கூட்டுறவாளர்களின் மேதினத்தில் கட்சி பேதங்களற்று அணி திரள்வோம்: ஐங்கரநேசன்

246

 

வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

24688d670a740a078f4290c895cad0a8

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்,

வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை மேதினத்தை கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளன.

வடக்கின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத்துறை காத்திரமான பங்களிப்பைச் செய்து வருவதோடு, அடித்தட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. அத்தோடு, பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு துறையாகவும் விளங்குகின்றது.

ஒரு காலத்தில் மிகச்சிறப்பாக இயங்கி வந்த கூட்டுறவு அமைப்புகள் மூன்று தசாப்தகாலப் போர் காரணமாகவும், அரசியல் தலையீடுகள் காரணமாகவும், திறந்த பொருளாதார முறைமைக்கு முகம் கொடுக்க முடியாததன் காரணமாகவும் இப்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

கூட்டுறவுத்துறை மீண்டும் மிடுக்கோடு நிமிர்ந்தெழ வேண்டும். அதற்குரிய நம்பிக்கையைக் கூட்டுறவாளர்களுக்கு ஊட்டும் விதமாக அவர்களது மேதினக் கொண்டாட்டத்துக்குப் பலம் சேர்ப்போம்.

மே முதலாம் திகதி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மேதினப் பேரணியிலும் கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள மேதினக் கூட்டத்திலும் கூட்டுறவாளர்கள் அனைவரும் அவர்களுக்கு அனுசரணையாகப் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கட்சி பேதங்களற்று அணி திரள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE