மஹிந்த, பொன்சேகா மோதல்…! ஒருவர் வைத்தியசாலையில்

295

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய இராணுவப்பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

sl-pl sl-pl01

இதற்காக விசேட குழு ஒன்றையும் சபாநாயகர் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை நாளை புதன்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்ச அணியினர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

(முதலாம் இணைப்பு)

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய்கள் வாபஸ் பெற்றுக்கொண்ட விவகாரம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் சூடான வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர், இந்த இராணுவ சிப்பாய்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மஹிந்த ராஜபக்சவின் சார்பிலான உறுப்பினர்கள் வினா எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கும், மஹிந்த ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த 50 இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக விசேட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை, மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக சரத் பொன்சேகா பதில் அளிப்பார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கூறினார். பதில் வழங்கிய சரத்பொன்சேகா, மஹிந்த ராஜபக்சவிற்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதிக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மஹிந்த ராஜபக்ச அணியினர், சபை நடுவில் வந்து குழப்பம் விளைவித்தனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சபை நடுவில் வந்து வாய்த்தர்க்கம் புரிந்தனர்.

இந்த நிலையில் இருதரப்பினரிடையேயும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டத கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் 5 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

SHARE