ஸ்ரீலங்காவின் இன்றைய அரசு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கை

281

 

ஸ்ரீலங்காவின் இன்றைய அரசு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக கூறுகிறது. இதற்காக ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றும் நடவடிக்கை அண்மையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக கூறினார். தமிழீழக் கோரிக்கையை கைவிடுமளவில் ஸ்ரீலங்கா அரசு எப்படியான நல்லெண்ணத்தை தமிழருக்குச் செய்துவிட்டது என்பதையே இக் கட்டுரை ஆராய்கிறது.

 

தமிழீழக் கோரிக்கை என்பது காலம் காலமாக ஆட்சி செய்த சிங்கள அரசுகள் நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளாலும் உரிமை மறுப்புச் செயற்பாடுகளாலும் ஒடுக்குமுறையாலும் என சிங்களப் பேரினவாத்தின் கூட்டு நடவடிக்கையால் எழுந்தது. தந்தை செல்வா தனது அரசியல் அனுபவங்கள் காரணமாக ஆயுதம் ஏந்துவதையும் தனிநாட்டையும் இளைஞர்களுக்குப் பரிந்துரைத்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோட்பாட்டை முன்னெடுப்பதாக வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்வியினாலும் இயலாமையினாலும் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை நடவடிக்கையினாலும் தனித் தமிழீழத்தை அடையும் இலட்சியத்தை தமிழ் ஈழ இளைஞர்கள் நெஞ்சில் சுமந்தனர். இந்த உயரிய உன்னதப் போராட்டத்தில் வடகிழக்கு தமிழ் மக்கள் முழுமையாக பங்களித்தனர். தனிநாட்டுப் போராட்டம் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் கனவு.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியது. சந்திரிக்கா ஆட்சியிலும் பேச்சுவார்த்தை நடந்தது. மகிந்த ஆட்சியிலும் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழ் ஈழ மக்களின் பிரச்சினை என்ன? அதற்கான தீர்வு என்ன என்பது தொடர்பில் ஒரு நிலைப்பாடும் அதற்காக பேரம் பேசுகின்ற ஆளுமையும் விடுதலைப் புலிகளுக்கு இருந்தது. தீர்வு என்ற பெயரில் சிங்களப் பேரினவாத்தை பாதுகாக்கும் தந்திரத்திற்கு உடன்படாமல் புலிகள் இயக்கம் தொடர்ந்து போராடியது.
காலம் காலமாக ஏமாற்றும் வரலாற்றுக் குணத்துடன் சிங்கள அரசு தொடர்ந்தும் இயங்கும் நிலையில் எந்த அடிப்படையில் தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிடுவதாக அறிவித்தது? ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த இரு நாட்களின் முன்னர் பேசிய ஸ்ரீலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்தின ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். சமஸ்டிக்கு இடமில்லை என்று ஸ்ரீலங்கா அரசு சிங்களப் பேரினவாதிகளை சாந்தப்படுத்த ஸ்ரீலங்கா அரசு சத்தியம் செய்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி என்று கூறுகிறது. இதற்குள் ஸ்ரீலங்கா அரசுக்கான முழுமையான ஆதரவை நல்கி பதவிகளைப் பெற்று பேரம் பேசும் ஆளுமையை இழந்து ஓர் இணக்க அரசியல் பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுகிறது. தமிழீழக் கோரிக்கைதான் எங்கள் இலக்கு அதை முன்வைத்தே எமது அரசியல் பயணம் தொடர்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் மக்கள் மத்தியில் பேசுகின்றனர்.
பின்னர் வெற்றிபெற்றதும் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் தமிழீழம் கேட்கமாட்டோம் என்று சத்தியம் செய்கின்றனர். தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்று ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் நின்று உரையாற்றுகின்றனர். உண்மையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு வெளிப்படுத்திய எந்த நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த அறிவித்தலும் சத்தியமும் செய்யப்படுகிறது என்பதையே இக்கட்டுரை பிரதான கேள்வியாக முன்வைக்கின்றது.
தமிழ் ஈழத்தில் ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்தும் தனது இன அழிப்பு நடவடிக்கைகளை வெவ்வேறு வடிவில் முன்னெடுக்கின்றன. காணாமல் போனவர்கள் குறித்தோ, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்தோ இன்னமும் பொறுப்புக்கூறும் எந்த செயலிலும் இறங்கவில்லை. வடகிழக்கில் இராணுவத்தினர் அகற்றப்படவில்லை. இராணுவத்தின் கைவசம் உள்ள நிலங்கள் பலவும் விடுவிக்கப்படாதுள்ளன. தமிழ் மக்கள் ஒரு போர் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
புதிய அரசியலமைப்பு! புதிய அரசியலமைப்பு!! என்று கூறும் ஸ்ரீலங்கா அரசு அது எதற்கானது? எப்படியிருக்கும் என்று சொல்லாமல் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்தும் என்று கூறுகிறது. ஸ்ரீலங்காவில் உள்ள தமிழருக்கு எதுவும் கொடாதே என்று கூறுகிற இனவாதிகளையும் தமிழர்களுக்கு ஒற்றையாட்சியில் அதிகாரங்களை பகிரலாம் என்று கூறுகிற மிதவாதிகளையும் சமஸ்டி தாருங்கள் என்ற தமிழ் அரசியல்வாதிகளையும் ஒரு நேர்கோட்டில் இணைக்கும்போது எப்படியான ஒரு தீர்வுக்கு ஸ்ரீலங்கா அரசு வரும்?
2016 பிறந்து இரண்டாம் மாதமும் மலரப்போகிறது. ஆட்சி மாறி ஒரு வருடமாக பேசி வருவதைப்போல புதிய அரசியல் யாப்பு என்றும் போர்க்குற்ற விசாரணை என்றும் ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்து வாய் வீரம் காட்டி வருகிறது. இந்த வாய் வீரம் ஜெனீவாவை சமாளிக்கும் வாய்ப்பேச்சா? என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் மிகுதியாக நிலவுகிறது. ஏனெனில் மிக எளிதாக தீர்க்கக்கூடிய தமிழ் மக்களின் பிரச்சினைகளிலேயே மிச்சம் வைத்து – கடன் வைத்து விளையாடும் மைத்திரி – ரணில் அரசு எப்படி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கும்?
 2000px-Tamil_eelam_map.svg LTTE-WO
எனவே முப்பது ஆண்டுகளாக தமிழ் ஈழ மக்கள் சுமந்த தனிநாடு கோரிய போராட்டத்தை, நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் நெஞ்சில் கனவாய் சுமந்த தமிழ் ஈழப் போராட்டத்தை எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் கைவிடுகிறோம் என்று சொல்வதன் ஊடாக, உரிமைக்காக விடுதலைக்காக பெரும் துயரில் தியாகங்களின் மத்தியில் போராடிய மக்களின் போராட்டத்திற்கு பங்கம் வந்தால் வரலாறு எப்படி அமையும்? என்ன விளைவுகள் ஏற்படும்?
SHARE