பௌத்தர்களே இல்லாத கொக்கிளாயில் தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரை

297

 

பௌத்தர்களே இல்லாத கொக்கிளாயில் தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு உறுப்பினர் ரவிகரனிடம் இருந்து தகவல்களைப் பெற்ற ஆளுநர் றெஜினோல்ட் கூரே கொக்கிளாய்க்கு நேரில் சென்று விடயங்களை ஆராயவுள்ளார்.
mullaiththeevu-puththar-3

இதன்போது ரவிகரனை சந்தித்துப் பேசவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்கிளாய் கிராமத்தில் பௌத்தர்களே இல்லாத நிலையில் தனியார் காணியை அபகரித்து பிக்கு ஒருவர் அங்கு அடாத்தாக விகாரை ஒன்றை அமைத்து வருகிறார்.

இது தொடர்பில் கடந்த 28ம் திகதி, திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அந்த விடயம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆளுநர் பதிலளித்திருந்தார்.

இது குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனின் கருத்து வெளியாகியிருந்தது. இந்த விகாரை குறித்த ஆதாரங்களை ஆளுநருக்கு வழங்க தாம் தயார் என்றும் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்றும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரவிகரனைத் தொடர்பு கொண்ட ஆளுநர் விகாரை குறித்த தகவல்களை அறிந்து கொண்டார். வரும் 6ம் திகதி முல்லைத்தீவுக்கு செல்லும் ஆளுநர் ரவிகரனை சந்திப்பதுடன் விகாரை அமைப்புப் பணிகளையும் பார்வையிடவுள்ளார்.

இந்த விடயம் குறித்து ரவிகரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது:

ஆளுநர் அலுவலகத்தில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு விகாரை அமைப்புக் குறித்த தகவல்களைப் பெற்றனர். நான் வழங்கிய முழுமையான தகவலில் குறிப்பாக தி.மணிவண்ணதாஸ், சி.கலா, எஸ்.இராசம்மா ஆகிய 3 பேரின் காணிகள், பிரதேச சபைக்குரிய 12 அடி அகலமான வீதி மற்றும் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதி காணியை பிக்கு ஒருவர் விகாரை அமைப்பதற்காக அடாத்தாகப் பிடித்துள்ளார்.

12.06.2015 ம் திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணி பிணக்குகள் சம்பந்தமான நடமாடும் சேவையில் காணி அமைச்சின் மேலதிக செயலாளர், உதவி பணிப்பாளர் (காணி கொள்கைகள்) ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் மேற்படி விகாரை அமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பணிக்கப்பட்டது.

இதன் பின்னரும் விகாரை அமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 16.06.2015ம் திகதி நாம் இந்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு வினவியதுடன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்றும் உறுதிப்படுத்தினேன்.

இதைத் தொடர்ந்து 17.06.2015ம் திகதி மேற்படி காணி பிணக்குகள் தொடர்பான நடமாடும் சேவையில் கொடுக்கப்பட்ட உத்தரவை பிரதேச செயலர் குறித்த பௌத்த பிக்குவிற்கு கையளித்துள்ளார்.

இதற்குப் பின்னர் 18.01.2016ம் திகதி வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இந்த விடயம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையிலும் மேற்படி விகாரை அமைப்பு பணிகள் நிறுத்தப்படவில்லை. மாறாக படையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புடன் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. என்பதை மிக தெளிவாக கூறியிருக்கின்றேன். மேலும் இவற்றுக்கான ஆதாரங்களும் உண்டு என்பதை சுட்டிக்காட்டினேன்.

இதையடுத்து வரும் 6ம் திகதி ஆளுநர் முல்லைத்தீவுக்கு வருகிறார் என்றும் இதன்போது தன்னை சந்திக்குமாறும் அழைத்துள்ளார். அத்துடன் விகாரை அமைக்கப்படும் பகுதியை அடையாளப்படுத்துமாறும் கேட்டுள்ளனர் என்றார்.

SHARE