மஹிந்தவின் சாரதியூடாக 1260 கோடி ரூபாய் பணம் வங்கியிலிருந்து

257

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள், மஹிந்தவின் உயரதிகாரி ஒருவரின் சாரதியூடாக சுமார் 1260 கோடி ரூபாய் பணம் வங்கியிலிருந்து காசோலை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விசாரணைகளை மூடி மறைக்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்-

”தான் ஊழல் மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆனால், தற்போது அவரது பணியாட்களில் இருந்த சாரதியொருவர் ஊடாக, பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன்.

குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் இரவு, மஹிந்தவின் நிதி விடயங்களுக்கு பொறுப்பான காமினி செனரத் என்பவரின் சாரதியை அனுப்பி, இலங்கை வங்கி கிளையொன்றிலிருந்து நான்கு காசோலைகள் மூலம் 1260 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டு அது காமினி செனரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வங்கி சட்டத்தின் பிரகாரம், வங்கியிலிருந்து இவ்வாறு ஒரே தடவையில் இவ்வளவு பணத்தொகையை பெற முடியாது. அப்போது மஹிந்தவே நிதியமைச்சராக இருந்ததால், ஒருவேளை இது அவரது உத்தரவாக இருந்திருக்கலாம்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மூடி மறைப்பதற்காக அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, குறித்த பணத்தை எடுத்துவரும்போது அந்த சாரதி ஒரு கோடி ரூபாய் பணத்தை, தான் எடுத்துக்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை எனும் போர்வையில் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் குறித்த சாரதி மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து, குறித்த சாரதி ஒரு கோடி ரூபாயை எடுத்தமையை, 5 இலட்சமாக குறைத்துக்கொள்கின்றோம் என்றும், மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறும் மஹிந்த தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயம் சென்றபின்னர் தான், இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அத்தோடு, காணி மோசடிகள் தொடர்பில் மஹிந்தவின் கட்டிட பொறியியலாளர் ஊடாகவும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவற்றை மூடி மறைக்கவே தற்போது, அதிகாரிகளை அச்சுறுத்தியும், இலஞ்சம் கொடுக்கவும் முயற்சித்து வருகின்றனர். எவ்வாறாயினும் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும்” என்றார்.mr

SHARE