ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஸ்கொட்லாந்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது குறித்து பொது வாக்கெடுப்பு

259

 

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஸ்கொட்லாந்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று ஸ்கொட்லாந்துப் பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

TOP

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பிரிட்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

இதன் காரணமாக, மிகக் கசப்பான அனுபவங்களையும், மோசமான பின் விளைவுகளையும் பிரிட்டன் சந்திக்கவிருக்கிறது.

இந்த பாதிப்புகளிலிருந்து ஸ்கொட்லாந்தைப் பாதுகாக்க விரும்புகிறேன்.

எனவே, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது குறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான பொது வாக்கெடுப்பை மீண்டும் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான சட்டத்தை அமுலாக்க, ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும்.

அத்தகைய சூழலில், அந்த சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும்படி எம்.பி.க்களை வலியுறுத்துவேன் என்றார் அவர்.

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாமா, அல்லது வெளியேறலாமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான பொது வாக்கெடுப்பு அந்த நாட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு ஆதரவாக 51.9 சதவீதத்தினரும், யூனியனில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்று 48.1 சதவீத்தினரும் வாக்களித்தனர்.

இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முதல் நாடாக பிரிட்டன் ஆகும் நிலை ஏற்பட்டது.

எனினும் அந்தப் பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கவே பெரும்பாலான ஸ்கொட்லாந்து மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

ஸ்கொட்லாந்து பகுதியில் 62 சதவீதத்தினர் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கவும், 38 சதவீதத்தினர் மட்டுமே வெளியேறுவதற்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இணையதள கருத்துக் கணிப்பு:

ஐரோப்பிய யூனியன் தொடர்பான பொது வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனுடன் ஸ்கொட்லாந்து இணைந்திருக்கலாமா, விடுதலை பெறலாமா என்பது குறித்த கருத்துக் கணிப்பு மூலம் நடத்தப்பட்டது.

இதில் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஸ்கொட்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பிரிட்டனின் அங்கமாக இருப்பதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

எனினும், தற்போதைய சூழல் முற்றிலும் மாறியுள்ளதால் புதிய பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியமாகியுள்ளது என்று ஸ்கொட்லாந்து பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜன் கூறினார்.

பிரிட்டன் முடியாட்சியின் கீழ் செயல்படும் ஸ்காட்லாந்தின் விடுதலையை வலியுறுத்தும் ஸ்கொட்லாந்து தேசியவாதக் கட்சியைச் சேர்ந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE