சர்வதேசம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் வெற்றுக்கோரிக்கைகளுடன் தமிழர் தரப்பு- இரா.துரைரத்தினம்

309

 

kajendraஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும் காலத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஜெனிவா முன்றலில் ஊர்வலத்தை நடத்துவது வழக்கமாகும்.

இம்முறையும் கடந்த திங்கட்கிழமை ஜெனிவா தொடரூந்து நிலையத்திலிருந்து ஐ.நா.மனித உரிமை பேரவை அலுவலகத்திற்கு முன்னால் இருக்கும் மூன்று கால் கதிரை அமைந்திருக்கும் மைதானம் வரை ஊர்வலம் நடைபெற்று அங்கு கூட்டம் நடைபெற்றது.

2009ஆம் ஆண்டுவரை ஜெனிவா ஊர்வலம் என்பது சகலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்று வந்தது. சுவிட்சர்லாந்திலிருந்து மட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலைமை மாறி தற்போது ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் ஊர்வலமாக மாறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊர்வலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தையும் புலிக்கொடியையும் தாங்கி வருவது பயங்கரவாதிகள் நடத்தும் ஊர்வலம் என்ற முத்திரையை குத்தி விடும். எனவே இந்த அடையாளங்கள் இன்றி பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நடத்தும் ஊர்வலமாக கோரிக்கைகளாக இதை மாற்ற வேண்டும் என்று சிலர் முன்வைக்கும் வாதங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் புலிக்கொடிகளுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்திற்குமே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.

இது தவிர இத்தகைய ஊர்வலங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இத்தகைய ஊர்வலங்களுக்கு சென்றால் தாம் இலங்கைக்கு விடுமுறைக்கு செல்லும் போது பிரச்சினை ஏற்படலாம் என்ற எண்ணத்தில் இவற்றை தவிர்ப்பவர்களும் இருக்கி;றார்கள். இந்த ஊர்வலங்களில் சென்று புலிக்கொடிகளை தாங்கியவாறு படத்தை எடுத்தால் தமது அகதி தஞ்சக்கோரிக்கைக்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்திலும் சில இளைஞர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது.

ஜெனிவாவில் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜெனிவா முன்றலில் தினசரி ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் கவனஈர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

திபெத்தியர்கள், குர்திஸ் இனத்தவர்கள், என பல்வேறு சமூகத்தினர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். திபெத்தியர்களின் போராட்டத்தில் 10 திபெத்தியர்கள் நின்றால் அதில் 100 சுவிஸ் நாட்டவர் அல்லது ஐரோப்பிய நாட்டவர்கள் நிற்பார்கள். ஆனால் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களில் தனியே தமிழர்கள் மட்டும் தான் கலந்து கொள்வார்கள். இதுவும் தமிழர்களின் போராட்டத்தின் பலவீனத்தின் ஒரு பக்கம் தான்.

ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடைபெற்று வரும் சமகாலத்தில் மனித உரிமை பேரவையின் பிரதான மண்டபத்திலும் பக்க அறைகளிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த பக்க அறை ஒன்றில் நடைபெற்ற கூட்டம் ஒன்றை வைத்துதான் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகை ஒன்று வேடிக்கையான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐ.நாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அங்கீகாரம் என்ற தலைப்பில் அச்செய்தி அமைந்திருந்தது.

உண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற உருத்திரகுமாரன் தலைமையிலான அமைப்பு ஐ.நா.மனித உரிமை பேரவையில் பதிவு செய்யப்படவில்லை.
ஈழத்தமிழரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற ஈழத்தமிழர் அமைப்புக்கள் எவையும் ஐ.நா.வில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்ல. அவர்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் பெயர்களில் மண்டபங்களை ஒதுக்கீடு செய்தே கூட்டங்களை நடத்தி வருகின்றன.

பக்க அறைகளில் நடத்தப்படும் கூட்டங்கள் பெரிய அளவில் இராஜதந்திர ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்வதற்கு இல்லை. பக்க அறைகளில் அரசுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பெரிய அமைப்புக்கள் நடத்தும் கூட்டங்களுக்கே வெளிநாட்டு இராஜதந்திரிக்கள் சமூகமளிப்பார்கள்.

சில தமிழர் அமைப்புக்களால் நடத்தப்படும் கூட்டங்களில் உரையாற்றுபவர்களும் தமிழர்கள் தான், பார்வையாளர்களும் தமிழர்கள் தான்.

இலங்கையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், கோகிலவாணி, ரெலோ இயக்கத்தை சேர்ந்த சிவாஜிலிங்கம், போன்றவர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த நிமல்கா பெர்னாண்டோ, நளினி இரத்தினராசா, ருக்கி பெனாண்டோ ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மைய பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன், உட்பட நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், பிரித்தானிய தமிழர் பேரவை பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர றோ உளவு அமைப்புக்கு உளவு பார்க்கும் சிலர் தமிழ் நாட்டிலிருந்தும் சிறிலங்கா உளவுத்துறைக்கு உளவு பார்க்கும் சில தமிழர்களும் சிங்களவர்களும் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு வந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் ஈழத்தமிழர்களுக்காக பரிந்து பேசுவது போலவும் தாமே தமிழீழத்தை பெற்றுக்கொடுப்போம் என பேசுவதையும் பார்த்து ஏமாந்து போகும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலரும் இருக்கி;றார்கள்.

1980களில் தமிழீழத்தை பெற்றுத்தருவோம் என கூறி இந்தியாவின் றோ அமைப்பு இலங்கையில் உருவான தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களையும் வழங்கின. இந்திய றோ அமைப்பு ஈழத்தை பெற்றுத்தருவார்கள் என தமிழர் அமைப்புக்கள் நம்பிய காலமும் உண்டு. ஆனால் பிற்காலத்தில் இந்தியாவும் அதன் உளவு அமைப்புக்களும் தமது சுயரூபத்தை காட்டின.

அதேபோன்றுதான் றோ அமைப்பின் உளவாளிகளாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்றுக்கொடுப்போம் என்பது போல பேசி வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒருவர் பக்க அறை ஒன்றில் பேசும் போது தமிழ் ஈழ பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழீழ பிரகடனம் என்பதும் மீண்டும் ஆயுதப்போராட்டம் என்பதும் இலங்கையில் உள்ள தமி;ழ் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளும் அழிவுக்கும் தள்ளும் என தெரிந்திருந்தும் இந்தியர்கள் சிலர் இந்த நெருக்கடிக்குள் ஈழத்தமிழர்களை தள்ளுவதில் அலாதி பிரியம் கொண்டு செயல்படுகின்றனர்.

இது தவிர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பக்க அறைகளில் ஆக்கபூர்வமான கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

ஐ.நா.மனித உரிமை பேரவையின் பக்க அறையில் வியாழக்கிழமை மாலை சர்வதேச சமாதான காரியாலயம் இலங்கை பற்றி அரசசார்பற்ற நிறுவனங்களின் பார்வை என்ற தலைப்பில் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தன.

இக்கூட்டத்திற்கு ஐ.நா செயற்பாடுகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த அமெரிக்காவை சேர்ந்த கலாநிதி சாள்ஸ் கிறேவ் தலைமை தாங்கினார்.HRC briefing 20 June5

இக்கூட்டத்தின் பேச்சாளர்களாக, பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த டியேற்றி மக்கோணால் இலங்கையிலிருந்து வருகை தந்த நிமல்கா பெர்னாண்டோ, பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நான்கு நாடுகளை சேர்ந்த தூதரக இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு ஐ.நா.மனித உரிமை சபையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேச்சாளர்கள் விபரித்தனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலாநிதி சாள்ஸ் கிறேவ் இனஅழிப்பு என்ற விடயத்தை வெறும் பேச்சளவில் சொல்லாமல் சட்டரீதியாக அதை நிரூபிக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணாண்டோ இலங்கையின் அண்மைக்கால செயல்பாடுகள் பற்றியும் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கமும் இழுத்தடிப்பு செய்வதாக குற்றம் சாட்டினார். உண்மையான போர்க்குற்றவாளிகள் மகிந்த ராசபக்சவும் கோதபாய ராசபக்சவும் தான். ஆனால் அவர்கள் மீதான விசாரணை நடைபெறுமா என்பது சந்தேகம் தான் என நிமல்கா பெர்ணாண்டோ தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமை கூட்டத்திற்கு இலங்கையிலிருந்து பலர் வருகின்றனர். இவர்கள் இலங்கையில் மனித உரிமை விடயங்களில் தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழர் மனித உரிமை மைய பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் உரையாற்றுகையில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் எவ்வாறு இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டது என்பதை விபரித்து இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற பதம் இடம்பெறுவதற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்கவில்லை என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை அவர்களின் செயல்பாடுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஜனாதிபதி தெற்கில் ஒன்றை சொல்கிறார் வடக்கில் ஒன்றை சொல்கிறார், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேசத்திடம் ஒன்றை சொல்கிறார். ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் ஒன்றை சொல்கிறார். எனவே தற்போதைய அரசாங்கத்திற்குள் கூட ஒத்த கருத்து கிடையாது என தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரதான மண்டபத்தில் இதுவரை இலங்கை பிரச்சினை முக்கியத்துவம் பெறாவிட்டாலும் எதிர்வரும் 29ஆம் திகதி ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் அல்.ஹசன் வெளியிடப்போகும் வாய்மொழி மூல அறிக்கை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லாத விடயங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

எதிர்வரும் 29ஆம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் {ஹசேன், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டிய விடயங்களைச் சுட்டிக்காட்டி, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

போரம் ஏசியா, பிரான்சிஸ்கன்ஸ் இன்ரநசனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக ஜூரிகள் ஆணைக்குழு, அனைத்துல வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான சர்வதேச அமைப்பு, அனைத்துலக மனித உரிமைகள் நிலையம் ஆகிய அமைப்புகள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள விடயங்கள், எந்தெந்த பரப்பில் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன, உடனடியாக நடைமுறைப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்ட வேண்டும் என அவை கோரியுள்ளன.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றும் அந்தக் கடிதத்தில், மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையில் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கும் வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தி சிறிலங்கா தரப்பு தற்போது ஜெனிவாவில் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 21, 22, 23, ஆகிய மூன்று தினங்களும் நோர்வேயில் நடைபெற்ற மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச மகாநாட்டில் கலந்து கொண்டிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் தற்போது ஜெனிவாவுக்கு வந்துள்ளனர்.

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையாளரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்திருக்கிறார். இது தவிர இராஜதந்திரிகளையும் சந்தித்து வருகிறார். நாளை திங்கட்கிழமை அல்லது மறுநாள் பக்க அறை ஒன்றில் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கும் இலங்கை தூதரகம் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாம் மேற்கொண்டு வரும் வேலைகள் பற்றி இராஜதந்திரிகளுக்கு விளக்கும் வகையில் சிறிலங்கா அரச தரப்பு இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில் அண்மைக்காலத்தில் விழித்தெழுந்தது போல சில துரும்புக்களை தூக்கி போட்டு விட்டு மலையை பிழந்து சாதனை படைத்திருக்கிறோம். பாதை அமைப்பதற்கு கால அவகாசம் தாருங்கள் என சிறிலங்கா அரச தரப்பு சர்வதேச இராஜதந்திரிகளிடம் வேண்டி நிற்கிறது.

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பான குரல்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இழுத்தடிப்பு ஏமாற்று வேலைகளை சர்வதேசத்திடம் தெளிவு படுத்துவதற்கு பதிலாக சர்வதேசம் செவி சாய்க்க விரும்பாத தமிழீழ பிரகடனம் என்றும் மீண்டும் ஆயுதப்போராட்டம் என்றும் கூறிவருவது சிறிலங்கா தரப்புக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது.

SHARE