வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் செயற்பாடு ஆரம்பம்

284

 

* வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் செயற்பாடு ஆரம்பம்
* ஜனவரியில் உள்ளக பொறிமுறை கட்டமைப்பு

இலங்கை இராணுவத்தினருக்கு தண்ட னை வழங்குவதாக நாம் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை. எமது இலக்கு இராணுவத்தை தண்டிப்பது அல்ல. மாறாக இராணுவத்தினருக்கு தவறான உத்தரவு பிறப்பித்தவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவதாகுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதமளவில் கட்டமைக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பட ஆரம்பித்ததும் விசாரணைகளின் தன்மை அனைவருக்கும் புலப்படுமென்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் 2018 ஆம் ஆண்டளவில் அதனை முழுமைப்படுத்த முடியுமெனவும் அமைச்சர் சமரவீர கூறினார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 32 வது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றிருந்த அரசாங்கம், அங்கே இராணுவத்தினரை தண்டிப்பதாக வாக்குறுதி அளித்து வந்திருப்பதாக சிலர் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அங்கு நாம் இவ்வாறான எந்தவொரு வாக்குறுதியையும் வழங்கவில்லை. அதேநேரம், நாட்டின் கெளரவத்துக்கும் புகழுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இராணுவ வீரர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவதென்பது இலங்கைக்கு புதிது அல்ல.

மனம்பேரி நிகழ்வு மற்றும் கிருஷாந்தி கொலை வழக்கு தொடர்பில் குற்றம் இழைத்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டமை இதற்கான சிறந்த உதாரணமென்றும் அமைச்சர் சமரவீர சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் இராணுவ வீரர்கள் உலகம் முழுவதும் நற்பெயருடன் விளக்குபவர்கள். பல நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவத்தினர் பங்கெடுத்துள்ளனர். மீண்டும் இவர்களுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில அதிகாரிகளின் தவறான செயற்பாடுகளுக்காக நாம் ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்தையும் குற்றம்சுமத்த முடியாது.

ஒருசில அதிகாரிகள் யுத்த காலத்தில் குரூர மனப்பான்மையுடன் செயற்பட்டிருந்தாலும் அதன் பின்னணியில் வெறொருவரின் உத்தரவு இல்லாமல் அவர் அதனை செயற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. எனவே தவறிழைத்தவரிலும் தவறுக்கான உத்தரவு பிறப்பிதத்தவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன்னாள் நிறுத்துவதே முக்கியமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொறிமுறைகட்டமைப்பு

காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் ஸ்தாபிப்பது குறித்து விரைவில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்படும். இதனடிப்படையில் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் ஆரம்பமாகும். அடுத்த வருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறைக் கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

உள்ளக விசாரணைப் பொறிமுறை அடுத்த வருடம் முதல் செயற்பட ஆரம்பிக்கும்போது விசாரணைகளின் தன்மையை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

‘காணாமல் போதல்’ என்பது வடக்கிற்கு மட்டும் உரியதல்ல. இது வடக்கிற்கும் தெற்கிற்கும் பொதுவானது. தெற்கில் அதிகமானோர் காணாமல் போனதால் தான் எனக்கு அரசியலுக்குள் வர நேரிட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜெனீவா சென்றிருந்தபோது அங்கே அமர்வுக்கு அப்பால் தமிழ் டயஸ் போராக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர்களின் அடிப்படைவாத கருத்துக்களை நான் செவிமடுத்தேன். அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து உரையாடல் நிகழ்த்தியமைக்காக எமது அரசாங்கத்திற்கு அவர்கள் நன்றிகளைத் தெரிவித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக டயஸ் போரவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது பிரிட்டிஷ் பத்திரிகையொன்றில் ஆசியாவின் சுவிற்சர்லாந்து என இலங்கை குறிப்பிடப்பட்டிருந்தது. 1965 இல் சிங்கப்பூர் ஸ்தாபகர் லீகுவான்யூ தனது பிரதான குறிக்கோள் இலங்கையை முன்னேற்றுவது என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரே 1983 இல் எந்தவொரு நாடும் இலங்கையை பின்பற்றக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிதாக எழுந்த பாஷை பிரச்சினை அடிப்படைவாதிகளால் பாரிய யுத்தம் வரை கொண்டு செல்லப்பட்டது. முப்படையினரின் ஒத்துழைப்புடன் எல். ரீ.ரீ. ஈ. முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதும் சமாதானத்தை வெல்ல முடியாத நிலை உருவானது. இந்நிலைமையை மாற்றியமைக்கவே இருவேறு கட்சிகளைச் சேர்ந்த ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டுசேர்ந்து அரசாங்கம் அமைத்துள்ளார்கள் என்றும் ஊடகங்கள் தெரிவிப்பதுபோல் இவ்விருவருக்குமிடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகள் பின்வருமாறு:-

கேள்வி:- உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்குபற்றல் அவசியமா?

பதில்: தேவையான சந்தர்ப்பங்களில் உதவி பெறுவதில் தவறில்லை. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் மரண விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட்டது. சர்வதேச நீதிபதிக் குறித்து இரு தரப்பினர் கருத்துக்களை கொண்டுள்ளனர். அனைத்து கருத்துக்களையும் நாம் உள்வாங்கியபடி உள்ளோம்.

கேள்வி: ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளக பொறிமுறையினை ஏற்கனவே வடிவமைத்துள்ளார்களா?

பதில்: இல்லை. ஜனநாயக நாட்டில் அவர்களுக்கும் கருத்துகூறும் உரிமையுண்டு. அனைத்து கருத்துக்களும் பெரும்பான்மை பங்குதாரர்களின் விருப்பத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படும்.

கேள்வி: யுத்தத்தின்போது 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யப்பட்டனரா?

பதில்: இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதைக் கூறினாலும் ஒரு தரப்பினர் நம்பப்போவதில்லை. இதற்காகவே விசாரணைப் பொறிமுறையொன்று அவசியப்படுகிறது.

கேள்வி: டயஸ்போரா உங்கள் அழைப்பினை ஏற்றுக்கொண்டனரா?

பதில்: அழைப்பு விடுத்துள்ளேன். ஏற்பார்களா? எனத் தெரியவில்லை. அக்கறையின்மை, புரிந்துணர்வு இல்லாமை என்பவற்றுடன் சிலர் ஈழம் மீது கொண்ட அதீத பற்று காரணமாக தொடர்ந்தும் குருடர்களாகவே உள்ளனர்.

கேள்வி: தொடர்ச்சியாக இடம்பெற்ற ஐ. எஸ். ஐ. எஸ். தாக்குதல் இலங்கைக்கு அச்சுறுத்தலாகுமா?

பதில்: இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளேன். எமது புலனாய்வு பிரிவினர் இது குறித்து விழிப்புணர்வுடன் உள்ளனர். தற்சமயம் ஐ, எஸ். ஐ. எஸ். இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.

கேள்வி: இராணுவ பிரசன்னம் குறைக்கப்படுமா?

பதில்: வடக்கில் மட்டுமன்றி அனைத்து பகுதிகளுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும். ஏனைய நாடுகளில் போன்று இங்கும் இயல்பு நிலை கொண்டு வரப்படும் 2018 இல் இதனை முழுமையாக அமுல்படுத்தக் கூடியதாக இருக்கும்.

லக்ஷ்மி பரசுராமன்military

SHARE