புதிய அரசியலமைப்பும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும்

319

 

ஏ எம் முஹம்மத் அனீஸ், 
முகாமைத்துவமற்றும் வர்த்தகபீடம்,
இலங்கைதென்கிழக்குபல்கலைக்கழகம்.

BDSHSஇன்றைய கால கட்டத்தில் புதிய அரசியலமைப்பு பற்றிய கருத்தாடல்களே அனைத்து சமூகங்களினதும் மற்றும் அரசியல் ஆய்வாளர்களினதும் பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. ஜனநாயக நாடொன்றில் வாழக் கூடிய ஒரு சிறுபான்மை சமூகம் சுதந்திரமானதும் சமத்துவமானதும் மற்றும் தத்தம் உரிமைகளை சரிவரப் பெற்றும் வாழ்வதற்கு அந்தநாட்டிற்கே உரித்தான அரசியல் யாப்பே உறுதுணை செய்கின்றது. அந்த மக்களினது அரசியல் காவலனாகவும் கூட அந்த அரசியல் யாப்பே செயற்படுகின்றது.

இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழக் கூடிய ஒரு நாட்டில் அரசியலமைப்பு எழுத்துருவில் இருப்பதும் ஜனநாயகத் தன்மைவாய்ந்ததாக இருப்பதும் அந்த நாட்டில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஒரு சாசனமாக அது அமையும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியல் பயணத்தில் பாரிய சிக்கல்களும் பிளவுகளும் ஏற்பட்டிருந்தமை வரலாறு நெடுகிலும் நாம் கண்ட கறுப்புச் சுவடுகளாகும். இரண்டு தடவைகள் அரசியல் யாப்பு மாற்றப்பட்டு அதில் பல திருத்தங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன. இவை எமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், இன நல்லுறவு, மற்றும் அரசியல் கலாச்சாரம் போன்றவற்றின் ஸ்திரமில்லாத் தன்மையை எடுத்தியம்புகின்றன.

ஒருநாட்டில் அரசியலமைப்பு மாற்றும் எனப்படுவது சிரியதொரு விடயமன்று. அது நாட்டில் வாழக்கூடிய பல சமூகங்களினதும் பூரண அபிலாஷைகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். இல்லையெனில் மீண்டுமொரு முறை நாட்டின் இறைமைக்கு சவால்விடக் கூடிய சந்தர்ப்பம் உருவாகிவிடும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு சில கறுப்புச் சுவர்கள் இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் அவர்களது இருப்பை உறுதி செய்ய அரசியலமைப்பு பாரிய வழிகள் செய்தது என்றால் மிகையாகாது. மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களது அரசியல் பயணத்தில் அவர் சந்தித்த அனைத்து அரசியலமைப்புசார் விடயங்களும் முழு சமூகத்தின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்தும் பல்லின சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியுமே தீர்க்கப்பட்டன. இவ்வாறான சமூக சிந்தனை மற்றும் ஆளுமை தற்போது இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் இருக்கின்றதா என்பது கேள்விக்கிடமே.

தமிழ் மக்களினது அபிலாஷைகளை உள்ளடக்கிய ஒரு ஆவணத்தை இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளும் மற்றும் அதன் பிரதிநிதிகளும் முன்னெடுக்கின்ற அதேவேளை இலங்கை முஸ்லிம் சமூகத்தினது அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய எந்தவொரு முன்னெடுப்புகளும் இதுவரை காணவில்லை. முஸ்லிம் சமூகம் இலங்கை அரசியல் வரலாற்றிலே பல சந்தர்ப்பங்கில் கறிவேப்பிலைகளாகத்தன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதேநிலைதான் இன்றும் தொடருகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அரசியல் பிரதிநிதிகளும் புதிய அரசியல் யாப்புருவாக்கத்தில் மந்தநிலையையே கடைப்பிடிக்கின்றனர். இருக்கின்ற பிரச்சனைகளைப் புறந்தள்ளிவிட்டு இல்லாத பிரச்சினைகளைத் தலையில் போட்டுக் கொள்ளும் தலைமைத்துவங்கள் சமூகத்தை சந்தர்ப்பத்திற்கு பலிக்கடாவாக்குகின்ற நிலையே இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலையாக புரையோடிப்போயுள்ளது.

அமைச்சர் ஹக்கீமைப் பற்றி ரிஷாத்தின் அருவருடிகளும் அமைச்சர் ரிஷாதைப் பற்றி அமைச்சர் ஹக்கீமின் அருவருடிகளும் ஒருவரையொருவர் புறம் பேசி அரசியல் கண்ணாம்பூச்சி ஆடுகிறார்களே தவிர மக்களைப் பற்றி சிந்தித்து மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து எதிர்கால தூரநோக்குள்ள அரசியல் சிந்தனையில் வழி நடாத்துகிறார்கள என்றால் அதன் விடை இல்லை என்பதையேதரும்.

முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையாக வாழக்கூடிய இலங்கை போன்ற நாட்டில் சில்லைரைப் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு எமக்குள்ளேயே அரசியல் பிழைப்பு நடாத்துவதா அல்லது ஒட்டுமொத்த சமூகத்தினது நலன்களைக் கருத்தில் கொள்ளும் விடயங்களில் பூரண ஒத்துழைப்புடன் செயற்படுவதா என்று சிந்திக்கக் கூட துப்பிலாத அரசியல் பிரதிகளையே நாம் இன்று நாடாளுமன்றங்களில் காண்கின்றோம்.

சமூகம் நீரிலே தத்தளித்துக் கொண்டிருக்க அரசியல் தலைமைகளும் அரசியல் பிரதிநிதிகளும் மாத்திரம் உல்லாசப் பயணம் செல்கின்றனர், வெறுமனே அரசியல் மோகமும், பதவி மோகமும் அவர்களை ஆட்டுவிக்கின்றது. அரசியலைமைப்பு பற்றி எந்தவித கரிசனைக்களுமின்றி நாடு கடந்தும் நாட்டிற்குள்ளும் பயணங்களை மேற்கொண்டு அறிக்கை விட்டு நேரம் கடத்துகிறார்களே தவிர அவர்காளால் முழு சமூகமும் பயனடையும் எந்தவொரு பயனுள்ள முன்னெடுப்புகளும் இதுவரை செய்தாரில்லை.

வரவிருக்கின்ற பாரிய அரசியல் மாற்றத்தின் விளைவு பற்றி சாதரணமாக அரசியலை கற்கின்ற ஒரு உயர்தர மாணவனுக்கிருக்கின்ற அறிவும் ஆதங்கமும் கூட அரசியல்வாதிகளுக்கில்லை என்பதே கவலைக்கிடமான விடயமாகும். அரசியலமைப்பு பற்றி இதுவரை எந்தவிதாமான கூட்டங்களும் அவர்களால் கூட்டப்பட்டு கலந்துரையாடப்படவில்லை, வரவிருக்கின்ற அரசியலமைப்பு பற்றி முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அனைத்து சமூகமும் உணரும்படி எந்தவித முன்னெடுப்புகளும் எடுக்கவில்லை, வரவிற்றுக்கின்ற அரசியலமைப்பு பற்றிய சாதகபாதக நிலைகளை பாமர மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை அவர்களால் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் அரசியல் தலைமைகள் யார் மற்றும் தேசிய தலைமைகள் யார் என மார்தட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டு அவர்களுடைய அரசியல் பயணம் செவ்வனே நகர்கின்றது.

படிக்காத பாமர மக்களும் அவர்களுடைய அரசியல் காய் நகர்த்தல்கள் பற்றிய உண்மையான சரியான தெளிவின்மையால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அவர்களின் அப்பட்டமான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து கொண்டுதிரிகின்றனர். தனிமனிதனை மாத்திரம் நம்பி சிந்தித்து வாழ்கின்ற சமூகம் எப்பொழுது முழு சமூகத்தினது ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொள்ளுமோ அதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு விடிவில்லை.

முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அரசியல் பிரதிநிதிகளும் உங்களுக்கு தரப்பட்டுள்ளது ஒரு அமானிதம் என எண்ணிக் கொள்ளுகள். அரசியல் அறிவு மற்றும் உங்களுடைய அரசியல் நாடகங்களை அறியாத பாமர மக்களை ஏமாற்ற முடியும், ஆனால் உங்களை இந்த இடத்தில் வைத்துள்ள வல்ல இறைவனை நீங்கள் ஏமாற்ற முடியாது. வெறுமனே அரசியல் மேடைகளில் மார்க்கம் பேசி பிரயோசனமில்லை, மாறாக உங்களுக்கு தரப்பட்டுள்ள பொறுப்பைக் கொண்டு அதை இபாதத்தாக்க முயற்சி செய்யுங்கள்.

“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்”

SHARE