வடக்கு ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: சி.வி

324

 

யாழ்.நகர அபிவிருத்தி குறித்து தாம் உள்ளிட்ட வடமாகாண சபையினர், கடந்த வருடம் முதலே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும், அதன் பெறுபேறுகளை கேட்டறியாமல் வடக்கு ஆளுநர் அது தொடர்பான கூட்டத்தை நடத்துவது உகந்ததல்லவெனவும், வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து கூறுகையில்-

”இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், பல புதிய திட்டங்களுடன் மத்திய அரசின் அனுமதியுடன் இங்கு வருகின்றனர். மாகாண நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்களில், மாகாண அரசுடன் எந்தவித கலந்துரையாடல்களோ அல்லது அனுமதிகளோ இன்றி இத்திட்டங்களை செயற்படுத்த விழைகின்றார்கள். இத் தன்மையானது மாகாண அரசின் அதிகாரங்களை புறந்தள்ளுவதாக அமைந்துள்ளது.

அவர்கள் நடைமுறைப்படுத்த இருக்கின்ற திட்டங்கள் எமக்கு நன்மை பயப்பனவாக இருக்கக்கூடும். ஆனால், எம்முடன் கலந்தாலோசிக்காமல் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், ஒரு சீரற்ற வளர்ச்சித் தன்மையை ஏற்படுத்தலாம். அத்தோடு, மக்களைக் குழப்பக் கூடிய அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய நிகழ்வுகளாகவும் அவை அமைந்துவிடுகின்றன.

உங்கள் திட்டங்கள் பயனுள்ளதாக காணப்படின், நாங்கள் முழுமையான ஆதரவை நல்குவோம். அத்திட்டங்கள் எமக்கு உதவாதவையாகக் காணப்படின் அது பற்றியும் உங்களுடன் பேசுவோம் என்ற கருத்தையே தெரிவித்து வருகின்றேன்.

தற்போதும், யாழ்.நகர அபிவிருத்தி குறித்து வட மாகாண ஆளுநர் கூட்டமொன்றை நடத்தியுள்ளார். அத்திட்டம் பற்றி வடமாகாண சபையானது, சம்பந்தப்பட்ட அனைவருடனும் சென்ற வருடத்தில் இருந்தே பேசிவருகின்றது.

அவற்றின் பெறுபேறுகளை எங்களிடம் கேட்டறியாது, ஆளுநர் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். அவ்வாறான கூட்டத்தை நடத்தாது எம்முடன் முதலில் பேசுவதே சிறந்தது என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.

இக்கூட்டத்தை கூட்டுவதற்கு முன்னர், ஆளுநர் எங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால், இத்திட்டத்திற்கு அனுசரணை நல்கவே, தாம் அவ்வாறு கூட்டத்தை நடத்தியதாக கூறுகின்றார். அனுசரணை செய்வதாகக் கூறி எமக்கு உபத்திரவம் தராமல் இருந்தால் போதும்.

அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் நேரடியாகப் பேச முன்வர வேண்டும். ஆளுநர் ஊடாக எம்முடன் பேச வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவர்களை நாங்கள் எம்மவர்களாகவே இப்பொழுதும் கருதுகின்றோம்” என்றார்.cv-jaffna

 

SHARE