LTTE ன் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

529
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஹொரணைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

ஹொரணை ரைகம் தோட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி சுப்ரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் இந்த சந்தேக நபரை போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பொதுமக்கள் இருக்கும் பிரதேசத்திற்கு அனுப்பியிருந்தனர்.

புலனாய்வு தகவல்களை திரட்டி சீர்குலைவு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவே சந்தேக நபரை புலிகள் அனுப்பியுள்ளனர்.

போர் முடிவடைந்த பின்னர், கடந்த வாரம் வரை இந்த சந்தேக நபர் ரைகம் தோட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்த நபர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரைகம் தோட்ட பிரதேசத்தில் உள்ள கிராம சேவகருக்கு 500 ரூபா இலஞ்சம் கொடுத்து, சந்தேக நபர் ரைகம் தோட்டத்தில் வசித்து வருவதாக காட்டும் தேசிய அடையாள அட்டையை 2004 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டுள்ளார்.

சந்தேக நபருக்கு அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்த கிராம சேவகரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

SHARE