கடந்த ஆட்சியாளர்கள் காலை உணவுடன், ஐவரே அரசாங்கத்தை நடாத்திச் சென்றனர் – மைத்திரி

273

 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைகளை துரித கதியில் நிறைவு செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

maithiri-500x333

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களால் நேரடியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியில் இன்றிரவு கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலேயே பொலிஸ் நிதி மோசடி பிரிவு ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் பொலிஸ் நிதி மோசடி பிரிவை ஆரம்பித்து சுமார் ஒரு வருடங்கள் மாத்திரமே நிறைவு பெறுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

இதேவேளை, மே மாதம் 2ஆம் திகதி முதல் பெறுமதி சேர் (வெட்) வரி அதிகரிக்கப்படுகின்றமை தொடர்பிலும் இதன்போது ஊடகவியலாளர்களினால் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த பெறுமதி சேர் (வெட்) வரி அதிகரிக்கப்படுகின்றமையினால் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என தான் மீண்டும் உறுதியளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான மார்க்கத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஏற்படுத்தியதாக ஜனாதிபதி நினைவூட்டினார்.

2006ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் முதல் முதலாக இணைந்துக் கொண்டார் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 45 உறுப்பினர்களை பிரித்து எடுத்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடந்த காலங்களில் இரண்டு பிரதான தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த தோல்விக்கான பிரதான காரணங்கள் என்ன என்பது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும், அது குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை, குற்றம் சுமத்தும் நபர்கள் இதுவரை ஆராயவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் அரசாங்கத்தை கொண்டு சென்றது அமைச்சரவை அல்லவென ஜனாதிபதி இதன்போது கூறினார்.

கடந்த ஆட்சியாளர்கள் காலை உணவு உட்கொள்ளும் போது ஐவர் ஒன்றாக அமர்ந்தே அரசாங்கத்தை கொண்டு செல்லும் விதம் தொடர்பில் ஆராய்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கூச்சலிடும் தரப்பினர் அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முன்னர் தூய்மையான கட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அதைவிடுத்து, சூழ்ச்சிகளை முன்னெடுப்பதன் ஊடாக அரசாங்கமொன்றையோ அல்லது கட்சியொன்றை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE