இராணுவத்தின் நான்கு மேஜர் ஜெனரல்கள் பசில் ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு

281

 

சிறிலங்கா இராணுவத்தில் சேவையில் உள்ள நான்கு மேஜர் ஜெனரல்களும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக, ராவய சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

அரசியல்வாதிகள், பாதுகாப்பு அமைச்சு உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச நிறுவன உயரதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்னர், இராணுவத் தளபதியின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா புறப்பட முன்னர், அவருடன் நடந்த சந்திப்பு ஒன்றின் போது, வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு அமையவே பசில் ராஜபக்சவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்சவைச் சந்தித்த நான்கு மேஜர் ஜெனரல்களும் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் நாள் நிறைவடையவுள்ளது. இவருக்கு சேவை நீடிப்பு வழங்குவது தொடர்பாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

பசில் ராஜபக்சவைச் சந்தித்த மேஜர் ஜெனரல்களில் இருவர், இராணுவத் தளபதியாக நியமிக்கப்படாவிடின், 55 வயதை எட்டுவதால், எதிர்வரும் செப்ரெம்பர் 25  மற்றும் செப்ரெம்பர் 30ஆம் நாள்களில் ஓய்வுபெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு நீர்கொழும்பில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில், பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, கோத்தாபய ராஜபக்சவின் ஏற்பாட்டில், ஒன்பது மேஜர் ஜெனரல்கள் சந்தித்துப் பேசியிருந்தனர்.

போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு வசதியாக தமக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் கோரியிருந்தனர்.

இதனை அடுத்தே, இராணுவ அதிகாரிகள், முன் அனுமதி பெற்றே அரசியல்வாதிகள், உயர்மட்டத் தலைவர்கள், அதிகாரிகளைச் சந்திக்க முடியும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்து சேவை நீடிப்புக் கோரிய ஒன்பது மேஜர் ஜெனரல்களில், மகிந்த ஹத்துருசிங்க, ஜெகத் டயஸ், பிரசன்ன டி சில்வா ஆகியோர், 55 வயதை எட்டியுள்ள நிலையில் ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

karunasena-hettiarachi-army-hq-4

 

 

SHARE