இனவாதிகளின் கையில் சிக்கிப்போன கிழக்கு விவகாரம்!

275

 

முதலமைச்சர் பதவிநிலையை மதிக்காத கடற்படை அதிகாரிக்கு கண்டிப்புக் காட்டிய முதலமைச்சர் விவகாரம் இனவாதிகளின் கையில் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று கண்டித்துள்ளது.

hafiz-745x445

குறித்த கடற்படை கப்டனின் சொந்த ஊரான ஹிக்கடுவை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலும் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டங்களில் மட்டுமன்றி அண்மைய நாட்களாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் பிக்குமார் கலந்து கொண்டு இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருவதை குறித்த ஊடகம் கண்டித்துள்ளது.

கொழும்பின் முன்னணி தனியார் செய்திச்சேவையொன்றின் சார்பில் இயங்கும் குறித்த இணையத்தளத்தில் இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு முதலமைச்சருக்கு மட்டுமன்றி , நாளை இன்னொரு சம்பவத்தை பிடித்துக் கொண்டு இவர்கள் வடக்கு முதலமைச்சரையும் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

ஏனெனில் இவர்களின் மனங்களில் அடிமைப்புத்தி இன்னும் ஒழியவில்லை.கல்வி என்பது மாகாணங்களுக்கு பகிரப்பட்ட அதிகாரமாகும்.

மாகாணத்தின் பிரதானி முதலமைச்சர் என்ற வகையில் அவரைக் கேட்காமல் அல்லது மாகாண கல்வி அமைச்சரின் அனுமதியின்றி படைப்பிரிவினர் மட்டுமன்றி எந்தவொரு தரப்புக்கும் கல்வித்துறையில் எந்தவொரு தரப்புக்கும் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது.

அந்த வகையில் இது கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடாகும். முதலமைச்சரின் பதவிக்கான மரியாதையை வழங்க மறுத்து திட்டு வாங்கிய கடற்படை அதிகாரியும் இந்த இடத்தில் தவறு செய்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வகையில் அடுத்தவரின் அதிகாரத்துக்குள் அத்துமீறியது மட்டுமன்றி அவர்களை அவமதிக்க முற்பட்டமை கடற்படையின் பாரிய தவறாகும். இவ்வாறான செயற்பாடுகளை ஆதரிப்பது இராணுவ ஆட்சிக்கு வழிகோலுவதற்கு ஒப்பானதாகும்.

எனவே ஜனநாயகத்தை ஆதரிக்கும் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவான முதலமைச்சருக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.

இல்லாத பட்சத்தில் இன்றைக்கு இந்த விடயத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு தங்கள் இனவாத, சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்க நினைப்போர் நாளை இன்னும் ஏதாவதொரு நிகழ்வை தூக்கப் பிடித்துக் கொண்டு வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

ஆனால் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவது குறித்து வாயே திறக்க மாட்டார்கள்.

எனவே ஜனநாயக விரும்பிகள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் முதலமைச்சருக்கு ஆதரவளித்து ,ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் குறித்த ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

SHARE