போர்முனைகளில் களத்தில் நின்று உயிரைத் துச்சமென மதித்து செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு எடுத்துரைப்பதில் ஊடகங்களின் பங்கு மகத்தானது-பா.உ.சிவசக்திஆனந்தன்

454

 

உலகின் மூலை முடுக்கெங்கும் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளையும் அதிசயங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் புரட்சிகளையும் இனவிடுதலைப் போராட்டங்களையும் இன்னபிற நிகழ்வுகளையும் செய்திகளாக மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மரியாதை செய்வதுடன் அவர்களை வாழ்த்துவதிலும் பெருமையடைகிறேன்.

Sivasakthi-Ananthan-MP-4

பல்வேறு சவால்களுக்கும் அவமதிப்புக்களுக்கும் முகங்கொடுத்து, முகங்கோணாமல் எடுத்த காரியத்தில் கண்ணாக இருந்து, உயிரைப் பணயம் வைத்து, செய்தி சேகரித்து, அதனை உலகெங்கும் எடுத்துச் செல்வதில் நீங்கள் ஆற்றிவரும் பணி அளப்பரியது.

போர்முனைகளில் களத்தில் நின்று உயிரைத் துச்சமென மதித்து செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு எடுத்துரைப்பதில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு யுத்தகளங்களிலும் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் பட்ட துயரங்களை வெளியில் கொண்டுவந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களை நன்றியுடன் இங்கு நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.

ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்த காலகட்டத்திலும் ஊடகங்கள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நேரங்களிலும் வரையறைக்குட்பட்டு சொல்ல வேண்டிய செய்திகளை வரம்புக்குள் நின்று செய்தியின் தரமும் பொருளும் குன்றிவிடாமல் எமது ஊடக அன்பர்கள் சொல்லிய விதம் மெய்சிலிர்க்கச் செய்கின்றது.

எத்தகைய பாதுகாப்புமின்றி, சுய பாதுகாப்பில் தங்கியிருந்து அவர்கள் ஆற்றிய பணிகள் சொல்லிலடங்காதவை. செய்திகளைப் படித்துவிட்டு விமர்சிப்பது சுலபம். அந்தச் செய்தியைச் சேகரிப்பதற்கும் அதனை உரியவகையில் வெளிப்படுத்துவதற்கும் தனித்திறமை வேண்டும். அதனை எமது நாட்டு ஊடக நண்பர்களிடம் நிறையவே இருக்கிறது.

எமது இனப்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துவதில் அவர்கள் செயற்பட்ட விதம் மெச்சி போற்றற்குரியது. எமது நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டமும் அவசரகாலச் சட்டமும் ஊடகவியலாளர்களையும் விட்டுவைக்கவில்லை. உண்மையை வெளியில் கொண்டுவந்த ஒரே குற்றத்திற்காக அவர்கள் தடுத்துவைக்கப்பட்டதுடன், பலர் கொல்லப்பட்டுமுள்ளனர். இனத்தின் விடுதலைக் குரலுக்கு ஆதரவளித்து தமது எழுதுகோலைப் பயன்படுத்திய அவர்கள் தமது உரிமைக்காகவும் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் காலடிவைத்துள்ள நாம் இன்னமும் தகவல் அறியும் உரிமையைச் சட்டமாக்குவதற்கும், ஊடகங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதற்கும் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றோம். இன்னமும்கூட ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் எமது நாட்டில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

photo 13095780_1128688633850183_9035628341500608539_n 13124601_1128688707183509_2907748777160717705_n 13096037_1128688697183510_399577204801425181_n 13087456_1128688737183506_6220097559995155000_n (1) 13139366_1128688630516850_5770451840283142542_n (1) 13164177_1128688523850194_1671232823934123511_n

இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச ஊடகவியலாளர் மேரிகொல்வின் அம்மையார் போன்றவர்கள் ஒரு ஊடகவியலாளராக மட்டுமன்றி சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர்களாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாகவும் செயற்பட்டுள்ளனர். அந்த அர்ப்பணிப்பு நிறைந்த பணியிலிருந்தவாறே அவர்கள் தமது இன்னுயிரையும்கூட ஈந்துள்ளனர். அவர்களது தியாகத்திற்கு தலைவணங்குகின்றேன்.

சேனல்4 மற்றும் அல்ஜெசிரா போன்ற ஊடகங்கள் தமது சீரிய தொழில்நுட்பத் திறமையின் மூலம் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற மனிதப் படுகொலைகளையும் மனிதநேயத்திற்கெதிரான செயற்பாடுகளையும் போர்க்குற்றங்களையும் எமது மக்கள் பட்ட அவலங்களையும் மிகத் தெளிவாக சர்வதேசத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர். அவர்களின் செயற்பாடுகளையும் கடமையுணர்வையும் மனிதநேயத்தையும் மனதார வாழ்த்துகிறேன்.

ஊடக அன்பர்கள் அனைவரும் அனைத்து தடைகளையும் தாண்டி தங்கள் பணியில் தொடர்ந்தும் சிறப்புறச் செயற்பட்டு மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனது அன்பிற்கினிய ஊடக அன்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

SHARE