கூட்டமைப்பின் அழுத்தம் போதுமானதாக இல்லை : தமிழர் மனித உரிமை மையம்

268

 

மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து  அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும்  உள்ளக விசாரணை பொறிமுறையில்  சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற   விடயத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்று பிரான்ஸை தலைமையகமாகக்கொண்ட  தமிழர் மனித உரிமை மையத்தின்  செயலாளர் ச.வி. கிருபாகரன் தெரிவித்தார்.

SLG_Editorial_Oct_29

கூட்டமைப்பின் எம்.பி.  சுமந்திரன்  மிகவும் திறமையான முறையில்  உலக நாடுகளுக்கு சென்று இந்த விடயத்தை  அழுத்தம் திருத்தமாக கூறிவந்தாலும்   கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து  அழுத்தம் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தில் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள்   ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும்   32 ஆவது கூட்டத் தொடர்  மற்றும்  உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக குரல் கொடுத்துவருகின்ற நிலையில் இன்று ஜெனிவா வளாகத்தில்  வீரகேசரி இணையத்தளத்துக்கு தகவல் வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

மனித உரிமை உரிமை பேரவை வளாகத்தில் வைத்து அவர் தொடர்ந்து கருத்து  வெளியிடுகையில்

இம்முறை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்{ஹசேன் இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வெ ளியிடவுள்ள வாய்மூல அறிக்கையானது அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை கொடுப்பதாக அமைய வேண்டும்.

குறிப்பாக சர்வதேச நீதிபதிகள் உள்ளக விசாரணை பொறிமுறையில் உள்ளடங்க வேண்டுமென்ற அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகள்  என்ற விடயத்தை உலகில் எந்தவோர் இடத்திலும் மறுக்கவில்லை. எனவே புலம்பெயர் அமைப்புக்களாகிய நாங்கள் இதனை உலகளவில் வலியுறுத்தி வருகிறோம். ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த விடயத்தை கூறிவருகிறோம்.

தற்போதைய நிலைமையில் புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும். எனவே புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

எனினும் முன்னர் காணப்பட்ட ஒற்றுமையை தற்போது காண முடியவில்லை.  இலங்கை அரசாங்கம் நல்லிணக்க குழுவை அமைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இம்முறை வாய்மூல அறிக்கை மென்மை போக்கை கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அமைந்தாலும்கூட செயிட் அல்{ஹசேனின் இறுதி அறிக்கையானது மிகவும் அழுத்தம் கொடுப்பதாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

SHARE