சிங்களப் பாணியில் பிரிந்து நின்று அரசியல் நடத்தும் முஸ்லிம் தலைமைகள் – வீ.தேவராஜ்

284

 

  • sampanthan and hakkemஇலங்கை அரசியலில் தனிவழியில் தனித்துவ அரசியல் நடத்தும் முஸ்லிம் மக்கள்.
  • தம்மீதான அவதூறுகளுக்கு அப்பால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது சாதூர்யத்தால், சாணக்கியத்தால் முஸ்லிம் மக்களுக்கெனச் சாதித்தவைகள் பல.
  • முஸ்லிம் மக்களுக்கும் அவர்கள் தலைமைகளுக்கும் தென்கிழக்கு அலகு என்பது காலாவதியாகிய கருத்தியல். கிழக்கே முஸ்லிம் தேசமென்ற கருத்தியல் இன்று கருக்கட்டிவிட்டது.
  • தெற்கின் அச்சுறுத்தல் கிழக்கினை தமது பாதுகாப்பின் கவசமாக மாற்றியமைக்க புறப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள்.

இன்றைய நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகப் பற்றற்ற பங்காளிகளாக இருப்பதினால் முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் குறித்த ஒரு மாயை தோற்றுவிக்கப்படுகின்றது.

அதாவது தமிழ் மக்கள் கடந்த 30 வருட காலப் போருக்குப் பின் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்குரியதைப் பெற்று சந்தோஷமாக வாழ்வதாகவும் முஸ்லிம் மக்கள் பெரும் துன்பத்திற்குள் வீழ்ந்து கிடப்பதாகவும் அவர்களுக்கென தமிழ் மக்களுக்கு இருப்பது போன்ற ஒரு தலைமை அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றதொரு தலைமை இல்லாமல் இருப்பது துரதிஷ்டமானது என்பன போன்ற பரப்புரைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றது.
இதற்கும் அப்பால் முஸ்லிம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள், சலுகைகள் கூட தமிழர் தரப்பால் திட்டமிட்டு தடுக்கப்படுவதாகவும் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன.

முஸ்லிம் மக்களின் இந்த நிலைக்குத் தமிழர் தரப்பு மாத்திரமல்ல முஸ்லிம் தலைமைகளும் காரணமாக உள்ளன. முஸ்லிம் தலைமைகள் மக்களை மறந்த நிலையில் செயற்படுகின்றன. சுயஇலாப நோக்கில் தமக்காகவும் தம்மைச் சுற்றியுள்ள வட்டத்தினருக்குமாக அரசியல் செய்கின்றனர் என்ற வசையும், கண்டனங்களும் முஸ்லிம் தலைமைகள் மீது மழையாகப் பொழியப்படுகின்றன.

உண்மையிலேயே தமிழர் தரப்பு குறிப்பாக சாதாரண பொது தமிழ் மகன் இந்த நல்லாட்சியில் நன்மைகளைப் பெற்றுள்ளனரா? தமிழ்த் தலைமைகள் நல்லாட்சிக்காரர்களுடன் கொண்டுள்ள நேச உறவானது தமது தொப்புள் கொடி உறவான தமிழ் மக்களின் வாழ்வில் முஸ்லிம் மக்களிடம் பிரசாரப்படுத்தப்படுவது போன்று சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளதா என்பதற்கு பிரசார பீரங்கிகளாக முஸ்லிம் மக்களிடம் வலம் வருபவர்கள் தமிழ் மக்களிடம் வினவினால் தமது தலைமைத்துவங்கள் பற்றியும் தமிழ்த் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததையும் விளாவாரியாகத் தெரிவிக்கத் தயங்கமாட்டார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில் புட்டும் தேங்காய்ப் பூவுமாக உறவு கொண்டுள்ள முஸ்லிம் தரப்புக்குத் தமிழ் மக்களின் நாதியற்ற நிலை நன்றாகவே விளங்கும், புரியும், முஸ்லிம் மக்களுக்கும் தெரியும். இந்த விடயத்தில் தமிழ் மக்களால் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படியெனில் முஸ்லிம் தரப்பில் இருந்து வரும் இத்தகைய பிரசாரங்களின் நோக்கமென்ன?

முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கண்டன மற்றும் விமர்சனப் பிரசாரங்களின் மர்மம் என்ன?
இது குறித்து தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைத்துவங்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஏனெனில் இன்று முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல் என்பன ஒரே நேர் கோட்டில் பயணிக்கின்றன. சிங்கள ஆளும் தரப்பைப் பொறுத்து காலம் காலமாகப் பிரிந்து நின்று சிறுபான்மை மக்களை ஆண்டு வந்தனர். அதாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக பிரிந்து நின்று போட்டியிடுபவர் யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் நிகழ்ச்சி நிரலில்

மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
(1) சிறுபான்மை இனங்களுக்கு எதிரான போக்கு.
(2) இலங்கையைப் பௌத்த புனித பூமியாக்குதல்.
(3) அத்துடன் சிங்கள மக்கள் தொடர்பான அரசியல், சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தல்.

இந்த மூன்று திட்டங்களும் சிங்கள ஆளும் வர்க்கத்தைப் பொறுத்து இவைதான் தேசியத் திட்டங்கள். இந்தத் தேசியத்திற்குள் சிறுபான்மை இனங்களுக்கு இடம் இல்லை என்பதும் உறுதியான நிலைப்பாடாகும்.

வரட்சிக்காகவும் வெள்ளப் பாதிப்புக்கெனவும் நிவாரணங்களை சிங்கள மக்களுக்கு சிங்கள ஆளும் தரப்பு வாரி வழங்குகின்றது. ஆனால் இந்தப் பாதிப்புக்களில் இருந்து நிரந்தரமாக மீள்வதற்கான எவ்விதமான உருப்படியான திட்டங்களை முன்வைப்பது பற்றி சிங்கள ஆளும் தரப்பு இதுவரை யோசிப்பதும் இல்லை. முன்வருவதும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரமானியமாக வருடாந்தம் 50 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு வழங்கினார்.
ஆனால் வெயில், குளிர், பனி என்று பாராது இலங்கைக்கு அந்நியச் செலவாணியில் பெரும் பகுதியை ஈட்டிக் கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணங்கள் ஒரு போதும் எட்டியதில்லை. அது மாத்திரமல்ல அந்த மக்கள் உயிர் வாழ்வதற்கான கொடுப்பனவாக வழங்கப்படும் ஊதியம் மாத வருமானமாக இன்றி நாட்கூலியாக அந்த அப்பாவித் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு மானியங்களாகவும் இலவசங்களாகவும் துக்கிக் கொடுத்த மஹிந்த அரசாங்கமும் சரி இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் சரி கூட்டு ஒப்பந்தம் குறித்து கவலையின்றி உள்ளது. கையகல நிலம் கூட இன்றி இன்று சுமார் 15 இலட்சம் மக்கள் நாட்டிற் கூட்டமா இருப்பதற்கும் இந்த சிங்கள ஆளும் அரசாங்கமே காரணமாகும்.

2. வடக்கு கிழக்கில் தமிழர் தாயகம் துண்டாடப்படுகின்றது. சிங்களக் குடியேற்றங்களாலும் இராணுவக் குடியிருப்புக்களாலும் 2030 ஆம் ஆண்டிளவில் நிரம்பி பிதுங்கி நிற்கப் போகின்றது.

3. போரின் பாதிப்புக்களில் இருந்து மீள முடியாத நிலையில் அதாவது அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் வடக்கு கிழக்கு போராடிக் கொண்டிருக்கின்றது.

4. காணாமல் ஆக்கப்பட்டோர் சாட்சியங்களின்றி அரங்கேறிய யுத்தம் விழுங்கிய உயிர்கள் பற்றிய அடையாளமோ விபரமோ இன்றி மக்கள் நடைப்பிணமாக உள்ளனர்.

5. அரசியல் தீர்வு நோக்கி ஆயுதம் ஏந்தியோர் இன்று கை, கால்கள் இழந்து ஊனமாகி மனமும் ஊனமாகி வீதியில் நிற்கின்றனர்.

6. குடும்பத் தலைவர்களை இழந்து தத்தமது குடும்பங்களைக் கொண்டு நடத்த இயலாது பெண்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

7. தமிழினத்தின் விடிவுக்காகப் போர்க்களம் புகுந்த போராளிகளும் வீர மங்கைகளும் கையேந்தி நிற்கின்றனர்.

8. தமிழர் பொருளாதாரம் படுத்து விட்டது.
9. தமிழர் கல்வி தூக்கில் தொங்குகின்றது.

10. காணிகள் விடுவிப்பில் கண்ணாமூச்சி காட்டப்படுகின்றது.

11. சிறைக் கைதிகள் சிறைகளிலேயே வெந்து கொண்டிருக்கின்றனர். காந்தீயப் போராட்டம் கண்களுக்குத் தெரியவில்லை.

12. அரசியல் தீர்வு கண்ணுக்கெட்டிய தூரத்திலும் காணவில்லை.

13. சம்பூர் அனல் மின்னிலையம் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.

14. சர்வதேச அரங்கில் தமிழர்களுக்குத் தோல்வி.

15. முஸ்லிம் அரசியல் இராஜதந்திரிகளிடமும் தமிழ்த் தரப்பு தோற்றுப்போய் நிற்கின்றது.

16. சிங்கள இராஜதந்திரிகளிடமும் தொடராகத் தோல்விகள். போதாக் குறைக்கு நல்லாட்சிக்காரர்களிடமும் தமிழ்த் தலைமைகள் மண்டியிட்டு கிடக்கின்றன.

17. ஐ.நா.மனித உரிமைப் பேரவையிலும் தமிழ்த் தரப்புத் தோற்றுப்போய் நிற்கின்றது.

18. நல்லாட்சிக்காரர்களுடனான தமிழ்த் தரப்பின் இணக்க அரசியலானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஆழப் புதைப்பதற்கான கல்லறையை தமிழ்த் தலைமைகளே தோண்டிக் கொடுக்கின்றனர்.

19. 2002 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின் அன்றைய அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை எவ்வாறு சமாதானப் பொறியாக மாற்றப்பட்டு தமிழர்களின் அழிவுக்குக் காரணமாகியதோ அதே போல் இன்று நல்லாட்சியும் பொறியாக மாறி தமிழர்களை வேரறுக்கப் போகின்றது.

தமிழ் மக்கள் மூலம் பெறப்பட்ட நாடாளுமன்ற, மாகாண சபை ஆசனங்களுக்குரியவர்களோ நல்லாட்சி வழங்கிய எதிர்க்கட்சிப் பதவியோ முஸ்லிம் தரப்புப் பிரச்சாரம் சுட்டுவது போன்று தமிழர் தரப்புக்கு ஒன்றையும் கொட்டிக்கொடுத்து விடவில்லை. உண்மையில் இந்தப் பிரசாரங்கள் தமிழ் மக்களின் இதயங்களில் ரணத்தைக் கீறிப்பார்ப்பதாகவே உள்ளது.

தமிழ் மக்கள் கடந்த பல தேர்தல்களில் பெரும்பாலும் ஒருமுகமாக நின்று வாக்களித்து தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொண்டனர் என்பது உண்மையே. தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய ஒற்றுமை மூலம் தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டை மிகத் தெளிவாக ஒரு செய்தியாக வெளிப்படுத்தி நின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பிரிந்து குழுக்களாக நின்று முஸ்லிம் மக்களுக்கான அரசியலைச் செய்கின்றனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பிரிந்து நின்று மேற்கொண்ட இணக்க அரசியலால் முஸ்லிம் சமூகம் பெற்ற நன்மைகள் ஏராளம்.

1994 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியேற்ற அமைச்சு முஸ்லிம்களின் கைகளிலேயே போய்ச் சேர்ந்துள்ளது. தற்போது கூட தமிழர் ஒருவர் மீள் குடியேற்ற அமைச்சராக பதவி வகித்த போதும் இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாவே உள்ளார். முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் சாணக்கியத்தால் முஸ்லிம் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமே இது.

உண்மையில் இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் என்பது ஒரே நேர் கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது பிரிந்து நின்று எவ்வாறு சிங்கள சமூகமும் சிங்கள அரசியல்வாதிகளும் ஒரே நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றனரோ அதே அரசியல் பாணியில் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். கிழக்கு மாகாண சபையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் சிங்களத் தரப்புடன் இணைந்து ஆட்சி அமைத்ததுடன் முதலமைச்சர் பதவியையும் தனதாக்கிக் கொண்டது.

முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு கூடத் தமிழர் தரப்புக்குக் கசப்பானதாகவும் தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கு வேட்டு வைப்பதாகவும் இருந்த போதும் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு முஸ்லிம் மக்கள் நோக்கியதாகவே அமைந்துள்ளது.

இன்றைய நிலையில் முஸ்லிம் சமூகத்தினதும் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் அரசியல் பாதை இலங்கையில் எவ்வாறு இருக்க வேண்டுமென்பது குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டுவிட்டன. அதாவது முஸ்லிம்கள் சார்பில் இதுவரை முன்வைக்கப்பட்டு வந்த தென்கிழக்கு அலகு யோசனை என்பது காலம் கடந்த, காலாவதியாகி விட்ட கோரிக்கை என்பதை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் உணரத் தொடங்கிவிட்டனர். வடக்குத் தமிழர்களுக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு என்ற புதிய அரசியல் பாதையில் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்ற தமிழர் தரப்பு கோரிக்கையை முற்றுமுழுதாக நிராகரிப்பவர்களாக முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் உள்ளனர்.

அதே வேளையில் தென்பகுதி, முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்தும் சொர்க்க பூமியாக இருக்கப் போவதில்லை, உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்புடனேயே முஸ்லிம்கள் தென்பகுதியில் காலம் தள்ள வேண்டி வரும். அதாவது எரிமலைத் தீவில் வாழ்வதற்கு ஒப்பானது முஸ்லிம்களின் தென்பகுதி வாழ்க்கை என்பதையும் முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் உறுதியாக நம்புவதினால் முஸ்லிம் மக்களுக்கான தாயாக கிழக்கு மாகாணத்தை உருவாக்கிக் கொள்ள முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமைகளும் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் முதுகெலும்பை முறிப்பதற்கு எதையும் கொய்வதற்குத் தயாராக இருக்கும் சிங்கள ஆளும் தரப்பின் ஆசியும் ஆதரவும் இந்த நகர்வுகளுக்கு உள்ளது என்பது வெளிப்படை. ஒரு புறம் சிங்கள ஆளும் தரப்பை இந்த விடயத்தில் வெற்றி கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்திய கிழக்கு நாடுகளின் நிதியினைக் கொழும்பில் நிலைகொண்டுள்ள தூதரகங்களுக்கூடாகப் பாச்சுவதிலும் பெரும் வெற்றியை ஈட்டிக்கொண்டுள்ளனர்.
இது மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய நகரங்களும் வாழைச்சேனையின் ஒரு பகுதியுமே முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களாகும். மொத்த நிலப்பரப்பில் 10மூ தையே இவர்கள் கொண்டுள்ளனர்.

இந்த முஸ்லிம் நகரங்களின் அபிவிருத்தியை முஸ்லிம் அரசியல்வாதிகள் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். தேங்காயும் பிட்டுமாய் அருகருகில் உள்ள முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தியில் ஒளிர்ந்து கொண்டிருக்க மறுபுறம் தமிழ்க் கிராமங்கள் சோபையிழந்து இடிபாடுகளுக்குள்ளும் வறுமைக்குள்ளும் சோகத்திலும் மூழ்கிக்கிடக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது சேறு வாரி இறைத்துத் தூற்றிக்கொண்டும் தமிழ்த் தலைமைகளால் தமிழ் மக்கள் பெரு நன்மை பெற்றுவிட்டனர், முஸ்லிம் மக்கள் கைவிடப்பட்டுள்ளனர் என்று கூறுவது எத்துணை பொருத்தமற்றது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அதாவது முஸ்லிம் மக்கள் எத்துணை அதிஷ்டசாலிகள், தமிழ் மக்கள் எந்தளவுக்கு துரதிஷ்டசாலிகளாக உள்ளனர் என்பதற்கு இவைகள் சான்றாகும். உண்மையில் தமிழ் மக்கள் மாலுமி இல்லாத கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுவதே பொருந்தும்.

அது மாத்திரமல்ல முஸ்லிம் எம்.பிக்களும் அமைச்சர்களும் முஸ்லிம் மக்களுக்காகவே முன்னின்று உழைக்கின்றனர். முஸ்லிம் அமைச்சர்கள் கூட தேசிய ரீதியிலான முழு நாட்டுக்குமான அமைச்சராக அன்றி முஸ்லிம் அமைச்சர்களாகவே செயற்படுகின்றனர். கிழக்கில் முஸ்லிம் பகுதிகளின் வளர்ச்சி இதற்குப் பெரும் எடுத்துக்காட்டாகும்.

மலையகத்தில் ஆசிரியர் நியமனத்தில் தமக்கான இட ஒதுக்கீட்டுக்கு நீமன்றத்தை நாடி நீதி பெற்றனர். இந்த நீதிக்கு இ.தொ.கா. வழங்கிய முஸ்லிம் எம்.பி. பதவியே காரணமாகியது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்கள் இருந்த போதும் அரச நியமனங்களில் 98% தமதாக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்துத் தமிழ் மக்கள் கோபப்படுவதில் அர்த்தமில்லை. சிங்களத் தலைமைகள் எவ்வாறு சிங்கள மக்களுக்காகவும் சிங்கள இனத்துக்காகவும் ஒத்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கின்றனவோ அது போல் முஸ்லிம் தலைமைகளும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்காக ஒரே நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன.

அதாவது சிங்களத் தலைமைகள் எவ்வாறு அதிகாரத்திற்காக பிரிந்து நின்று போட்டி போட்ட போதும் தமிழர் விவகாரத்திலும், சிங்கள இனம் குறித்தும் ஒன்றுபட்டு நிற்பதுபோல் முஸ்லிம் தலைமைகளும் தமிழர் விவகாரத்திலும் சிங்கள இனம் தலைமை குறித்தும் ஒத்த கருத்துடனான நிகழ்ச்சி நிரல்களுடன் செயற்படுகின்றன.

தமிழ்த் தலைமைகளின் இணக்க அரசியல் தோற்றுப் போய்க்கிடக்கும் பொழுது முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் மக்களும் வெற்றிகரமாக இணக்க அரசியலை முஸ்லிம் மக்களின் மேன்மைக்காக முன்னெடுத்துச் செல்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இராஜதந்திர, சாணக்கியம் குறித்து முஸ்லிம் தரப்பில் இருந்து எழும் விமர்சனங்களும் பிற இனத்தவர்களுக்குப் பெரிய விடயமாகத் தெரிந்த போதும் இந்த விமர்சனங்களும் கண்டனங்களுமே முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் சமூகத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு செயற்படக் காரணமாக அமைந்துள்ளன.

ஏனெனில் இந்த விமர்சனங்களும் கண்டனங்களும் தேர்தல் காலங்களில் முஸ்லிம் தலைமைகளை முஸ்லிம் மக்கள் ஓரங்கட்ட உதவவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தலைமைத்துவங்கள் இன்றைய யதார்த்த சூழ்நிலையைக் கருத்தில் எடுத்து அரசியல் நகர்வை மேற்கொள்ள முன்வர வேண்டும். எனவே அரசியல் தீர்வுப் பொதியை முன்வைத்து முஸ்லிம் தரப்புடனும் ஆளுந் தரப்புடனும் பேச்சுவார்த்தையில் இறங்குங்கள்.

மலையகத் தமிழர்களின் இருப்பு மலையகத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் மலையகத்தில் வெறும் உழைப்பாளர்களாக மட்டும் இருப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கும் அப்பால் கொழும்பு மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்குமான கூலிகளாக உள்வாங்கப்படும் சமூகமாகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஆகையால் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கென அப்பிரதேசம் தாயகப் பிரதேசமாக உள்ளது.
இன்று முஸ்லிம்கள் கிழக்கு தமக்கான பிரதேசமென அடையாளப்படுத்தி அரசியல், சமூக ரீதியிலான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

மறுபுறம் தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கென வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை சிங்களத் தரப்பினர் துரிதப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதாவது கொழும்பு, யாழ் நெடுஞ்சாலை தம்புள்ளயில் திசை மாற்றப்பட்டு திருகோணமலைக் கூடாக முல்லைத் தீவை அடைந்து அங்கிருந்து பரந்தன் சந்திக்கு வந்தே அதிவேக நெடுஞ்சாலை யாழ்ப்பாணத்தைச் சென்றடையவுள்ளது. அது குறித்துத் தமிழ்த் தலைமைகள் அறிந்தும் அறியாதிருப்பது போல் இருப்பதேன்? மொத்தத்தில் முஸ்லிம் தரப்பில் இருந்து தமிழர்கள் குறித்து வெளியாகும் பிரசாரங்கள் ஒரு உளவியல் போராகவே பார்க்க வேண்டியுள்ளது.

இந்த உளவியல் போர் தமிழர்களைப் பலவீனப்படுத்துவதாக அமையும். அதே வேளையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் விரைந்து செயற்படுவதற்குமான உத்தியுமாகவே கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை அரசியலில் கள யதார்த்தத்திற்குள் வெற்றிகளை ஈட்டும் வகையிலான நகர்வுகளை மேற்கொள்வதில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் மக்களும் பெருமளவில் வெற்றி கண்டுள்ளனர். இவர்களின் இன்றைய புதிய வியூகத்திற்கு தமிழ் மக்கள் பலியாகாமல் இருந்தால் சரி.

SHARE