ஜனாதிபதி இறந்தவர்களை வழிபடும் உரிமையை தடுப்பதேன்? சண் மாஸ்டர் கேள்வி.

289

 

வடக்குக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் தமிழ் மக்கள் தாங்கள் இழந்த உயிர்களை தவிர மற்ற எல்லாவற்றையும் தருவேன் என திருவாய் மலர்ந்தருளும் இலங்கை ஜனாதிபதி இறந்தவர்களை வழிபடும் உரிமையை தடுப்பதேன் என சண் மாஸ்டர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மனித குலம் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரையான அதன் வரலாற்று பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம் தான் மனித சமுகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. மனித இருப்புக்கே ஆதாரம் பலம் தான் என்று புகட்டியவர்கள் போர் வீரர்களே. தனக்கு எதிர் திசையில் நின்று போர் புரிந்தவன் இறந்த பின்பு அவர்களின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும் என்று போர்க்கலை வல்லுநர்கள் விவரிக்கின்றனர்.
இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப்போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப்போரியல் நுணுக்கங்களும், அதன் தந்திரோபாயங்களும் எனும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செய்து கௌரவப்படுத்துகின்றானோ அவனே சிறந்த வீரன் என்று கூறியுள்ளார். இத்தகைய நீண்ட வரலாற்று பின்னணியில் சமர்க்களமாடி மடிந்தவர்களை இலட்சிய புருசர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் வழிபடும் முறை உலக மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது.
பண்டைய தமிழர்கள் சங்க இலக்கியங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் நடுகல் வைத்து படையல் இட்டு போரில் இறந்த வீரர்களை நினைவு கூர்ந்து வந்தனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. இதன் தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் தமது உரிமைக்காக உயிர் நீத்த மாவீரர்களை போற்றி வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. உலகப்பந்தில் தம் இனம் விடுதலை பெற்று சகல உரிமைகளுடனும் உலகில் வாழ வேண்டுமென்ற கனவு கண்ட ஒப்பற்ற அவதார புருசர்களாகவே மாவீரர்களை தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அவர்கள் தமது போர்த்தெய்வமாக கொற்றவை என்ற நிலை மறந்து தமது உரிமைக்காக போராடி மடிந்த மாவீரர்களை போற்றி வழிபட்டு வருவதை கௌரவமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர்.
இன்றைய உலக ஒழுங்கில் இறந்தவர்களை நினைவு கூற மறுக்கும்  தன்மையானது இலங்கை தேசத்தின் அரசியல் முதிர்ச்சியின்மையாகவே நோக்க வேண்டியுள்ளது. உலகெல்லாம் தமது நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை தேசிய வீரர்கள் தினமாக பிரகடனப்படுத்தி அந்நாட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில் உலகில் தாம் சக்தி வாய்ந்த இனமாக இருப்பதற்காக மாவீரராகி தம் இனத்தின் காவலர்களாக இருக்கும் மாவீரர்களை தமிழ் மக்கள் மட்டும் கௌரவித்து நினைவு கூற விடாமல் தடுப்பது மனித நாகரிக விழுமியங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் வழிபாட்டு உரிமை சட்டங்களை மீறும் மிகப்பெரிய மனித உரிமை மீறல் செயலாகும்.
இலங்கை அரசானது தனது போர் வெற்றியை தலைநகரில் மிகப்பிரமாண்டமாக கொண்டாடும் போது ஏன் தமிழர்கள் தம் உரிமைக்காக இறந்தவர்களை நினைவு கூரக்கூடாது. கடந்த 2004 ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதையும், அன்று கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததையும் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். சுதந்திர விடுதலையை அடிநாதமாக கொண்டு அதற்கான விடுதலை போரை முன்னிறுத்திய சுதந்திர சிற்பிகளை நினைவு கூரும் நாளை ஆட்சியாளர்கள் தடுத்தாலும் உலகில் ஒற்றைத்தமிழன் இருக்கும் வரை உரிமைக்காக போராடி மடிந்த தம் உறவுகளை வழிபடும் முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் இதை உலக வரலாறுகள் பதிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE