது அந்த நூல். அந்த நூலே பல பிக்குமாரை பிற்காலங்களில் அரசியல் ரீதியில் பலப்படுத்தியது எனலாம்.
1953ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜோன் கொத்தலாவல பிக்கு அரசியல் குறித்து கூறியவை இன்றும் பலர் மேற்கோள் காட்டுவது உண்டு. “மோசடிப் பிக்குகளின் காவியைக் கழற்றி பின் பகுதியில் தாரை பூசுவேன்” என்றார். ஐ.தே.க கட்சி எப்போதுமே பிக்குகளுக்கு எதிரான கட்சி தான் என்று இன்றளவும் கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
1956 பெப்ரவரி 11 இல் கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் வைத்து ஸ்ரீ லங்கா பௌத்த மகா சங்கமும், அகில இலங்கை பிக்கு சமித்தி சம்மேளனமும் இணைந்து ஐக்கிய பிக்கு முன்னணி (எக்சத் பிக்சு பெரமுன) ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு அமைப்புகளுக்கும் பிரதிச் செயலாளராக இருந்தவர் பின்னர் பண்டாரநாயக்கவை கொன்ற புத்த ரக்கித்த தேரோ.  அந்த அமைப்பே “சிங்களம் மட்டும்” போராட்டத்தை முன்னெடுத்தது.
1956 மார்ச் 03அன்று இந்த ஐக்கிய பிக்கு முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கூட்டத்திற்கு சிறப்பதிதியாக அழைக்கப்பட்டவர் அப்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பண்டாரநாயக்க. அந்த கூட்டத்தில் தான் தான் பதவிக்கு வந்தால் தனிச் சிங்கள சட்டத்தை கொண்டுவருவதாக அங்குள்ள பிக்குகளுக்கு வாக்குறுதி அளித்தார் பண்டாரநாயக்க. 56இல் பண்டாரநாயக்க பெற்ற பெருவவெற்றியின் பின்புலத்தில் பௌத்த அமைப்புகளின் பாத்திரம் அளப்பெரியது. அந்தத் தேர்தலில் ஐ.தே.க 8 ஆசனங்களை மட்டுமே பெற்றது. பின்னர் புத்த ரக்கித்த தேரோவால் பிரதமர் பண்டாரநாயக்க 1959 சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரதமர் பண்டாரநாயக்காவை கொலை செய்த புத்த ரக்கித்த தேரோவை நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரும்போது.
தமது அரசியல் இலக்கை அடைவதற்காக பௌத்த பிக்குமார் மேகொள்ளும் உண்ணாவிரத போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள் என்பவற்றுக்கு அரசால் பயபக்தியுடனான மரியாதை கொடுக்கப்படுகிறது. அதிக சந்தர்ப்பங்களில் நிறைவேற்றவும் படுகிறது.
இன்றைய பிரதான கட்சிகளில் மாத்திரமல்ல ஜே.வி.பி உள்ளிட்ட பல இடதுசாரி கட்சிகளிலும் கூட பிக்கு முன்னணி என்கிற உப அமைப்பு உண்டு.  80களில் ஜே.வி.பியின் அரசியல் பலத்தை கட்டிக்காத்ததில் பல பௌத்த பிக்குகளுக்கு பங்குண்டு. தேசபக்த பிக்கு முன்னணி, மனிதாபிமான பிக்கு இயக்கம், அகில இலங்கை முற்போக்கு பிக்குகள் இயக்கம், அனைத்திலங்கை பல்கலைக்கழக பிக்கு அதிகார சபை போன்ற பெயர்களில் ஜே.வி.பிக்குள் பல உப அமைப்புகள் இயங்கியிருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்த பல போராட்டங்களில் அவை குதித்திருக்கின்றன. அதுபோல அவை பேரினவாத நடவடிக்கைகளிலும் அதிகம் ஈடுபட்டிருக்கின்றன. நாட்டில் பௌத்த பிக்குமாருக்கு வழங்கப்படும் மரியாதையும் கௌரவமும் ஏனைய மதத் தலைவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது தெரிந்ததே.
72ஆம் ஆண்டு அரசிலமைப்பின் மூலம் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை பௌத்தமத அரசியலை உறுதி செய்ததுடன் அசுர பலத்தையும் கொடுத்திருக்கிறது.
பிரபல இனவாத சித்தாந்தி பேராசிரியர் நளின் டி சில்வா 18.05.2014  திவய்ன பத்திரிகைக்கு எழுதிய பத்தியில் “தமிழ் இனவாதத்தை தோற்கடிக்கப்பட வேண்டுமெனில் பௌத்த தலைமையும், கல்வியும் பிக்குகள் வசம் ஒப்படைக்கப்படவேண்டும்” என்கிறார்.
உலகமுழுவதும் அரசாட்சியில் மதத்தின் செல்வாக்கு எங்கெல்லாம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் ஏற்றத்தாழ்வுகளும், அநியாயங்களும், அட்டூழியங்களும் நிகழ்ந்துள்ளதைத் தான் வரலாறு கற்பித்திருக்கிறது. இலங்கையில் சிங்கள இனவாதமும் பௌத்த மதவாதமும் சமாந்தரமாக கைகோர்த்து வளர்ச்சியுற்று வந்திருக்கின்றன. சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்கள் அன்னியர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்கள பௌத்தம் புனித நிலைக்கும் ஏனையவை வெறுப்புணர்ச்சிக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறது. இனவாதம் மதத்தின் துணையுடன் கோலோச்சுவதை வசதியாக ஆக்கியிருக்கிறது. நாளடைவில் சிங்களத் தேசியவாதத்தின் மீதான குற்றச்சாட்டுகளை பௌத்த மதத்தின் மீதான குற்றச்சாட்டுகளாக புனையும் வரை வளர்ந்துவிட்டிருக்கிறது. தேசியம் ஒரு கற்பிதம் என்று சொல்லிகொள்ளலாம். ஆனால் மதத்தை அப்படி கூறி தப்பிவிட முடியாதே. எனவே சிங்களப் பேரினவாதம் மதத்தின் துணையுடன் தான் இருப்பு கொண்டுள்ளது.
SHARE